பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய தீம் பார்க் உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. ஆனால், உலகிலேயே முதன் முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு தீம் பார்க்கான “மோர்கன் வொண்டர்லேண்ட்” (Morgan’s Wonderland) அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் செயல்பட்டு வருகிறது. தன்னுடைய மாற்றுத்திறனாளி மகள், மற்ற குழந்தைகள் போலவே விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தீம் பார்க்கை உருவாக்கி உள்ளார் கார்டன் ஹார்ட்மேன் என்னும் நபர். கடந்த 2010 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த தீம் பார்க் உலகிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கென தொடங்கப்பட்ட முதல் இலவச தீம் பார்க் என்ற சாதனையைப் படைத்துள்ளது. தற்பொழுது, மோர்கன் வொண்டர்லேண்ட் தீம் பார்க் மாற்றுத் திறனாளிகளுக்கென இலவசமாகச் செயல்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் அனைத்து விதமான ரைடுகளிலும் ஈடுபட வசதிகளைச் செய்து வைத்துள்ளது.
இந்த தீம் பார்க்கை கார்டன் ஹார்ட்மேன் தொடங்க ஒரு சுவாரஸ்யமான பின்னணி ஒன்று உள்ளது, கார்டன் ஹார்ட்மேன் மகளான மோர்கன் சிறு வயதில் இருந்தே அறிவாற்றல் குறைவு மற்றும் இயலாமை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். ஒரு முறை ஆண்டு விடுமுறையில் குடும்பத்துடன் கார்டன் ஹார்ட்மேன் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது அவருடைய மகள் மோர்கன் நீச்சல் குளத்தில் மற்ற குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்து அவர்களுடன் தானும் விளையாட வேண்டும் என கேட்டு உள்ளார். மாற்றுத்திறனாளி மோர்கன் மற்ற குழந்தைகளுடன் விளையாட நீச்சல் குளத்திற்கு வருவதைப் பார்த்த அனைவரும் நீச்சல் குளத்திலிருந்து விலகிச் சென்று உள்ளனர். இது மோர்களின் தந்தை கார்டன் ஹார்ட்மேனை பெரிதும் பாதித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளும் மற்றவர்களைப் போலவே பொது வெளியில் நடத்தப்பட வேண்டும் என நினைத்தார் அவர். அதுமட்டுமல்லாமல் அனைவருக்குமான ஒரு தீம் பார்க்கை உண்டாக்க வேண்டும் என நினைத்தார் அவர். அதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என முடிவெடுத்தார். அதன்படி 2010 ஆம் ஆண்டில் மார்ச் 3 ஆம் தேதி 25 ஏக்கர் பரப்பளவில் மோர்கன் வொண்டர்லேண்ட் என்னும் பெயரில் ஒரு தீம் பார்க்கை தொடங்கினார் கார்டன் ஹார்ட்மேன்.
மோர்கன் வொண்டர்லேண்ட் முழுவதும் லாபம் நோக்கமற்ற முறையில் செயல்படுகிறது. இந்த தீம் பார்க்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் இலவசமாக அனுமதிக்கப்படுகிறது. மேலும் இந்த தீம் பார்க்கில் மற்ற பயனர்கள் மூலம் கிடைக்கும் வருமானம் மோர்கன் வொண்டர்லேண்ட் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த தீம் பார்க் முழுவதும் மோர்கன் தொண்டு நிறுவனம் கீழ் செயல்படுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகள் எனக் குறிப்பிடாமல் “சிறப்புக் கவனம் தேவை உடையோர்” என அந்த தீம் பார்க்கில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அவர்கள் வந்து செல்ல அனைத்து பகுதிகளுக்கும் வீல் சேர் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அவர்களுக்கு உண்டான வீல் சேர் வசதியை இலவசமாக வழங்குகிறது தீம் பார்க் நிர்வாகம்.
மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களைப் போலவே இங்கு அனைத்து விதமான சாகசத்திலும் பொழுதுபோக்கிலும் ஈடுபடும் வகையில் ராட்சத ரங்கராட்டினம், ஜிப் லைன் போன்றவற்றில் பயணிக்க அனைத்து பகுதிகளிலும் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அவர்கள் தண்ணீரில் விளையாடுவதற்காக மோர்கன் வொண்டர்லேண்ட் தீம் பார்க் நிர்வாகத்தால் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்ட நீர் புகா வீல் சேர் வசதி இலவசமாக ஏற்படுத்தி தரப்படுகிறது. இந்த தீம் பார்க் தொடங்கப்பட்டதில் இருந்து 2 மில்லியன் பயனர்கள் இந்த தீம் பார்க்கிற்கு வருகை தந்துள்ளனர். இந்த பகுதியைப் பெருமைப்படுத்தும் விதமாக 2018 ஆம் ஆண்டு டைம்ஸ் பத்திரிக்கை “உலகின் தலைசிறந்த இடம்” என்ற விருதை கொடுத்துள்ளது.
தற்போது இந்த தீம் பார்க்கின் ஒவ்வொரு பகுதியையும் சில தனியார் நிறுவனங்கள் சேவை மனப்பான்மையுடன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு தங்களுடைய சொந்த செலவில் மேம்படுத்தி வருகின்றன.