யாழ்ப்பாண அரசியல் கட்சிகளின் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள், சுயேச்சைக்குழுத் தலைவர்களுடனான  கலந்துரையாடல்

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண அரசியல் கட்சிகளின் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள், சுயேச்சைக்குழுத் தலைவர்களுடனான  கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன்  தலைமையில் நேற்று  (27) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் இம்முறை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 23 அரசியல் கட்சிகளும் 21 சுயேச்சை குழுக்களும் போட்டியிடுகின்றன. 

06 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக 396 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 

வேட்பாளர்கள்  சட்டங்கள் மற்றும் சுற்றுநிருபத்திற்கு அமைய சனநாயக ரீதியில் பிரச்சார நடவடிக்கைகளை  எதுவிதமான முரண்பாடுகளுமின்றி ஆரோக்கியமாக மேற்கொள்வதனை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். 

யாழ்ப்பாண மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களுக்கும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்படவுள்ள 48 வாக்கெண்ணும் நிலையங்களுக்கும், 17 அஞ்சல் வாக்கெண்ணும் நிலையங்களுக்கும் மற்றும் பெறுபேறு தயாரித்து வெளியிடும் நிலையத்திற்கும் வேட்பாளர்களின் முகவர்களை சரியான பொறிமுறையூடாக சட்டத்தின் மூலம் நியமித்து நீதியாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெறுவதனை உறுதிப்படுத்துவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து  செயற்பட சிறப்பான ஒத்துழைப்பினை நல்குமாறு தெரிவத்தாட்சி அலுவலர் கேட்டுக்கொண்டார்.

இம் முறை மாவட்டச் செயலகத்தில் இயங்கும் முறைப்பாட்டுப் பிரிவுக்கு மேலதிகமாக சாவகச்சேரி, சண்டிலிப்பாய் மற்றும் பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிலும் முறைப்பாட்டுப் பிரிவுகள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.