பெய்ரூட்: லெபனானில் இயங்கும் தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவின் புதிய தலைவராக நைம் காசிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கொல்லப்பட்டார். அவரை அடுத்து தலைவராக தேர்வு செய்யப்பட இருந்த ஹஷெம் சஃபீதினும் அடுத்த ஒரு வாரத்தில் கொல்லப்பட்டார். இந்நிலையில், ஹிஸ்புல்லாவின் புதிய தலைவராக நைம் காசிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஹிஸ்புல்லா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹிஸ்புல்லாவின் வழக்கமான நடைமுறைப்படி ஷூரா கவுன்சில் கூடி நைம் காசிமை பொதுச் செயலாளராக தேர்வு செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைம் காசிமின் பின்னணி: ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்த அப்பாஸ் அல்-முசாவி என்பவரால் 1991ம் ஆண்டு அமைப்பின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டவர் நைம் கசிம். அடுத்த சில ஆண்டுகளில் இஸ்ரேலிய ஹெலிகாப்டர் தாக்குதலில் அப்பாஸ் அல்-முசாவி கொல்லப்பட்டார். ஹசன் நஸ்ரல்லா பொதுச் செயலாளர் ஆனபோதும், துணைத் தலைவராக நைம் காசிம் தொடர்ந்தார். மேலும் ஹிஸ்புல்லாவின் முன்னணி செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராகவும் அவர் நீண்ட காலமாக இருந்துள்ளார். வெளிநாட்டு ஊடகங்களுடன் பல்வேறு நேர்காணல்களை நடத்தியுள்ளார். நஸ்ரல்லா கொல்லப்பட்டதற்குப் பிறகு கடந்த 8ம் தேதி அளித்த நேர்காணலில், லெபனானுக்கான போர்நிறுத்த முயற்சிகளை ஹிஸ்புல்லா ஆதரிப்பதாகக் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.