ஸ்ரீநகர்: காஷ்மீரில் சமீபத்தில் நடைபெற்ற 2 தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை தேடும் பணியை 6 மாவட்டங்களில் பாதுகாப்பு படையினரும், உளவுப்பிரிவினரும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் ஸ்ரீநகர் – லே தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதையில் பணியாற்றிய 6 தொழிலாளர்கள், மற்றும் மருத்துவரை தீவிரவாதிகள் கடந்த 20-ம் தேதி சுட்டுக் கொன்றனர். இதையடுத்து பாராமுல்லாவில் ராணுவ வாகனம் மீது கடந்த 24-ம் தேதி நடைபெற்ற தாக்குதலில் 2 வீரர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இதனால் காஷ்மீரில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தவும், இரவு ரோந்து பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபடவும் காஷ்மீர் துணை நிலை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டார்.
இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளை ஸ்ரீநகர், கந்தர்பால், புல்வாமா, அனந்நாக், புத்காம், மற்றும் குல்காம் ஆகிய காஷ்மீரின் 6 மாவட்டங்களில் தேடும் பணியை பாதுகாப்பு படையினரும், காஷ்மீர் உளவுப் பிரிவினரும் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த தேடுதல் பணியின் போது ‘தெக்ரிக் லபைக் யா முஸ்லிம்’ என்ற புதிய தீவிரவாத அமைப்பு உருவாக்கப்பட்டு அதற்கு ஆட்களை சேர்க்கும் முயற்சி நடைபெற்றது கண்டறியப்பட்டது. லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் துணை அமைப்பாக கருதப்படும் இந்த அமைப்பை பாகிஸ்தான் தீவிரவாதி பாபா ஹமாஸ் ஏற்படுத்த முயற்சித்துள்ளார். அதை பாதுகாப்பு படையினர் முறியடித்துள்ளனர்.