காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் மூலம் தனக்கென ஒரு செட் ஆஃப் ஆல் டைம் ரசிகர்களைக் கொண்டிருப்பவர் இயக்குநர் செல்வராகவன்.
இவர் சமீப காலமாகவே, சமூக வலைதளங்களில் வாழ்க்கையைப் பற்றி அடிக்கடி வீடியோக்களைப் பதிவிட்டு வருகிறார். அந்த வரிசையில், மன அழுத்தம் தொடர்பாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை செல்வராகவன் இன்று பதிவிட்டிருக்கிறார்.
அந்த வீடியோவில் பேசும் செல்வராகவன், “வாழ்க்கைல உலகம் முழுக்க பாத்தாலும் கூட இந்த ஸ்டேஜ் தாண்டாதவங்க இருக்கவே முடியாது… மன அழுத்தம். நான் கூட ஏழு முறை தற்கொலைக்கு ட்ரை பண்ணிருக்கேன். இப்போ இல்ல, நெறைய வருஷத்துக்கு முன்னாடி. அப்போலாம் ஒவ்வொரு தடவையும், உள்ள ஆழமா வாய்ஸ் ஒன்னு கேக்கும், பொறுமையா இரு.. பொறுமையா இருன்னு கடவுள் எதோ சொல்ற மாதிரி இருக்குனு விட்ருவேன். அப்புறம், பத்து நாள் கழிச்சோ, ஆறு மாசம் கழிச்சோ, ஒரு வருஷம் கழிச்சோ கூட வாழ்க்கை மகிழ்ச்சியா அமைதியா இருக்கும்.
அன்னைக்கு போய் சேர்ந்திருந்தா இதெல்லாம் விட்ருப்போமே, எல்லா பிரச்னையும் போய்டுச்சே-னு தோணும். வாழ்க்கையே அதுதான். தற்கொலை பண்றவங்களோட எண்ணம், அடுத்த ஜென்மத்துலயாச்சும் எங்கயாவது நிம்மதியா பொறப்போம்னு. ஆனா கூவத்துல திரியுற பன்றியாவோ, காட்டுக்குள்ள பேயாவோ இருந்தீங்கன்னா… என்னனு யாருக்குத் தெரியும், செத்த பிறகு என்ன ஆவோம்னு. உள்ள அந்த வாய்ஸ் யார் சொல்றா… கடவுள்.
நீங்க என்ன பெயர் வேணும்னாலும் வச்சிக்கோங்க. அந்தக் குரல் உங்களுக்கு கேக்காம இருக்காது. மன அழுத்தம் இருந்தா, ஆமா நான் மன அழுத்தத்துல இருக்கேன்பா அதனால என்னனு இருந்தா, ஒரு வாரத்துல போய்டும். எந்த விஷயமா இருந்தாலும் அதுகூட சண்டை போடக்கூடாது. ஆமான்னு ஒத்துக்கிட்டு போனா அதுவே சரியாகிடும். சரியாகாத பிரச்னையே கிடையாது” என்று அறிவுரை கூறியிருக்கிறார்.