தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வி.சாலையில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தன் கட்சியின் கொள்கை, தங்களின் அரசியல் எதிரி, கொள்ளை எதிரி யார், செயல் திட்டம் என்ன என்பது உட்பட பல விஷயங்களை விஜய் பேசியிருந்தார். “கெட்ட பையன் சார் அந்த சின்ன பையன்” என்று வழக்கம்போல குட்டிக்கதைக் கதை ஒன்றையும் சொல்லியிருந்தார். அதாவது `ஒரு நாட்டில் ஒரு பெரிய போர் வந்ததாம். அப்போது பவர்ஃபுள்ளான தலைமை இல்லாததால், ஒரு சின்ன குழந்தையிடம் பொறுப்புகள் இருந்ததாம். அப்போது நாட்டில் இருந்த பெருந்தலைகள் எல்லாரும் பயந்துவிட்டனர். ஆனால் அந்த சின்ன பையன் படைகளை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு போருக்கு போலாம் என்று சொன்னானாம்.
அப்போதந்த பெருந்தலைகள் எல்லாரும், “இது சாதாரண விஷயம் கிடையாது. நீ ஒரு சின்னப் பையன் அங்க பவர்ஃபுல்லான எதிரிகள் இருப்பார்கள். இது ஒன்றும் விளையாட்டு கிடையாது நீ பாட்டுக்கு விளையாடிவிட்டு ஓடி வருவதற்கு… போர் என்றால் படையை நடத்த வேண்டும். எதிரிப்படைகளை சமாளிக்க வேண்டும், அதைவிட முக்கியமாக ஜெயிக்க வேண்டும். உனக்கோ கூட்டமோ துணையோ யாரும் இல்லை. நீ எப்படி இந்தப் போரை நடத்துவ, எப்படி ஜெயிப்ப” எனக் கேட்டார்களாம். அவர்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல் நாட்டின் படைகளை நடத்திக் கொண்டு சென்ற அந்த பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த சின்ன பையன் என்ன செய்தான் என்று சங்க இலக்கியத்தில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.
படிக்காதவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். ஆனால், கெட்ட பையன்சார் அந்த சின்ன பையன்.” என்று கூறியிருந்தார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் குட்டி ஸ்டோரியில் விஜய் சொல்லும் பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த அந்த சின்ன பையன் யார் என்று பலரும் தேடி வருகின்றனர். அது வேறு யாருமில்லை தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்தான். நெடுஞ்செழியன் சங்ககாலப் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னர்.
தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர், சிறு வயதிலேயே முடிசூட்டப்பட்ட இவர், தான் செய்த தலையாலங்கானத்துப் போரினால் பலராலும் பாராட்டப்பட்டவர்.
இவர் போருக்குச் செல்லும் போது, சிறுவர்கள் அணியும் ஐம்படைத் தாலியைத் தன் கழுத்தில் இருந்து கழற்றவில்லை என்பதை வைத்து, இவர் மிகச்சிறு வயதிலேயே போருக்குச் சென்றார் என்று கூறப்படுகிறது. அவரின் வயதை பார்த்து தப்பாக எடைபோட்ட சேர, சோழ மற்றும் கொங்கு நாட்டு குறுநில மன்னர்கள், அந்த சிறுவனிடம் இருந்து பாண்டிய நாட்டை தங்கள் வசப்படுத்த படையெடுத்து வந்தனர். அவர்களையெல்லாம் துணிச்சலுடன் எதிர்த்து போரிட்டு அனைவரையும் தோற்கடித்து அசரவைத்திருக்கிறார் நெடுஞ்செழியன்.
இதுமட்டுமின்றி சங்க காலத்து இலக்கியங்கள் நமக்கு அறிமுகப்படுத்தும் மன்னர்களில், பாண்டிய மன்னன் தலையாலங்கானத்துச் வென்ற நெடுஞ்செழியன் இளமையிலே அரசாளப் புகுந்து பல போர்களில் வெற்றி பெற்று வண்மையிலும் திண்மையிலும் சிறந்து விளங்கி இருக்கிறார். அவரின் இயல்புகளைப் பத்துப் பாட்டில் உள்ள ‘மதுரைக் காஞ்சி’, ‘நெடுநல் வாடை’என்ற இரண்டு நூல்களும் எடுத்துரைக்கின்றன. அவர் வாலாற்று தொடர்புடைய பாடல்கள் பல புறநானூற்றில் இருக்கின்றன. அவரே பாடிய செய்யுள் ஒன்றும் அத்தொகை நூலில் இடம் பெற்றிருக்கிறது. பாண்டியன் நெடுஞ்செழியன் என்ற புத்தகத்தில் கி.வா.ஜகந்நாதன் நெடுஞ்செழியனின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார். அவரை தான் தன் குட்டி ஸ்டோரியில் ஒப்பிட்டுப் பேசி இருக்கிறார் விஜய்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs