தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்துவதற்கான முறையான திட்டம் ஒன்றின் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுதினார்

முறையற்ற கொள்முதல் நடவடிக்கைகளை தடுத்து மோசடி மற்றும் ஊழலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – தேசிய கொள்முதல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவிப்பு.

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவை பலப்படுத்துவதற்கான முறையான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போதைய கொள்முதல் சட்டம் மற்றும் கொள்முதல் நடவடிக்கைகள் தொடர்பில் தேசிய கொள்முதல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விரிவாக கலந்துரையாடினார்.

தற்போதுள்ள சட்டம் மற்றும் வழிகாட்டுதல்களின்படி கொள்முதல் பணிகள் மேற்கொள்ளப்படாமை தொடர்பில் உள்ள சிக்கல்களை அதிகாரிகள் ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.

அரசாங்கத்தின் மூலதனச் செலவுகள் உட்பட அனைத்து செலவினங்களில் சுமார் 60% முறையான கொள்முதல் செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், ஆனால் மேற்படி கொள்முதல் செயல்பாட்டில் உள்ள குறைபாடுகள் காரணமாக, அரசாங்கத்திற்கு பாரிய நஷ்டம் ஏற்படுவதாகவும் தேசிய கொள்முதல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினர்.

இதன் காரணமாக மோசடி மற்றும் ஊழலுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.

கொள்முதல் செயல்பாட்டில் ஏற்படக்கூடிய தாமதங்கள், வெளிப்படைத்தன்மையற்ற நடைமுறைகள் மற்றும் செயற்திறன் இன்மை குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

முதலீட்டாளரால் தானாக முன்வந்து சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் (unsolicited proposals) மற்றும் அரச தனியார் பங்காளித்துவத்தின் கீழ் கொள்முதல் செயற்பாட்டில் உள்ள குறைபாடுகளை குறைப்பது குறித்தும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

கொள்முதல் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மேலும் விரிவுபடுத்தி கொள்முதல் திட்டங்களை முறைமைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, தேசிய கொள்முதல் ஆணைக்குழுவின் தலைவர் சுதர்மா கருணாரத்ன உள்ளிட்ட தேசிய கொள்முதல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.