புதுடெல்லி: ரஷ்யாவின் கசான் நகரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நடத்திய பேச்சுவார்த்தை, இரு தரப்பு உறவில் ஏற்பட்டுள்ள சாதகமான முன்னேற்றத்தின் வெளிப்பாடு என்று இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அதன் விவரம்: “சமீபத்தில் ரஷ்யாவின் கசான் நகரில் நடந்து முடிந்த பிரிக்ஸ் உச்சி மாநாடு, வளரும் நாடுகளின் குரலை மேம்படுத்துவதற்கானது. ஏற்கெனவே உள்ள நிறுவப்பட்ட அமைப்புகள் மற்றும் தளங்களுக்கு மாற்றாக பேசுவது பிரிக்ஸ் கூட்டமைப்பின் நோக்கம் அல்ல. ஆனால், அந்த நிறுவப்பட்ட அமைப்புகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும், பல்வேறு சர்வதேசப் பிரச்சினைகளில் வளரும் நாடுகளுக்கும் சமமான மற்றும் வலுவான குரல் இருக்க வேண்டும் என்பதையும் உலகுக்கு உணர்த்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளோம்.
பாதுகாப்பு சார்ந்த பல்வேறு உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போதைய மோதல்களுக்கான மூல காரணங்களுக்குத் தீர்வு காண நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம். உக்ரைன் பற்றி மட்டுமே விவாதிக்கப்படவில்லை. மத்திய கிழக்கு, ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளின் நிலைமை போன்றவை பற்றியும் விவாதிக்கப்பட்டது” என்றார்.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இடையே இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதில் ரஷ்யா முக்கியப் பங்கு வகித்ததாகக் கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த டெனிஸ் அலிபோவ், “இந்தியா மற்றும் சீனத் தலைவர்களுக்கு இடையேயான சந்திப்பு கசானில் நடந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவில் இது மிகவும் சாதகமான முன்னேற்றமாகும். நான் புரிந்துகொண்ட வரையில், அந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்வதில் நாங்கள் (ரஷ்யா) எந்தப் பங்கையும் வகிக்கவில்லை” என்று கூறினார்.