நாட்டில் புதிதாக பணம் அச்சிடப்படவில்லை என்றும், எந்தவொரு நாட்டிலிருந்தோ அல்லது வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்தோ எந்த வகையிலும் கடன்கள் பெறப்படவில்லை என்றும் அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளரும், புத்த சாசனம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்கள் காலாவதியாகும் போது விகிதாசார முறையில் மீள வழங்குவதே மத்திய வங்கியின் வழமையான நடைமுறை எனவும், புதிய திறைசேரி உண்டியல்கள் இந்த முறையிலேயே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அவ்வாறன்றி புதிதாக கடன் ஏதும் பெறப்படவில்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
அத்துடன் நாட்டில் புதிதாக பணம் அச்சிடப்படவில்லை என்று கூறிய அமைச்சர், அவ்வாறு செய்ய முடியாது என்றும், அவ்வாறு புதிதாக பணம் அச்சிடப்பட்டிருந்தால் புதிதாக அச்சிடப்படும் நாணயத் தாள்களில் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் கையொப்பம் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த வகையில் ஒரு பில்லியன் ரூபாய் நாணயம் புதிதாக அச்சிடப்பட்டுள்ளதாக பரப்பப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்றும் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.