‘மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று ஏமாற்றுகிறார்கள்’ – திமுகவை நேரடியாக விமர்சித்த விஜய்

விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் ‘வெற்றிக் கொள்கைத் திருவிழா’ என்ற பெயரில் இன்று (அக்.27) மாலை நடைபெற்றது.

மாலை 3 மணிக்கு தொடங்கிய மாநாட்டில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு மேடைக்கு வந்த கட்சியின் தலைவர் விஜய் மேடைக்கு உற்சாகமாக வந்து தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். பின்னர் 800 மீட்டர் நீளமுள்ள ரேம்பில் நடந்து வந்தார். பின்னர் ரிமோட் மூலம் 100 அடி உயர கொடி கம்பத்தில் கட்சி கொடியேற்றி வைத்தார்.

பின்னர் அவருக்கு பகவத் கீதை, அரசியல் சாசனம், திருக்குரான்,பைபிள் ஆகியவை கட்சி நிர்வாகிகளால் வழங்கப்பட்டது. தொடர்ந்து 5.33 மணிக்கு தலைவர் விஜய் தன் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஷோபாவிடம் ஆசி பெற்ற பின் கொள்கையுரை ஆற்றினார்.

விஜய் பேசியதாவது: ஒரு குழந்தை முதன்முதல் அம்மா என கூறும்போது ஏற்படும் சிலிர்ப்பு எப்படி என அம்மாவால் சொல்ல முடியும், குழந்தையால் எப்படி சொல்ல முடியும். அந்த சிலிர்ப்பை சொல்ல முடியாது இல்லையா அப்படி ஒரு உணர்வோடு நிற்கிறேன். அப்போது ஒரு பாம்பு வந்து நின்றால், அக்குழந்தை பாம்பை பார்த்து சிரித்துகொண்டே தன் கையில் பிடித்து விளையாடும். பாசமே தெரியாத குழந்தைக்கு பயம் மட்டும் எப்படி தெரியும். அந்த பாம்பு அரசியல். அந்த பாம்பை பிடித்து நான் விளையாட ஆரம்பிப்பதுள்ளேன்.

அரசியலுக்கு நாம புதுசு என்பது மற்றவர்கள் கமெண்ட். ஆனால் அரசியலை சிரித்துக் கொண்டே எதிர்கொள்வது நம் ஸ்டைல். அரசியலில் கவனமாகத்தான் களமாட வேண்டும். கட்சி நிர்வாகிகளின் பெயரை சொல்லி அவர்களே, அவர்களே என்று ஏன் அழைக்க வேண்டும்? இங்கு எல்லோரும் சமம்தான். ஒட்டுமொத்தமாக உங்கள் எல்லோருக்கும் என் உயிர் வணக்கங்கள்.

அரசியல் என்றால் கோபமாக கொந்தளிப்பது என்பதைவிட்டு விட்டு பேச வந்த விஷயத்திற்கு வருவோம், அறிவியலும் தொழில் நுட்பம் மட்டும் மாறவேண்டுமா? அரசியலும் மாற வேண்டும். நான் புள்ளிவிவர புலியாக கதறப்போவதே இல்லை. அரசியல்வாதிகளைப் பற்றி பேசப்போவதும் இல்லை. மொத்தமாக கண்ணை மூடிக்கொள்ளப் போவதும் இல்லை.

இப்போது என்ன பிரச்சினை, அதை எப்படி தீர்ப்பது என்று சொன்னாலே நம்மீது நம்பிக்கை வரும். நம் கொள்கைகளை மக்களிடம் சொல்ல வேண்டும். நம் கொள்கைகளின் அடையாளமாக மாறிய பெரியார், நாங்கள் அவர் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை கையில் எடுக்கப் போவதில்லை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதே நம் கொள்கை. அடுத்து காமராஜர், அவர் நேர்மையான நிர்வாகம் கொடுத்தவர், அம்பேத்கர் அரசியல் சாசனத்தை உருவாக்கியவர். வகுப்புவாத பிரதிநிதித்துவத்தை உருவாக்கியவர். பெண்களை கொள்கை தலைவராக ஏற்றது தவெகதான். அப்படி இரு பெண்களில் ஒருவர் வேலு நாச்சியார், மற்றொருவர் அஞ்சலை அம்மாள். இவர்கள்தான் நம் கொள்கை தலைவர்கள். நம்மை யாரும் விசிலடிச்சான் குஞ்சு என சொல்லாமல் வேகமானவர்கள், விவேகமானவர்கள் என சொல்ல வைக்க சொல்வது அல்ல, செயல், செயல் இதுதான். நாம் நம் கொள்கைகளை செய்து முடிப்போம், அதுவரை நெருப்பாக இருப்போம்.

நமக்கெதுக்கு அரசியல் என நானும் நினைத்தேன். திரைப்படங்களில் நடித்து நாம் மட்டும் சுகமாக இருப்பது சுயநலமில்லையா?. நமக்கு இந்த வாழ்க்கையை கொடுத்த மக்களுக்கு என்ன செய்யப்போகிறோம் என யோசித்தபோது கிடைத்த விடைதான் அரசியல். இனி எதைப்பற்றியும் யோசிப்பதில்லை. ஆனால் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் யோசித்து வைக்க வேண்டும். நம் நிலையான நிலைப்பாட்டை தெளிவாக சொல்லிவிட்டால் நம் எதிரிகள் நம் கண்ணுக்கு முன் நிற்பார்கள். சமதர்ம கொள்கையை கையில் எடுத்தவுடன் இங்கு கொஞ்சம் கதறல் சத்தம் கேட்டது. அது இனி சப்தமாக கேட்கும். பிளவுவாத சித்தாந்தம் மட்டுமே நமக்கு எதிரியா? ஊழல் மலிந்த கலாச்சாரத்தை ஒழித்தாக வேண்டும். பிளவுவாத சக்திகளை எளிதில் கண்டுபிடித்து விடலாம். ஆனால் ஊழலை கண்டுபிடிக்கவே முடியாது. அது கருத்தியல் பேசி கொள்கை நாடகம் போடும். அந்த கபடதாரிகள்தான் இப்போது நம்மை ஆண்டு கொண்டுள்ளனர்.

யார் ஆட்சிக்கு வரவேண்டும். வரக்கூடாது என்று நம் மக்களுக்கு தெளிவாக தெரியும் . சாதி அமைதியாக இருக்கும். அதை வைத்து அரசியல் செய்ய முடியாது. மகத்தான அரசியல் மக்களுடன் இருப்பதுதான். சோறு சாப்பிட்டால்தான் பசியாறும். சோறு என்ற சொல்லால் பசியாறாது. புது மொழியாக முடிந்தவர்கள் மீன்பிடித்து வாழட்டும், முடியாதவர்களுக்கு நாம் மீன்பிடித்து கொடுப்போம். எங்கள் அரசியல் கொள்கை, நிலைப்பாடு யதார்த்தமாக இருக்க வேண்டும். நான் எக்ஸ்ட்ரா லக்கேஜாக வரவில்லை. தமிழகத்தை மாற்றும் முதன்மை சக்தியாக வரவேண்டும். ஒரு முடிவோடு வந்துள்ளேன். இனி திரும்பப் போவதில்லை.

இது நாம் எடுத்த முடிவு. அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு எதிரிகளை அடிபணிய வைக்கும் கூட்டம் அல்ல. ஏ டீம், பி டீம் என பொய்ப் பிரச்சாரம் செய்து வீழ்த்த முடியாது. உலகம் முழுவதும் நம் வகையறா உள்ளனர். நம் எதிரிகளை ஜனநாயக ரீதியில் 2026-ம் ஆண்டு தேர்தலில் ஒற்றை விரலில் அழுத்தும் வாக்குகள் அணுகுண்டாக விழும். யார் அரசியலுக்கு வந்தாலும் ஒரு குறிப்பிட்ட வண்ணத்தை அவர்கள் மேல் பூசி விடுகிறார்கள். ஆனால் இவர்கள் தேர்தல் நேரத்தில் அறிக்கை விட்டுவிட்டு, பாசிசம் பாசிசம் என்று கூறுகிறார்கள். அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் யார். மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று ஏமாற்றுகிறார்கள்.

எங்கள் கட்சி வண்ணத்தை தவிர வேறு வண்ணத்தை பூச முடியாது. திராவிட மாடல் என கூறி கொள்ளை அடிக்கும் கூட்டம் நம் எதிரி. திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் பிரித்து பார்க்கப் போவதில்லை. மதசார்ப்பற்ற சமூக நீதி கொள்கையை முன்னிருத்தி செயல்பட உள்ளோம். எங்கள் அரசியல் பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கபோவது பெண்கள். என் தங்கை வித்யா இறந்தபோது ஏற்பட்ட பாதிப்புதான் நீட்டால் அனிதா இறந்தபோது ஏற்பட்டது. என் அரசியல் குறிக்கோள் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கவேண்டும். இதை கொடுக்க முடியாத அரசு இருந்தால் என்ன போனால் என்ன?

இனி என்னை தளபதி என கூப்பிட்டாலும், கூத்தாடி கூத்தாடி என்று தான் கூப்பாடு போகுகிறார்கள். அவர்கள் என்னை மட்டுமல்ல எம்.ஜி.ஆரை, என்.டி.ஆரை கூப்பிட்டவர்கள். அவர்கள்தான் அம்மாநில மக்களின் மனதில் இன்னமும் வாழ்ந்து கொண்டுள்ளனர். திராவிட இயக்கம் வளர்ந்தது சினிமாவால்தான். கூத்து சத்தியத்தை, உண்மையை, உணர்வை, சோர்வில்லாமல் கொண்டாட்டமாக பேசும். கூத்தாடியின் கோவத்தை புரிந்து கொள்ளமுடியாது. குறியீடாக மாறிய கூத்தாடியை மக்கள் கொண்டாடுவார்கள். அன்று கூத்து, இன்று சினிமாதான். என் சினிமா உச்சத்தை உதறிவிட்டு, உங்கள் விஜய்யாக வந்துள்ளேன்.

நம் செயல்திட்டங்களில் முக்கியமானது என்னவெனில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி, மருத்துவம், குடிநீர் கவனம் செலுத்தவேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். மக்களோடு மக்களாக நாம் களத்தில் இருக்கப்போகிறோம். நம்மை தனிப்பெரும்பான்மையோடு வரும் தேர்தலில் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள். நம் கொள்கைகளை ஏற்று வருபவர்களை ஏற்று ஆட்சி, அதிகாரத்தில் பங்களித்து அதிகாரப்பகிர்வு செய்யப்படும். நல்லதே நடக்கும், நம்பிக்கையோடு இருங்கள், வெற்றி நிச்சயம். இந்த விஜய் ஏன் யார் பெயரையும் வெளிப்படையாக சொல்லாமல் விட்டதற்கு காரணம் என்னவெனில் யாரையும் தாக்கி, தரக்குறைவாக பேச வரவில்லை. நாகரிகமான அரசியல் செய்யவே வந்துள்ளோம். எங்களின் அரசியல் ஆழமாக இருக்கும். இவ்வாறு விஜய் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.