பெண்களுக்குள் நடந்த பிறாண்டல்களைத் தவிர இந்த எபிசோடில் பெரிதாக வேறு ஒன்றும் நிகழவில்லை. கேப்டன் ஆகியிருக்கும் முத்துவால் வீட்டில் ஏதேனும் நல்ல மாற்றத்தைக் கொண்டு வர முடிகிறதா என்று பார்க்க வேண்டும்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 22
‘தப்பாத்தான் தெரியும் நம்ம ரூட்டு’ என்கிற பாடலுடன் விடிந்தது. சவுந்தர்யாவிற்கான டெடிகேஷன் பாடல் போல. அவர் தனிமையில் பாத்ரூம் ஏரியா அருகேதான் தினமும் நடனம் ஆடுகிறார்.
‘கேப்டன் டாஸ்க்ல எல்லாத்தையும் ஓப்பனா சொல்லிட்டோம். நம்மள பிச்சு எடுத்துடுவாங்க. இவிய்ங்க கூட இனிமே குப்பை கொட்ட முடியாது’ என்று சவுந்தர்யா நினைத்து விட்டாரோ, என்னமோ.. பாய்ஸ் அணிக்கு எஸ்கேப் ஆகலாம் என்று முடிவு செய்து விட்டார். ‘Team Swap’ பத்தி பேசலாமா?’ என்று அவரே பேச்சையும் ஆரம்பித்து தன்னுடைய விருப்பத்தையும் வலுவாக பதிவு செய்து விட்டார். (மாற்றம், முன்னேற்றம், தங்கமணி!). “அங்க இருந்துக்கிட்டு டீமிற்காக ஆடுவேன்” என்கிற (போலி) வாக்குறுதியையும் தந்தார். சாச்சனாவும் சவுந்தர்யாவிற்கு ஆதரவாக பேசினார்.
‘இனிமேலும் சவுந்தர்யாவிற்கு வாய்ப்பு தரவில்லையென்றால் க்ரூப்பிஸம் என்கிற குற்றச்சாட்டு ஸ்ட்ராங்காக நிலைத்து விடும்’ என்று மற்ற பெண்கள் நினைத்து விட்டார்களோ, என்னமோ, அதிக எதிர்ப்பு இன்றி சவுந்தர்யா செல்வதற்கு சம்மதித்து விட்டார்கள். ‘அங்க போனா இன்னமும் சொகுசா ஆயிடுவா’ என்று கடந்த வாரத்தில் மறுத்த சுனிதா கூட இப்போது மெல்லிய முனகலுடன் நிறுத்திக் கொண்டார்.
இந்த வார கேப்டனுக்கான டாஸ்க்கை அறிவித்தார் பிக் பாஸ். சவாலே இல்லாத ஆட்டம். முத்து கேப்டன் ஆக வேண்டும் என்பதுதான் பிக் பாஸின் பிளானோ, என்னவோ?! தலைவன், தலைவி என்று பெயரிடப்பட்டிருக்கும் பலகைகளை திருப்பிப் போட வேண்டும். யாருடைய பெயர் அதிகமான எண்ணிக்கையில் இருக்கிறதோ, அவரே வெற்றியாளர். துறுதுறுப்பாக செயல்பட்டு மிக எளிதில் வெற்றியடைந்து விட்டார் முத்து. ஆக அவரே இந்த வாரத்தின் கேப்டன். ஆண்களுக்கு ஒரே குஷி. ‘மானம் காத்த முத்துக்குமரா’ என்கிற ரேஞ்சிற்கு கொண்டாடினார்கள். இந்த வாரமும் ஒரு பெண் தலைவராகியிருந்தால் ஆண்களுக்கு பங்கமாகியிருக்கும்.
விடாக்கண்டன் முத்து, கொடாக்கண்டன் தர்ஷிகா
ஒரு தேர்ந்த அரசியல்வாதியைப் போல பேசினார் முத்து. ‘நான் தலைவன் ஆக வேண்டுமென்று என் நண்பர்கள் விரும்பினார்கள். அது நடந்ததில் மகிழ்ச்சி. பெண்களுக்கும் அதுதான் உள்ளார்ந்த விருப்பமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும்” என்று தேனொழுகப் பேசிய முத்து, அடுத்ததாக எழுப்பிய விஷயத்தில் அவருடைய புத்திசாலித்தனம் தெரிந்தது. “தர்ஷிகா கேப்டன் பதவியை என்னிடம் ஒப்படைப்பதற்கு முன்னால் ஒரு முக்கியமான விஷயம் பாக்கி இருக்கிறது. ‘ஆண்களிடம் போட்ட டீல் என்னவாயிற்று? ஒரு கேப்டனாக நடுநிலைமையோடு இந்த விஷயத்தை முடித்து விட்டு பிறகு அவர் பதவி விலகலாம்’ என்று முத்து சொன்னது ஒரு நல்ல செக்மேட்.
தர்ஷிகாவும் ஏறத்தாழ முத்துவிற்கு நிகரான புத்திசாலி. எனவே விடாக்கண்டன், கொடாக்கண்டன் கதையாக “கொடுத்த வாக்கை காப்பாற்றுவதுதான் சரியானது. அந்த வகையில், ஒரு கேப்டனாக என்னுடைய கருத்தைச் சொல்கிறேன். கொடுத்த வார்த்தைகளுக்கு மதிப்புள்ளது” என்று மற்ற பெண்களிடம் பந்தை தள்ளி விட்டு சென்றது சாமர்த்தியம். இந்த ஒப்பந்தத்தை பெண்கள் அணி ஏதாவது ஒரு வாரத்தில் நிறைவேற்றுமா, அல்லது சீசன் முடியும் வரை அப்படியே காலம் கடத்தி ஆண்கள் அணியை ஏமாற்றி விடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆண்கள் எழுந்து நின்று ராணுவ மரியாதையுடன் சல்யூட் அடிக்க கேப்டன் முத்து பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ‘நான் ஒருதலைப்பட்சமாகத்தான் நடந்துப்பேன்’ என்று ஜெர்க் தந்து விட்டு ‘அது இந்த வீட்டோட விஷயத்தில். தீபாவளி வருது. வாங்க ஒண்ணா சேர்ந்து வீட்டை சுத்தம் பண்ணுவோம்.. காலைல பாட்டு போடறப்போ எல்லோரும் வந்து டான்ஸ் ஆடுவோம். இரவு உணவையாவது சேர்ந்து ஒன்றாக அமர்ந்து உண்ணுவோம்’ என்று அவர் சொன்னதெல்லாம் நன்றாகத்தான் தெரிந்தது. நடைமுறையில் வருமா?
‘ஆண்கள் அணியில் யார் சமைப்பது என்பதையும் முடிவு செய்தாக வேண்டும்’ என்று டிவிஸ்ட் வைத்தார் பிக் பாஸ். தீபக், ரஞ்சித், அருண் ஆகிய மூவரும் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். ‘முத்துக்குமரன் தலைமையிலான எங்கள் அணி’ என்கிற வாசகத்துடன் பதவியை ஏற்றுக் கொண்டு தேர்ந்த அரசியல் தொண்டர்கள் போலவே ஆண்கள் மாறினார்கள். ஆக.. விஜய்சேதுபதி என்ன சொன்னாலும் முத்துவின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியே வரஆண்கள் அணி விரும்பவில்லை போல.
‘க்ரூப்பிஸமா.. அது எங்க இருக்கு?’ – பெண்கள் அணியில் சண்டை
பெண்கள் அணியில் தர்ஷிகா, சாச்சனா, ஆனந்தி ஆகிய மூவரும் சமைக்க வேண்டும் என்பது ஆண்களின் தீர்மானமாக இருந்தது. ‘வீட்டு வேலை செய்யப் பிடிக்காத’ சுனிதாவை தண்ணீர் பாட்டில் தூக்கும் வேலைக்கு நியமித்தது நல்ல மூவ்.
அணியில் இருந்து ஒருவர் இடம் மாறுவதற்கான நேரம். தங்களுடைய அணிக்கு விஷால் வரப்போவதை அறிந்த பெண்கள் அணி உற்சாகம் அடைந்தது. ‘வாடா செல்லக்குட்டி.. பட்டுக்குட்டி’ ரேஞ்சிற்கு அவரை வரவேற்றார்கள். ஆண்கள் அணிக்குச் செல்வதற்கு தேர்வான சவுந்தர்யாவிற்கு அப்போதும் சந்தோஷம் வரவில்லை. ‘கடைசில என்ன ஆப்பு காத்திருக்கோ?!” என்கிற அநாவசியமான சந்தேகத்துடன் புலம்பிக் கொண்டே மூட்டையைக் கட்டிக் கொண்டு வீடு மாறினார்.
பெண்கள் அணியில் ஒரு ‘மினி’ கலவரம் ஆரம்பித்தது. ‘சவுந்தர்யாவிற்கு ஒரு விஷயம் தரணும்னா மட்டும் ஏன் பல முறை யோசிக்கறீங்க?” என்று சாச்சனா ஆரம்பித்த விஷயம் சரவெடி போல் பற்றியது. “நீ ஏன் சவுந்தர்யா மாதிரியே நினைக்க ஆரம்பிச்சிருக்கே?” என்று ஆனந்தி கேட்க “நான் சவுந்தர்யாவிற்கு சப்போர்ட் பண்ணலை. எனக்குத் தோணினதைத்தான் கேட்கறேன்” என்று மல்லுக் கட்டினார் சாச்சனா. ‘இங்க க்ரூப்பிஸம் இருக்கறதா எனக்குத் தோணுது’ என்பது அவரது புகார்.
‘க்ரூப்பிஸம்’ என்கிற வார்த்தை சுனிதா மற்றும் அன்ஷிதாவைக் கோபப்படுத்தியது. ‘க்ரூப்பிஸம்னா ஒருத்தரை டார்கெட் பண்ணி ஸ்கெட்ச் போட்டு தூக்கறது. அதுவா நடக்குது இங்க?” என்று பொங்க ஆரம்பித்த சுனிதா “நான் மேக்கப் போடறேன்.. வீட்டு வேலை செய்யறதிலலைன்னு சொல்றீங்க. மேக்கப் போடறது என் இஷ்டம்.. அந்த டைம்லதான் போடறேன்..” என்று அவர் உரக்க வாக்குவாதம் செய்ய, பதிலுக்கு விடாமல் சாச்சனாவும் சளைக்காமல் பேசினார்.
‘சுனிதா என் பிரெண்டுதான். ஆனா அவ சொல்றத எல்லாம் நான் கேட்கறதில்லா.. இல்லா.. ’ என்று தன்னுடைய கருத்தையும் நடுவில் பதிவு செய்தார் அன்ஷிதா. ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் ஜாக்குலினுக்கும் சுனிதாவிற்கும் இடையே திசை மாறியது. பெண்கள் அறையை நோக்கி எதற்கோ நகரச் சென்ற முத்துவை “இருங்க… போகாதீங்க.. எண்டர்டயின்மென்ட்டை கெடுத்துடாதீங்க” என்பது போல் மற்ற ஆண்கள் சொன்னார்கள். “நான் அங்க இல்லைன்னாலும் என் பேருதான் அடிபடுது” என்று முனகினார் சவுந்தர்யா. (நீங்கதான் மெயின் கன்டென்ட்டே!) “இனிமே என்னை அக்கான்னு கூப்பிடாதீங்க மேடம்” என்று சாச்சனாவை நோக்கி கைகூப்பி சுனிதா சொல்ல, பதிலுக்கு அவரும் பதிலுக்கு கைகூப்பி வணக்கம் சொல்ல …
இந்த வாரம் வெளியேறப் போவது ஆணா, பெண்ணா?
இந்த பூனைச் சண்டை பிக் பாஸிற்கே போரடித்திருக்க வேண்டும். ‘எழுந்து வாங்க.. நாமினேஷன் வேலையைப் பார்க்கலாம்’ என்பது போல் அழைத்து விட்டார். கடந்த வாரத்தில் அணி மாறிச் சென்ற ஜெப்ரிக்கும் சாச்சனாவிற்கும் ஒருவரை நேரடியாக நாமினேட் செய்யும் பவர் இருக்கிறது. எனவே ஜெப்ரி அன்ஷிதாவையும், சாச்சனா தீபக்கையும் நாமினேட் செய்தார்கள். மற்றவர்கள் வாக்குமூல அறையில் ரகசியமாக வாக்குகளை குத்தினார்கள். ஆண்கள் அணி குத்தியதில் ஜாக்குலினுக்கு அதிகமான காயம். மற்றபடி கலவையான முறையில் இருந்தது. பெண்கள் அணி குத்தியதில் அருண், ரஞ்சித், சத்யா ஆகிய மூவருக்கும் பயங்கர டேமேஜ். முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த வாரம் நாமினேட் ஆகி எவிக்ஷன் வரிசையில் இருப்பவர்கள், ஜாக்குலின் (4), பவித்ரா (2), சுனிதா (2), ஜெப்ரி (2) ரஞ்சித் (3), சத்யா (4), மற்றும் அருண் (5). தீபக் மற்றும் அன்ஷிதா நேரடி நாமினேஷன்.
ஆண்கள் அணிக்குச் சென்றிருக்கும் சவுந்தர்யா, திருவிழாக்கமிட்டியை ரகசியமாக பழிவாங்க முடிவு செய்திருக்கிறார் போல. எனவே, பெண்கள் இந்தப் பக்கம் வருவதற்கான டாஸ்க்குகளை வித்தியாசம் வித்தியாசமாக யோசித்துக் கொண்டிருந்தார். அதில் ஒன்றை டெமோ செய்து ரஞ்சித்திடம் காட்டினார்.
இரண்டு ஸ்டூல்களை அருகருகே வைத்து ஒன்றில் இருந்து இன்னொன்றிற்கு இடம் மாறி அமர்ந்து வர வேண்டும். இந்த விளையாட்டில் முதலில் மாட்டியவர் ஜாக்குலின். ஸ்டூல்களை தாராளமாக இடம் தள்ளி வைத்து டாஸ்க்கை எளிதாக முடித்தார் ஜாக். சவுந்தர்யாவிற்கு ‘சப்’ என்று ஆகியிருக்க வேண்டும். “இவ்ளோ ஈஸியாலாம் செய்யவிடக்கூாது. ஏதாவது பயங்கரமா செய்யணும்” என்பது போல் அருணிடம் அவர் சொல்ல “நாளைக்கு பாரு. வெச்சு செஞ்சிடலாம்” என்று வாக்கு தந்தார் அருண்.
தக்காளியை அள்ளி கெட்ட பெயர் வாங்கிய ஜாக்குலின்
ஷாப்பிங்கிற்கான டாஸ்க். இதை யோசித்தவர் சவுந்தர்யாவின் அண்ணன் முறை போலிருக்கிறது. இரண்டு நீளமான பைப்புகளில் பந்துகளை உருட்டி டார்கெட்டில் தள்ள வேண்டும். இதை மூன்று நபர்கள் ரிலே ரேஸ் போல தொடர் நிகழ்வாக செய்ய வேண்டும். முதலில் பெண்கள் அணி களம் இறங்கியது. ஆரம்பத்தில் தடுமாறினாலும் விரைவில் கற்றுக் கொண்டார்கள்.
அடுத்தது ஆண்கள் அணி. பொறுமையாக செய்ய வேண்டிய விஷயத்தை அவசரம் அவசரமாக செய்து ‘நல்லா சர்க்கஸ் பண்றே மேன் நீ’ என்கிற மாதிரி ஆட்டம் காட்டினார் அருண். எந்த அணி தவறு செய்தாலும் சுட்டிக்காட்டி நடுநிலைமையான கேப்டனாக முத்து இருந்தது பாராட்டத்தக்கது. இறுதியில் பெண்கள் அணி 6600 மதிப்பையும் ஆண்கள் அணி 8400 மதிப்பையும் பாயிண்ட்டுகளாக எடுத்திருந்தது.
ஷாப்பிங் டைம். ‘இரண்டு பேர் மட்டுமே செல்ல வேண்டும்’ என்கிற புதிய முட்டுக்கட்டையைப் போட்டார் பிக் பாஸ். பெண்கள் அணியில் இருந்து ஜாக்கும் விஷாலும் பையைத் தூக்கிக் கொண்டு கிளம்பினார்கள். ஆண்களில் தீபக்கும் முத்துவும் கூடையைத் தூக்கினார்கள். தெரிந்து செய்தாரா அல்லது வேண்டுமென்றே செய்தாரா என்று தெரியவில்லை, இருக்கிற தக்காளி அனைத்தையும் ஜாக்குலின் கைப்பற்றிக் கொண்டார். தீபக்கிற்கு ஒரு கிலோ தக்காளி மட்டும் கிடைத்தது. விஷால் பரபரவென்று இயங்கியதில் பெண்கள் அணிக்கு நிறைய பொருட்கள் கிடைத்தது.
‘நம்மள விட அவங்க சூப்பரா எடுத்தாங்க. எல்லா தக்காளியையும் தூக்கிட்டாங்க’ என்று முத்து புலம்ப, தீபக் இதையொரு புகாராக ஜாக்குலினிடம் சொல்ல “தெரியாம எடுத்துட்டேண்ணா.. விஷால் எடுத்தது தெரியாம.. நானும் எடுத்துட்டேன்.. நெஜமாண்ணா.. நம்புண்ணா..” என்று ஜாக்குலின் புலம்ப, அதில் குறுக்கிட்ட பிக் பாஸ் “ஜாக்குலின்.. பிளான் பண்ணி எடுத்ததையெல்லாம் இனி மாத்த முடியாது” என்று ஜாலியாக போட்டுக் கொடுக்க “அவர் சும்மா சொல்றாரு.. நம்புங்கண்ணா..” என்று நீண்ட நேரத்திற்கு புலம்பிக் கொண்டிருந்தார் ஜாக்குலின்.
‘அவங்க சாப்பிடட்டும் விட்றா..’ ஆண்கள் அணியின் பெருந்தன்மை
இந்தச் சமயத்தில் ‘மாஸ்டர்.. ஒரு தக்காளி சூப்’ என்று பவித்ரா குறும்புடன் ஆர்டர் செய்ய “ஏண்டி.. நீ வேற… ஏற்கெனவே அவங்க காண்டுல இருக்கானுங்க.. நீ வேற ஏத்தி விடறே?!” என்று சிணுங்கினார் ஜாக். “விட்ரா.. விட்ரா.. போட்டும். போன வாரம் அவங்களுக்கு சாப்பாடு சரியா இல்ல.. இந்த வாரமாவது நல்லா சாப்பிடட்டும்.” என்று சத்யாவும் முத்துவும் பெண்கள் அணிக்கு ஆதரவாக பெருந்தன்மையுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். கடந்த வாரத்தில் ஜெப்ரி மற்றும் இந்த வாரத்தில் விஷால் ஆகிய இருவரும் சமயோசிதமாக செயல்பட்டதால்தான் பெண்கள் அணிக்கு சாப்பாடு கிடைக்கிறது என்கிற பெருமையுடன் திருப்திபட்டுக் கொண்டார்கள்.
‘நாம யோசிச்சு.. யோசிச்சு டாஸ்க் பண்றோம். ஆனா ஒண்ணுமே பண்ணாதவங்கள்லாம் இங்க சர்வைவ் ஆகறாங்க” என்று பவித்ராவிடம் புலம்பினார் தர்ஷிகா. (காமிரா சவுந்தர்யாவைக் காட்டுகிறது!) ‘ஜாக் பண்றது எல்லாமே ஒரு மாஸ்டர் பிளானோ?’ என்கிற சந்தேகத்தை ஆனந்தி எழுப்ப “இங்க எல்லாமே கன்டென்ட்தான்’ என்றார் சுனிதா. “சுனிதாவிற்கு ஒரு பார்வை இருக்கற மாதிரி எனக்கு இருக்கக்கூடாதா?” என்று தன்னை டிஃபணெ்ட் செய்து பிறகு தர்ஷிகாவிடம் பேசிக் கொண்டிருந்தார் ஜாக்குலின்.
பெண்கள் அணிக்கு அதிகமான சமையல் பொருட்களை எடுத்து வந்ததற்காக விஷாலுக்கு ஸ்பெஷல் பாராட்டு கிடைத்தது. சம்பளம் கிரெடிட் ஆனதுமே ஃபுட் ஆப்பில் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்து கொண்டாடுவது போல, மளிகைப் பொருட்கள் வந்ததுமே சிக்கன் உணவை தயார் செய்து ஒன்று கூடி சாப்பிட்டு மகிழ்ந்தது ஆண்கள் அணி.
எபிசோடின் இறுதியில் ‘ஒவ்வொரு வாரமும் பல சுவாரசியங்கள் நிறைந்திருக்கும் இந்த சீசனில்…’ என்று அசரிரீக்குரல் ஒலித்தது. ஒருவேளை வேறு மொழியில் நடக்கும் சீசன் பற்றி இங்கு சொல்லிக் கொண்டிருக்கிறாரோ?!