ரூ.8 கோடிக்காக தொழிலதிபரை கொன்ற மனைவி… 800 கி.மீ. தொலைவில் உடலை எரித்த கொடூரம்

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம், சுண்டிகோப்பா அருகே உள்ள ஒரு காபி தோட்டத்தில் கடந்த 8-ம் தேதி கருகிய நிலையில் ஆண் சடலத்தை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை. அவரை அடையாளம் காணும் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியில் முடிந்தன.

அதன்பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் சடலம் கிடந்த பகுதியை கடந்து சென்ற வாகனங்களை கண்காணித்தனர். அப்போது சிவப்பு நிற மெர்சிடஸ் பென்ஸ் கார் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அந்த கார் எங்கிருந்து வந்தது? உரிமையாளர் யார்? என்பதை அறிவதற்காக அந்த கார் பயணித்த சாலைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இவ்வாறு நடத்தப்பட்ட வாகன ஆய்வு மற்றும் விசாரணையில், மூன்று வாரங்களுக்கு பிறகு துப்பு துலங்கியது. சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் கண்காணிக்கப்பட்ட அந்த கார், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரமேஷ் (வயது 54) என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததும், அவர் காணாமல் போனதாக அவரது மனைவி நிகாரிகா (வயது 29) புகார் அளித்திருந்ததும் தெரியவந்தது.

ஏற்கனவே, நிகாரிகா மற்றும் அவரது நெருக்கமானவர்களை சந்தேகத்தின்பேரில் போலீசார் கைது செய்திருந்தனர். பின்னர், விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், நிகாரிகாவை காவலில் எடுத்து விசாரித்தபோது, கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தனது காதலன் நிகில் மற்றும் அன்கூர் ஆகியோருடன் சேர்ந்து ரமேஷை கொலை செய்து உடலை எரித்ததாக நிகாரிகா வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆடம்பர வாழ்க்கை

நிகாரிகா தன் முதல் கணவரைவிட்டு பிரிந்து தொழிலதிபர் ரமேஷை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். ரமேஷுக்கும் நிகாரிகா இரண்டாவது மனைவி ஆவார். திருமணத்திற்கு பிறகு தொழிலதிபர் ரமேஷ், நிஹாரிகாவுக்கு ஒரு ஆடம்பரமான வாழ்க்கையை வழங்கினார். அவர் கேட்டபோதெல்லாம் பணம் கொடுத்துள்ளார். இந்த ஆடம்பர வாழ்க்கைக்கு நிகாரிகாவும் பழகிவிட்டார். ஒரு கட்டத்தில் நிகாரிகா, தன் கணவர் ரமேஷிடம் 8 கோடி ரூபாய் கேட்டுள்ளார். இவ்வளவு பெரிய தொகையை கொடுக்க ரமேஷ் மறுத்துள்ளார். தான் கேட்ட பணம் கிடைக்காததால் நிகாரிகா ஆத்திரம் அடைந்துள்ளார்.

காதலன் நிகில் மற்றும் அங்கூருடன் சேர்ந்து, ரமேஷின் சொத்துக்களை அடைவதற்காக கொலை திட்டம் தீட்டி செயல்படுத்தியிருக்கிறார். அக்டோபர் 1-ம் தேதி ஐதராபாத்தில் உள்ள உப்பலில் தொழிலதிபர் ரமேஷ் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளார். பின்னர் வீடடுக்கு சென்ற நிகாரிகா, பணத்தை எடுத்துக்கொண்டு பெங்களூருக்கு காரில் சென்றுள்ளார். உப்பலில் இருந்து 800 கிமீ தொலைவில் உள்ள குடகுக்கு சென்று, அங்குள்ள காபி எஸ்டேட்டில் உடலை எரித்துள்ளனர். உடலை போர்வையால் போர்த்தி தீ வைத்து எரித்துள்ளனர். பின்னர் மூவரும் ஐதராபாத் திரும்பி உள்ளனர். அங்கு சென்றதும் ரமேஷை காணவில்லை என்று நிகாரிகா புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சவாலான வழக்கு

விசாரணை தொடர்பாக குடகு காவல் துறைத் தலைவர் ராமராஜன் கூறுகையில், “இது எங்களுக்கு சவாலான வழக்கு. ஆதாரங்கள் எல்லாம் முற்றிலும் அழிக்கப்பட்டிருந்தன. காணாமல் போனதாக புகார் பதிவு செய்யப்படுவதற்கு 3-4 நாட்களுக்கு முன்பே உடல் எரிக்கப்பட்டிருப்பது முதலில் கண்டறிந்தோம். இதையடுத்து, எங்கள் குற்றப்பிரிவு அதிகாரிகள் அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து விசாரணையை தொடங்கினர்.

கடந்த சனிக்கிழமை, நள்ளிரவு 12 மணியில் இருந்து அதிகாலை 2 மணி வரை அந்த பகுதியில் ஒரு வாகனம் சந்தேகத்திற்கிடமான முறையில் செல்வதை அவர்கள் கண்டுபிடித்தனர். எனவே சிசிடிவி காட்சிகளை சரிபார்த்தோம். ஆனால் இரவு நேரமாக இருந்ததால், படங்கள் தெளிவாக தெரியவில்லை. அதனால், தும்கூர் வரை உள்ள சுமார் 500 சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தோம். அத்துடன், அனைத்து தொழில்நுட்ப ஆதாரங்களுடன் ஒப்பிட்டு பார்த்தபோது, தெலுங்கானாவை சேர்ந்த ரமேஷ் என்ற தொழிலதிபருக்கு சொந்தமான வாகனம் என்பதை கண்டுபிடித்தோம்” என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.