சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே 14 மாதங்களுக்கு பிறகு இன்றுமுதல் ரயில் சேவை

சென்னை: சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் மார்க்கத்தில் இன்று (அக்.29) முதல் வழக்கமான ரயில் சேவை தொடங்குகிறது. 14 மாதங்களுக்கு பிறகு ரயில்சேவை தொடங்குவதால், பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர். தினசரி இருமார்க்கமாகவும் தலா 45 சேவைகள் இயக்கப்பட உள்ளன.

சென்னை எழும்பூர் – கடற்கரை இடையே தற்போது இரண்டு பாதையில் புறநகர் ரயில்களும், ஒரு பாதையில் விரைவு மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. கூடுதல் ரயில் பாதை இல்லாததால், அதிக ரயில்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை எழும்பூர் – கடற்கரை வரை 4-வது பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு, ரூ.274.20 கோடியில் புதிய பாதைக்கான பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தொடங்கியது.

இப்பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால், அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் இருந்து நேரடியாக பறக்கும் மார்க்கத்தில் ரயில் சேவைகளை பயன்படுத்தி வந்த பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

கடற்படை அனுமதி பெற தாமதம்: இதற்கிடையில், ஒரு ஆண்டு கடந்தும் 4-வது பாதை பணி முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டதால், பொது மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதற்கு பதில்அளித்த ரயில்வே நிர்வாகம்,”கடற்படை அனுமதி பெறுவதில் தாமதத்தால், பணிகள் முடிவடைவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

பணிகளை விரைவில் முடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது” என்று தெரிவித்தது. இந்நிலையில், சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே பறக்கும் மார்க்கத்தில் வழக்கமான ரயில் சேவை இன்று (அக்.29) முதல் தொடங்கவுள்ளது. 14 மாதங்களுக்கு ரயில்சேவை தொடங்குவதால், பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதிக்கு முன்பு, சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கத்தில் இருமார்க்கமாக 120 மின்சார ரயில்சேவை இயக்கப்பட்டது. கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டபிறகு, சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி இடையே 80 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டன.

விரைவில் 120 ரயில் சேவை: செவ்வாய்க்கிழமை (அக்.29) முதல் கடற்கரை – வேளச்சேரி இடையே மின்சார ரயில் சேவை வழக்கம் போல தொடங்குகிறது. பார்க் டவுன், கோட்டை ஆகிய ரயில் நிலைங்களில் ரயில்கள் நின்று செல்லும். தற்போது 10 சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சில பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகள் முடிந்தபிறகு, முழுமையாக 120 சேவைகள் இயக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.