புதுடெல்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் என்று உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
கல்வி, வேலைவாய்ப்புகளுக் காக அமெரிக்கா செல்ல வேண்டும் என்று உலகளவில் ஏராளமானோர் ஆர்வமாக உள்ளனர். அதேநேரத் தில் சட்டவிரோதமாக அமெரிக்கா வுக்குள் நுழைய தொடர்ந்து முயற்சி செய்பவர்களின் எண்ணிக் கையும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக கொலம்பியா, ஈக்குவடார், பெரு, எகிப்து, மோரிடோனியா, செனகல், உஸ்பெகிஸ்தான், சீனா, இந்தியா உட்படபல நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய பலர் முயற்சிக்கின்றனர். அவர்களை தடுத்து நிறுத்த அமெரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை கடந்த 22-ம் தேதி திருப்பி அனுப்பியதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை நேற்று தெரிவித்தது. ஆனால், இந்தியர்கள் எத்தனை பேர் திருப்பி அனுப்பப்பட்டனர் என்ற தகவலை தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை துணை செயலர் பொறுப்பு வகிக்கும் மூத்த அதிகாரி கிறிஸ்டி ஏ கேன்கலோ கூறும்போது, ‘‘சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்த இந்தியர்களை கடந்த 22-ம் தேதி வாடகை விமானத்தை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தோம். இந்த நடவடிக்கை இந்திய அரசின் ஒத்துழைப்புடன்தான் எடுக்கப்பட்டது’’ என்றார்.
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அமெரிக்காவுக்கு வர சட்டவழிகளைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ஆட்களை கடத்திவருபவர்கள் சொல்லும் வார்த்தைகளை நம்பாதீர்கள். நடப்பு 2024 நிதி ஆண்டில் 145 நாடுகளை சேர்ந்த ஒரு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை அமெரிக்க அரசுஅவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி உள்ளது. இதற்காக 495 விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன’’ என்று எச்சரித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் அமெரிக்க எல்லை தொடர்பான அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்தது. அதன்பின், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. துறைமுகங்கள், எல்லைப் பகுதிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அமெரிக்காவின் தென் மேற்கு எல்லைப் பகுதியில் சட்டவிரோதமாக ஊடுருவல் நடப்பது 55 சதவீதம் குறைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.