ஹைதராபாத்: தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சியின் முதல் மாநாட்டை விக்ரவாண்டி, வி சாலை கிராமத்தில் வெற்றிகரமாக நிகழ்த்தி முடித்துள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது உரையை பாராட்டியும், விமர்சித்தும் வருகின்றனர்.
விஜய் மாநாட்டில் பேசும்போது, ’கூத்தாடிகள்’ குறித்து ஆவேசமாக உரையாற்றினார். அவர் பேசும்போது, கூத்தாடிகள் என்றால் கேவலமல்ல என்றும், அவர்கள் நாட்டையே வெகு சிறப்பாக ஆண்டிருக்கிறார்கள் என்றும் பேசினார். இதற்கு உதாரணமாக தமிழ்நாட்டில்எம்ஜிஆரும், ஆந்திராவில் என்டிஆரின் பெயரையும் அவர் குறிப்பிட்டார். இந்த சூழலில் கட்சி மாநாட்டை வெகு சிறப்பாக நடத்திய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு, ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் சமூக வலைதளம் மூலம் நேற்று வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில் “ பல சித்தர்களும், துறவிகளும் வாழ்ந்த புண்ணிய பூமியான தமிழ்நாட்டில் அரசியல் கட்சியை தொடங்கி உள்ள விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.
நடிகர் பவன் கல்யாண் சமூக நலனில் அக்கறை கொண்டு, ஜனசேனா கட்சியை தொடங்கினார். கடந்த 2014-ம் ஆண்டு அவர், பாஜக – தெலுங்கு தேசம் கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்ததோடு, ஆந்திரா முழுவதும் இரு கட்சிகளுக்காக தீவிர பிரச்சாரம் செய்தார். இந்த கூட்டணியே வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டில் நடந்த ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், பாஜக-தெலுங்கு தேசம் கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டன. ஜனசேனாவும் தனித்தே போட்டியிட்டது.
பவன் கல்யாண் போட்டியிட்ட காஜுவாக்கா மற்றும் பீமாவரம் ஆகிய இரு தொகுதிகளிலும் அவர் தோல்வி அடைந்தார். அவரது கட்சி ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்று மாநில அளவில் 5.53 சதவீத வாக்குகளை பெற்றது. தெலுங்கு தேசம் கட்சி தோல்வியை சந்தித்தது. இக்கட்சி 23 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று, 5.32 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஜெகன் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 175 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு, 151 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் பவன் கல்யாணுடன் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி வைத்திருந்தால், சந்திரபாபு நாயுடுவே தொடந்து முதல்வராக பதவி ஏற்றிருப்பார். பவன் கல்யாணின் போட்டியால் வாக்குகள் பிரிந்தன. அது ஜெகன் மோகன் ரெட்டிக்கு சாதகமானது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.