Bala Couple Interview: “வாழ்க்கைத்துணை எந்த வயதிலும் தேவை" – பூரிப்புடன் புதுமாப்பிள்ளை பாலா

காவல்துறையின் திடீர் கைது, சிறையிலிருந்து வெளியானதும் திருமணம், அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தம் என வைரலாகிக்கொண்டிருக்கிறார் நடிகரும் இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியுமான பாலா.

அவரைச் சுற்றி நடப்பது என்ன? அவரது புதிய திருமண வாழ்க்கை எப்படி அமைந்தது என்று பாலாவிடமும் அவரது மனைவி கோகிலாவிடமும் பேசினேன்.

“கோகிலாவோட அன்பால என்னோட உடல்நலம் ரொம்பவே சூப்பரா இருக்கு. பழைய மாதிரி படங்களில் பிஸியா நடிச்சுட்டிருக்கேன். வாழ்க்கைத்துணை எந்த வயதிலும் தேவை. அதுவும் என்னை மாதிரி ஆபரேஷன் பண்ணப்பட்டவங்களுக்கு நிச்சயமாக கூட இருந்து அன்பு காட்டி அரவணைக்குற ஒரு வாழ்க்கைத்துணை தேவை. இந்தமாதிரி, சூழலில் எனக்கு துணை நிற்கும் என் ரசிகர்களுக்கு நன்றி !” – சந்தோஷப் பூரிப்புடன் பேசுகிறார் புதுமாப்பிள்ளை நடிகர் பாலா.

நடிகர் பாலா திருமணம்

“கோகிலாதான் இனிமே என் வாழ்க்கை. சின்ன வயசுல இருந்தே ஒன்சைடா என்னை லவ் பண்ணிக்கிட்டிருந்திருக்கா. ஆனா, இது எனக்கு தெரியாது. கோகிலா வேற யாருமில்ல. என்னோட சொந்த தாய்மாமா பொண்ணுதான். குழந்தையில தூக்கி வளர்த்த பொண்ணு. நம்பள இந்தளவுக்கு லவ் பண்ணியிருக்காங்கிறது தெரியாதில்லையா? அந்தமாதிரி கோணத்திலும் அவளை பாத்ததில்ல. மாமா பொண்ணுங்கிறதால அடிக்கடி, அவகிட்ட பேசுவேன். அப்படி, ஒருநாள் வீடியோ கால் பேசிக்கிட்டிருக்கும்போது “என்ன மாமா சோகமா இருக்கீங்க?”ன்னு கேட்டா. “எனக்குன்னு யாருமில்லம்மா”ன்னு சொன்னேன். உடனே, அவ பார்த்துக்கிட்டிருந்த பெரிய வேலையை தூக்கிப்போட்டுட்டு திருவண்ணாமலையிலிருந்து என்னைப் பார்த்துக்க ஓடிவந்துட்டா.

எனக்குக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கு. இது, சாதாரண ஆபரேஷன் கிடையாது. அப்படிப்பட்ட சூழலில், கடந்த ஒரு வருடமா என்னை முழுக்க முழுக்க அவதான் கூடவே இருந்து பார்த்துக்கிட்டா. சரியான நேரத்துக்கு மருந்து கொடுத்துக்கிட்டு, சாப்பாடு கொடுக்கிறதுன்னு ஒரு அம்மாவைப்போல பார்த்துக்கிட்டா” என்று மனைவி கோகிலா பற்றி மனம் நெகிழ்ந்து சொல்லிக்கொண்டிருக்கும்போதே வந்த கோகிலா பேசத் தொடங்கினார்.

“பாலா மாமாவை எனக்கு சின்ன வயசுல இருந்தே பிடிக்கும். ரொம்ப நேர்மையா இருப்பார். தப்புன்னா வெளிப்படையா பேசித் தட்டிக்கேட்பாரு. அவருடைய அதிரடியான குணங்கள் எனக்குப் பிடிக்கும். அதேமாதிரி, எல்லாருக்குமே உதவி பண்ணுவார். அதனால, அவரை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். அவருக்காகவே, நான் யாரையும் கல்யாணம்கூட பண்ணிக்கல.

பாலா – கோகிலா

மாமாவுக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சும் நான் ஃப்ரெண்ட்லியாத்தான் பேசுவேன். எந்த தப்பான நோக்கத்தோடும் பேசினது இல்ல. மாமா, தனக்குன்னு யாருமே இல்லைன்னு சொன்னப்போதான், இந்த நேரத்துல கண்டிப்பா அவர்கூட இருக்கணும்னு சொல்லிட்டு என் வேலையை விட்டுட்டு அவரைப்பார்த்துக்க போயிட்டேன். உண்மையை சொல்லணும்னா அவரை நான் பார்த்துக்கிறதுக்கு போனா, அவர்தான் என்னைப் பார்த்துக்கிட்டார். எனக்கு சமைச்சு கொடுக்கிறது, கேர் பண்ணிக்கிறதுன்னு ரொம்ப ரொம்ப லவ்வபிளா இருப்பார். அவர்கூட இருக்கும்போது அவரை நல்லா புரிஞ்சுக்கிட்டு இன்னும் லவ் கூடிடுச்சு.

பாலா மாமா மேல இருக்கிற லவ்வைப் பற்றி அத்தைக்கிட்ட சொன்னேன். அவங்க ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. அவங்களோட ஆசிர்வாதத்தோடு எங்க திருமணம் நடந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்” என்று உள்ளப்பூரிப்போடு பேச, மீண்டும் பாலா தொடர்கிறார், “இந்த கல்யாணம் நடக்க முழு காரணம் என் அம்மாதான். அவங்கதான், கோகிலாவை கல்யாணம் பண்ணிக்கோப்பான்னு வற்புறுத்தினாங்க. அம்மாவுக்கு இப்போ 74 வயசாகிடுச்சு. ஒருகட்டத்துல, அம்மாவோட பேச்சை கேட்கணும்னுமில்லையா? அதனால, நானும் சம்மதிச்சுட்டேன். இப்போ, உடல்நிலை நல்லா தேறிட்டேன். கோகிலா வரவே இன்னும் கூடுதல் தெம்பு வந்துடுச்சு. இப்போ, படங்களிலும் தொடர்ந்து நடிச்சுக்கிட்டிருக்கேன்” என்கிறவரிடம், “முதல் மனைவி புகார், காவல்துறைக் கைது நடவடிக்கை… உங்களது திருமணம் போன்றவை சர்ச்சை ஆகியிருக்கே?” என்றோம்,

bala kogila

“எல்லாமே எனக்கு எதிரா திட்டமிட்டு பரப்பப்படுற சதி. இது என்னோட ரெண்டாவது திருமணம். என்னோட முதல் மனைவி அம்ருதா, ரெண்டாவது மனைவி கோகிலா. இடையில எலிசெபத்கூட லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்புல இருந்தேன். அவங்க ரொம்ப அன்பானவங்க. ஆனா, சட்டப்படி திருமணம் செய்துக்கல. அப்படியிருக்க, நான் மூணாவது திருமணம், நாலாவது திருமணம் பண்ணிக்கிட்டேன்னெல்லாம் தப்பு தப்பான தகவல்களைப் பரப்புறாங்க. விட்டா… பத்து திருமணம் பண்ணிக்கிட்டேன்னெல்லாம் சொல்லுவாங்க போல. எதுவுமே உண்மை கிடையாது.

அதுவும், என் மகளுக்கும் எனக்கும் இருக்கிறது தனிப்பட்ட குடும்ப விஷயம். நான் அப்பன், அவ என்னோட பொண்ணு. என்னைப்பற்றி பேச அவளுக்கு எல்லா உரிமையும் இருக்கு. நான், ஹாஸ்பிடலில் கிடந்தபோது என்னை வந்து பார்த்தா. ரத்தபந்தம் இல்லாம எப்படிப்போகும்? ஆனா, அவளைப்பற்றி யாரும் தப்பா பேசாதீங்க. நான், தமிழன் -மலையாளி. எனக்கு எதிராக திட்டமிட்ட சதி நடந்துக்கிட்டிருக்கு. இதுல, அரசியல் சக்திகளும் செல்வாக்கு மிகுந்தவர்களும் எனக்கு எதிரா செயல்பட்டுக்கிட்டிருக்காங்க.

பாலா – கோகிலா திருமணம்

என்னோட உடல்நலம் எல்லோருக்கும் தெரியும். ஆனா, மஃப்டியில வந்த போலீஸு என்னை ஏதோ குற்றவாளி மாதிரி கைது பண்ணி கூட்டிக்கிட்டு போனாங்க. அதுவும், எங்க ஏரியா போலீஸ் வந்து கைது பண்ணல. இன்னொரு ஏரியாவிலிருந்து வந்து கைது பண்ணிட்டு போனாங்க. என்னை ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிக்கிட்டு போயிருந்திருக்கணும். 6 மணி நேரம் கழிச்சுதான் ஹாஸ்பிட்டலுக்கே கூட்டிக்கிட்டு போனாங்க. எந்த ரூல்ஸையும் ஃபாலோ பண்ணல. என்னோட ரசிகர்கள் என் பக்கம் இருக்காங்க. ஏன்னா, மக்களுக்கு அவ்வளவு உதவி செஞ்சுக்கிட்டிருக்கேன். என் ரூ.250 கோடி சொத்துக்களையெல்லாம் அபகரிக்க முயற்சி நடக்குது. இதையெல்லாம், மக்கள் புரிஞ்சுக்கணும். எல்லோரும் இத்தனை கல்யாணம் பண்றாங்கன்னு சொல்றாங்க. இப்பவும் சொல்றேன் வாழ்க்கைத்துணை எந்த வயதிலும் தேவை. தனிமை ரொம்ப கொடூரமானது” என்கிறார் அழுத்தமாக.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.