ஆட்சி, அதிகாரத்தில் பங்கு பற்றி பேசி தர்மசங்கடத்துக்கு ஆளாக்க வேண்டாம்: காங்கிரஸாருக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை

சென்னை: ஆட்சி, அதிகாரத்தில் பங்கு போன்ற பேச்சுக்களால் தன்னை தர்மசங்கடத்துக்கு ஆளாக்க வேண்டாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் தீபாவளி கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற செல்வப்பெருந்தகை தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் பட்டாசுகள் வெடித்தும் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வுக்கு தலைமை வகித்த மாவட்ட தலைவர் முத்தழகன் பேசியதாவது: தேர்தல் கூட்டணி என்பது தேர்தலுடன் முடிவடைந்துவிடுகிறது. திமுக ஆட்சியில் மக்களுக்கு எதிரான விஷயங்கள் நடைபெறும்போது நாம் குரல் கொடுக்க வேண்டும். திமுகவினர் நினைத்ததை சாதிக்கின்றனர். கூட்டணிக் கட்சியினர் நினைப்பது நடப்பதில்லை. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு பற்றி தேசிய தலைமைதான் முடிவெடுக்கும் என்றாலும் கட்சித் தொண்டர்களின் மனநிலை குறித்து டெல்லி தலைமைக்கு தெரிவிக்க வேண்டும். சமீபத்தில் தொடங்கப்பட்ட கட்சிக் கூட கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பகிர்வு அளிக்கப்படும் என்கிறார். இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காங்கிரஸில் இருந்து ஒருவராவது அமைச்சராக வேண்டும் என்று பேசினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

அதையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசும்போது, “அரசியல் கூட்டத்தில்தான் அரசியல் பேச வேண்டும். இது தீபாவளி கொண்டாட்டம். இங்கு தீபாவளி கொண்டாடம் பற்றித்தான் பேச வேண்டும். இங்கு நடைபெறும் எல்லா நிகழ்வுகளும் தேசிய தலைமைக்குத் தெரிகிறது. நம்மிடம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். எல்லாம் சரியாகும். எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும். இதுபோன்ற நிகழ்வுகளில் ஆட்சி, அதிகாரப் பகிர்வு குறித்து பேசி என்னை தர்மசங்கடமான நிலைக்குத் தள்ள வேண்டாம்” என கேட்டுக் கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.