உக்ரைனின் முக்கிய நகரை கைப்பற்றி விட்டோம்: ரஷியா

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போரானது 2 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வரும் தூதரக மற்றும் அமைதி பேச்சுவார்த்தை பெரிய பலனை தரவில்லை. உக்ரைன் தொடர்ந்து அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை கோரி வருகின்றது. இதற்கேற்ப, அந்நாடுகளும் ராணுவ உதவியை வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு வடகொரியாவும் ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது.

இது போரை தீவிரப்படுத்தும் செயல் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். இதனால், போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் பலன் ஏற்படாது என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், உக்ரைனின் மற்றொரு முக்கிய நகரான, டோனெட்ஸ்க் பகுதிக்கு உட்பட்ட செலிடவ் நகரை கைப்பற்றி விட்டோம் என்றும் இது மிக பெரிய வெற்றி என்றும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

உக்ரைனின் கிழக்கு பகுதியில் கடந்த சில வாரங்களாக ராணுவ முற்றுகையை ரஷியா தீவிரப்படுத்தி வருகிறது. இதன்படி, ரஷிய படைகள் செலிடவ் நகரை நோக்கி முன்னேறி வருகின்றன. டோனெட்ஸ்க் பகுதிக்கு உட்பட்ட போக்ரோவ்ஸ்க் நகரில் இருந்து தென்கிழக்கில் செலிடவ் நகரம் அமைந்துள்ளது. உக்ரைன் நாட்டின் பாதுகாப்புக்கான முக்கிய மைய புள்ளியாகவும், போக்ரோவ்ஸ்க் நகரை நோக்கி ரஷிய படைகள் முன்னேறி விடாமல் தடுக்க உதவிடும் வகையிலும் இந்நகரம் அமைந்துள்ளது.

எனினும், ரஷியாவின் இந்த வெற்றியை பற்றி உக்ரைன் அதிகாரிகள் உடனடியாக எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், உக்ரைனுக்கான தேசிய பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளரான விடாலி மிளாவிடோவ் கூறும்போது, ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக பல்வேறு திசைகளில் இருந்தும் செலிடவ் நகரை நோக்கி தாக்குதல்கள் நடந்து வருகின்றன என்று கூறியுள்ளார்.

இதற்கேற்ப, செலிடவ் நகரில் ரஷிய கொடியை ஏந்தி பிடித்தபடி ரஷிய படைகள் தோன்றும் வீடியோ ஒன்றை அந்நாட்டு அரசு ஊடகம் நேற்று வெளியிட்டு இருந்தது. உக்ரைனின் பல்வேறு நகரங்களின் மீது நேற்றிரவு வான்வழி தாக்குதல்களை ரஷியா தொடர்ந்து நடத்தியது. இதில் கார்கிவ், கிரிவி ரி மற்றும் கீவ் உள்ளிட்ட நகரங்களை சேர்ந்த 9 பேர் பலியானார்கள். 46-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.