திருப்பதியில் இஸ்கான் கோயில் மற்றும் வெளிநாட்டினர் தங்கும் நட்சத்திர ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வருகிறது. இதுகுறித்து திருப்பதி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வெளி நாடுகளிளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் திருப்பதி மற்றும் திருமலையில் தங்கி, சுவாமியை தரிசித்துவிட்டு செல்கின்றனர். தற்போது புரட்டாசி மாதமும் பிரம்மோற்சவ விழாவும் முடிந்துள்ளன. ஆயினும் ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் தினமும் அலைமோதிய வண்ணம் உள்ளது. இந்நிலையில், திருப்பதியில் உள்ள இஸ்கான் மற்றும் வராக சுவாமி கோயில்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக இ-மெயில் மூலம் மிரட்டல் வந்தது. ஆனால், திருப்பதியில் வராக சுவாமி கோயில் இல்லை என்பதால், திருப்பதி போலீஸார் உடனே இஸ்கான் கோயிலுக்கு மட்டும் சென்று, அங்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களை வெளியில் அனுப்பி, கோயில் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். பின்னர் இது வீண் புரளி என்பது தெரியவந்தது.
இதுபோன்று திருப்பதியில் வெளிநாட்டினர் தங்கும் சில நட்சத்திர ஓட்டல்களுக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் மூலம் வந்த வண்ணம் உள்ளது. இதனை யார், எங்கிருந்து, எதற்காக அனுப்புகிறார்கள் என போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விஜயவாடாவிலும்… நாடு முழுவதும் உள்ள விவந்தா குழும ஓட்டல்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, விஜயவாடாவில் உள்ள விவந்தா (தாஜ் கேட் வே) ஓட்டலில் கிருஷ்ண லங்கா போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர். பின்னர் இது வெறும் புரளி என அறிவிக்கப்பட்டது.