20 years of Kolangal: “தேவயானியுடன் கொடைக்கானல் போனப்போ நடந்த சம்பவம்" – நெகிழும் நளினி

90ஸ் கிட்ஸ்களின் மறக்கமுடியாத சீரியல்ல விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்த கோலங்களுக்கு முக்கிய இடம் இருக்கும். சன் டிவியில் எத்தனை சீரியல்கள் வந்தாலும் சில சீரியல்கள் காலத்தால் அழிக்க முடியாதது.

அபி, ஆதி, அலமேலு, தொல்காப்பியன், பாஸ்கர், உஷா, கற்பகம், மனோ, ஆர்த்தி, ஆனந்தி, கார்த்திக், தில்லா, தோழர் என இன்றும் அந்தக் கதாபாத்திரங்களின் பெயர்கள் மனதில் நின்று பேசுகிறது. அப்போது முதல் இப்போதுவரை அனைத்துத் தரப்பு மக்களையும் ஈர்த்துவரும் மெகா சீரியலாகவே கோலங்கள் இருக்கிறது.

கோலங்கள் சீரியல்

இப்பாேதும்கூட இந்த சீரியல்களில் இருக்கும் காட்சிகள் ட்ரெண்டாகி வருகிறது. கோலங்கள் இயக்குநர் திருச்செல்வத்தை மக்கள் பார்க்கும் இடமெல்லாம், “மறுபடியும் கோலங்கள் இரண்டாவது பாகத்தை பார்க்க நாங்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறோம்…. சீக்கிரம் கோலங்கள் 2 எடுங்க” எனக் கேட்டுவருகின்றனர். சீரியல்கள் வரலாற்றிலேயே முக்கிய இடத்தைப் பெற்ற கோலங்கள் சீரியல், நவம்பர் 2003 முதல் டிசம்பர் 2009 வரை 1,533 எபிசோடுகள் ஒளிபரப்பப்பப்பட்டது. இந்த மாதத்துடன் கோலங்கள் சீரியல் வெளியாகி 20 வருடங்கள் ஆகிவிட்டது.

இந்தக் கோலங்கள் சீரியலில் முக்கியக் கதாபாத்திரங்களில் ஒன்று அலமேலு. அகல நெத்தியில பெரிய பொட்டுவச்சிட்டு, அகங்கார, பேராசை மாமியாரா,“அலமேலா கொக்கா…, ஹேய் இந்த அலமேலுகிட்ட வச்சிகிட்ட அவ்ளோதான்… அவளுக்கு தான் அழகுன்னு திமிரு” என அலமேலுவாக வாழ்ந்தவர்தான் நடிகை நளினி. கணவனை அவமானப்படுத்துவது, பணத்துக்காக மகனிடம் அண்டி வாழ்வது, மருமகளிடம் எரிந்து விழுவது, மகள்களிடம் கோபத்துடன் அன்பு காட்டுவது, கணவன் இறந்தபோது உருகி, வழிந்து காதலைக் கொட்டுவது என அத்தனை வகை நடிப்பையும் மிக இயல்பாய் நடித்திருப்பார்.

நடிகை நளினி

கோலங்கள் சீரியல் வெளியாகி இருபது ஆண்டுகள் முடிந்துவிட்டதையொட்டி நடிகை நளினியிடம் தொடர்புகொண்டு பேசினோம். ‘என்ன… கோலங்கள் வெளியாகி 20 வருஷம் ஆகிருச்சா… காலம் எவ்வளவு வேகமா போகுது…!’ என ஆச்சர்யத்துடன் பேசத் தொடங்கினார். “கோலங்கள் சீரியல் அப்போ மட்டும் இல்ல, இப்பவும் நிறைய பேர் பாக்குறாங்க. என்னோட மகள் இப்போ அந்த சீரியல் பார்த்து, என்னமா இப்படி நடிச்சிருக்கன்னு பாராட்டினா… கோலங்கள் சீரியல்ல என்னோட முதல் சீன் அபியை பொண்ணு பார்க்கப் போறதுதான்.

கோலங்கள் சீரியலிலிருந்து

எனக்கு அலமேலு கேரக்டர் பத்திலாம் எதுவும் தெரியாது. கதாநாயகியின் மாமியார் அப்படிதான் என்கிட்ட சொன்னாங்க. அதனால, நல்லா மேக்கப் பண்ணி, டிப்டாப்பா ஷூட்டிங் ஸ்பாட்ல போய் இறங்குனேன். அப்போ திருச்செல்வம் சார் என்கிட்ட வந்து தயங்கிகிட்டே நின்னாரு. என்னன்னு கேட்டா, ‘மேடம் இவ்ளோ மேக்கப் வேணாம்… கொஞ்சம் கம்மி பண்ணிக்கலாமே’னு சொன்னார். நான் கொஞ்சம் முகத்தையெல்லாம் தொடச்சி ‘இது ஒகேவா சார்’னு கேட்டேன்.’லிப்ஸ்டிக், கண் மை இதெல்லாம் கூட வேணாம் மேடம்’னு சொன்னார்.

எனக்கு ஒன்னும் புரியல… அவருக்கு என்னை எப்படி அலமேலுவா மாத்துறனு தெரியல… அப்போதான் ‘புருஷனை மதிக்காத, பேரசை படுற, இளம் வயசுல ஆசைப்பட்டதெல்லாம் அனுபவிக்க முடியாத, வரப்போற மருமகள் சம்பாத்தியம் மூலமா அந்த சந்தோஷத்தை அடைய நினைக்கிற ஒரு பெண்தான் அலமேலு…’ அப்படினு கேரக்டரை சொன்னார். நான் தேவயாணி மாமியார்… பணக்கார பெண்ணா இருப்பானுதான் நினைச்சேன். அதனாலதான் மேக்கப்போட வந்தேன்… இனி பாருங்க சார்னு, அதுக்கு அடுத்த நாள் ஷூட்ல ரேஷன் கடையில கொடுக்குற புடவை வாங்கி, மேக்கப் இல்லாம, ஒரே ஒரு பொட்டுமட்டும் வச்சிட்டு நடிக்கப்போனேன். அது அவருக்கு ரொம்பப் பிடிச்சுருச்சு.

நடிகை நளினி

அதே மாதிரி, அதுல இருக்கிற என்னோட நிறைய ஸ்டைல். மதுரைல இருந்த எங்க அம்மா, என்னோட கசின் வித்யான்னு ஒருத்தவங்க இருக்காங்க, அவங்க பேசும்போது கண்ணு, கை, கால் எல்லாமே சேர்ந்து பேசும். அவங்க ரெண்டுபேரும் அலமேலுவா மாறுனா எப்படி இருக்கும்னு உள்வாங்கி நடிச்சேன். ஷூட் நடந்த வீட்டின் ஓனர் அம்மாவின் சாயலும் அதில் உள்வாங்கி நடிச்சேன். இதைப் பார்த்து இயக்குநருக்கு ரொம்ப ஹாப்பி… அந்த அலமேலு கேரக்டருக்கு உயிர் கொடுத்ததுல முக்கியப் பங்கு வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் நித்யாம்மா. அவருக்கு இந்த நேரத்துல நன்றி சொல்லிக்கிறேன்.

கோலங்கள் நாங்க நடிக்கல அதுல வாழ்ந்தோம்.. அப்படிதான் சொல்லணும். அது எங்க வாழ்க்கை. டைரக்டர் ‘அம்மா உங்களை நினைச்சி எழுத அலமேலு பத்தி எழுத உட்கார்ந்தா அவ்ளோ டைலாக் வருது’னு சொல்வார். தேவயானி உண்மையிலேயே அப்போ என்னை ஒரு மாமியாராதான் நடந்ததுனாங்க. ஒரே ஒரு சம்பவம் சொல்றேன்.. கோலங்கள் சீரியல்ல புருஷன் பொண்டாட்டி ஹனிமூன் போகும்போது, குடும்பத்தோட போகலாம்னு ஒரு ஓட்ட வண்டியில கொடைக்கானல் மலை மேல ஏறுவோம். அங்க தான் ஷூட் நடந்துச்சு.

கணவர் ராஜகுமாரனுடன் நடிகை தேவயானி

அப்போ, மலைமேல ஒரு வீட்டுல தங்குனோம். அங்க எனக்கு தேவயானி, உண்மையிலேயே மாமியாருக்கு ஒரு மருமக எப்படி பணிவிடை பண்ணுவாங்களோ அப்படி என்னை கவனிச்சிக்கிட்டாங்க. ராஜகுமாரன் கோவிட் அப்போ எல்லாம் அடிக்கடி கால் பண்ணி, அம்மா மிளகு ரசம் வச்சி சாப்பிடுங்க, அது பண்ணுங்க, இது பண்ணுங்கன்னு சொல்லி விசாரிச்சுக்கிட்டே இருப்பார். அவர் எனக்கு மகன் மாதிரிதான். தேவயானி எனக்கு உண்மையான மருமக மாதிரிதான். என்னால இப்பவும் அந்த நினைவுகளை மறக்க முடியாது. இந்த நேரத்துல என் கூட நடிச்ச தேவயானிமா உள்ளிட்ட சக நடிகர்களுக்கும், இயக்குநருக்கும், என் நடிப்புக்கு உயிர் கொடுத்த நித்தியாவுக்கும் நன்றி சொல்லிக்கிறேன்.” என நெகிழ்ந்து பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.