தண்டையார்பேட்டை குடியிருப்பில் ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் அகற்ற அரசுக்கு ஐகோர்ட் கெடு

சென்னை: தண்டையார்பேட்டை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான குடியிருப்பில் உள்ள 1,700 ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை கடந்த இரண்டரை ஆண்டுகளாக அகற்றாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், 8 வார காலத்துக்குள் அவற்றை அப்புறப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான குடியிருப்பில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமானங்களை அகற்ற உத்தரவிடக் கோரி தூயமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘கடந்த 2022-ம் ஆண்டு நிலவரப்படி, இந்தப் பகுதியில் 1,700 ஆக்கிரமிப்பு கட்டுமானங்கள் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் உள்ள இந்த குடியிருப்புகளை இடித்துவிட்டு மீண்டும் புதிதாக குடியிருப்புகள் கட்ட திட்டமிட்ட போதும், அங்குள்ள குடியிருப்புவாசிகள் வீடுகளை காலி செய்ய மறுத்து வருவதால், அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. ஆக்கிரமிப்பு கட்டுமானங்கள் விரைவில் அகற்றப்படும்’ என தெரிவித்திருந்தார்.

இந்த அறிக்கையைப் படித்துப் பார்த்த நீதிபதிகள், “கடந்த 2022-ம் ஆண்டே 1,700 ஆக்கிரமிப்பு கட்டுமானங்கள் உள்ளதாக கூறியபோதிலும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவற்றை அகற்றாதது ஏன்?” என கேள்வி எழுப்பியதுடன், “அந்த ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது அவர்களின் கடமை தவறிய செயலை மட்டுமல்ல, அலட்சியப்போக்கையும் காட்டுகிறது” என அதிருப்தி தெரிவித்தனர்.

பின்னர் நீதிபதிகள், “இந்த 1,700 ஆக்கிரமிப்பு கட்டுமானங்களையும் 8 வார காலத்துக்குள் அகற்ற வேண்டும்” என தமிழக அரசுக்கும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டனர். மேலும், “ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க அதிகாரிகளுக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என சென்னை மாநகர காவல் ஆணையருக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.