விக்கிரவாண்டி: தொண்டர்கள் குவிந்து வருவதாலும், அதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுவதாலும், கடுமையான வெயில் வாட்டுவதாலும், உணவு, தண்ணீர் தட்டுப்பாடு ஆகியனவற்றைக் கருத்தில் கொண்டும் தவெக மாநாட்டை பகல் 3 மணிக்கே தொடங்க திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் இருந்தே இன்று அதிகாலை முதலே விக்கிரவாண்டிக்கு தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் காலை 11 மணியளவிலேயே மாநாட்டுத் திடலில் இருந்த பார்க்கிங் வசதி நிரம்பியது. இருப்பினும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இப்போது வரை தொண்டர்கள் வந்த வண்ணமே உள்ளனர்.
மாநாட்டுத் திடலில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டு அங்கிருந்து தொண்டர்கள் நடந்து வருகின்றனர்.
வி.சாலை பகுதிகளில் உள்ள அனைத்து உணவகங்களிலும் காலையிலேயே உணவு தீர்ந்துவிட்டதால் அப்பகுதியில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தண்ணீர் தட்டுப்பாடும் நிலவுவதாகத் தெரிகிறது.
இது போன்ற பல்வேறு நடைமுறைச் சிக்கல்களையும் கருத்தில் கொண்டு மாலை 6.00 மணிக்கு மாநாடு தொடங்கவிருந்த நிலையில் மாநாட்டை பகல் 3 மணிக்கே தொடங்க திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொண்டர்களை நீண்ட நேரம் காக்க வைக்க வேண்டாம் என்பதற்காக மாநாடு முன் கூட்டியே தொடங்கப்படுவதாகத் தெரிகிறது.
இந்த மாநாட்டில் விஜய் கல்வி, விவசாயம், பெண்கள் முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசுவார் எனக் கூறப்படுகிறது. விஜய்யின் மாநாட்டில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மயங்கி விழுந்த தொண்டர்: தவெக மாநாட்டுக்கு வந்திருந்த இளைஞர் ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து ஆன்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். இது போல் மாநாட்டுத் திடலில் ஆங்காங்கே பலரும் தண்ணீர் வசதியின்றி மயங்கி விழுந்தனர். பின்னர் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் அனைவருக்கும் தண்ணீர், பிஸ்கட் வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி மாநாட்டுப் பணியில் இருந்தவர்கள் தண்ணீர் பாட்டில்களை வழங்கினர்.
மாநாட்டுக்கு கைக்குழந்தைகள், முதியவர்களை அழைத்துவர வேண்டாம் என வலியுறுத்தி இருந்தும் கைக்குழந்தைகளுடன் நிறைய பெண்கள் வந்திருந்தனர். விஜய்யை பார்க்க வந்தோம், உள்ளேவிடாவிட்டால் தர்ணாவில் ஈடுபடுவோம் என்றனர்.
சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தவெக வாகனங்களை தவிர, மற்ற வாகனங்கள் மாற்று வழியில் அனுப்பப்படுகின்றன. செஞ்சி புறவழிச்சாலையில் இருந்து கனரக வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படுகின்றன.