தமிழ் மக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, அரச தோட்டக் கம்பனிகளால் வழங்கப்படும் பண்டிகை முற்பணக் கொடுப்பனவை 10,000 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று சுற்றாடல், வனசீவராசிகள், வனவளங்கள், நீர்வழங்கல், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அரச பெருந்தோட்டக் கம்பனிகள் (SPC), எல்கடுவ பெருந்தோட்டக் கம்பனி மற்றும் பொதுமக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை (JEDB) ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள தோட்டக் கம்பனிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்தக்; கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டுகளில் பத்தாயிரம் (10,000) ரூபாவாக வழங்கப்பட்ட இந்த தீபாவளி பண்டிகை முற்பணக் கொடுப்பனவை இந்த ஆண்டு இருபதாயிரம் (20,000) ரூபாவாக அதிகரித்துள்ளது.
நாட்டில் தற்போது காணப்படுகின்ற பொருளாதார நெருக்கடியினால் வாழ்க்கை செலவு மற்றும் தொழிலாளர்களின் கொள்வனவு செய்யும் சக்தி குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றமையினை கருத்திற் கொண்டே, இந்த விசேட பண்டிகைக்கால கொடுப்பினை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் பி.கே. பிரபாத் சந்திர கீர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும், மலையகத் தமிழ் சமூகம் மற்றும் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தீபாவளிப் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடப்படுவதற்கு தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த அறிவிப்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.