நாக்பூர்: விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஜெகதிஷ் என்பவர் தீவிரவாதம் குறித்து நூல் எழுதியவர் என்றும் அவரை தேடி வருவதாகவும் மகாராஷ்டிர போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2 வாரங்களாக தினமும் உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவையில் ஈடுபட்டுள்ள விமானங்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆனால் சோதனையில் அவை வெறும் புரளி என தெரியவந்தது. இதனால் விமானங்கள் புறப்படுவதில் அல்லது சென்று சேர்வதில் தாமதம் ஏற்பட்டது. மேலும் விமான நிலையங்கள், விமான நிறுவன அலுவலகங்கள், ரயில்வே நிலையங்கள் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை அடையாளம் கண்டுள்ளதாக மகாராஷ்டிராவின் நாக்பூர் நகர காவல் சிறப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர். நாக்பூரின் கோண்டியா பகுதியைச் சேர்ந்த அந்த நபரின் பெயர் ஜெகதிஷ் உய்கே (35) என்றும் தீவிரவாதம் குறித்து அவர் ஒரு நூல் எழுதி உள்ளார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கை நாக்பூர் காவல் துணை ஆணையர் ஸ்வேதா கேத்கர் தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகின்றனர். பிரதமர் அலுவலகம், ரயில்வே அமைச்சர், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், விமான நிறுவன அலுவலகங்கள், டிஜிபி அலுவலகங்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை உள்ளிட்ட அரசு அமைப்புகளுக்கு ஜெகதிஷ் உய்கே மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட அந்த நபர் தப்பிவிட்டதாகவும் அவரை தேடி வருவதாகவும் காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, தான் புரிந்து கொண்ட ரகசிய தீவிரவாத குறியீடு குறித்த தகவலை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு தராவிட்டால், போராட்டத்தில் ஈடுபடப் போவதாக உய்கே மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். இதையடுத்து, மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வீட்டுக்கு திங்கள்கிழமை பலத்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மேலும் தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பாக தனக்கு தெரிந்த தகவலை பகிர்ந்து கொள்வதற்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
கடந்த 21-ம் தேதி ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு உய்கே ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். அதை டிஜிபி, ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கும் அனுப்பி உள்ளார். இதையடுத்து ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஜெகதிஷ் உய்கேவை கைது செய்ய சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் நாக்பூர் காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரையில் 300-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. 22-ம் தேதி ஒரு நாளில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு மிரட்டல்கள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.