திருமலை: முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தனது குடும்ப பிரச்சினைக்கு தெலுங்கு தேசம் கட்சி மீது குற்றம் சுமத்துவதா? என்று ஆந்திர மாநில வருவாய் துறைஅமைச்சர் சத்யபிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. பண்டிகை விடுமுறையால் இக்கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று பல விஐபி பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.
தெலங்கானாவை சேர்ந்த அமைச்சர் கொண்டா சுரேகா, ஆந்திர வருவாய் துறை அமைச்சர்சத்யபிரசாத் உட்பட பலர் சுவாமியை தரிசித்தனர். இவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில்தீர்த்த, பிரசாதங்கள் வழங்கிகவுரவிக்கப்பட்டது. தரிசனத்துக்குப் பின்னர், அமைச்சர் சத்யபிரசாத் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
திருப்பதி மாவட்ட பொறுப்பு அமைச்சராக என்னை நியமனம் செய்த பின்னர், சுவாமியை தரிசிக்கமுதல் முறையாக வந்துள்ளேன். முதல்வரின் சொந்த மாவட்டத்துக்கு என்னை நியமனம் செய்ததற்கு அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல திட்டங்களோடும், லட்சியத்தோடும் நான் உங்களுக்காக உழைப்பேன் என்பதை தெரிவித்துக் கொள் கிறேன்.
பொருளாதார ரீதியாக மிகவும்பின் தங்கி இருந்த நமது மாநிலத்தை, முதல்வர் தனது அரசியல் அனுபவம் மூலம் மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த 130 நாட்களும் 130 நிகழ்ச்சிகளை நாங்கள் திறம்பட திட்டம் தீட்டி அமல்படுத்தி வருகிறோம்.
திருமலையில் அரசியல் பேசக்கூடாது என நினைத்தேன். ஆனால், என்னை பேச வைத்து விட்டனர். ஜெகன் வீட்டில் நடக்கும் பிரச்சினைக்கு கூட தெலுங்கு தேசம் கட்சிதான் காரணமா? ஷர்மிளா – ஜெகனின் சொத்து பிரச்சினைக்கு நாங்கள் எப்படி காரணம் ஆக முடியும்? பொய் என்னும் அஸ்திவாரத்தில் இருந்துதான் ஒய்.எஸ்.ஆர்காங்கிரஸ் கட்சியே உதயமானது. அடுக்கடுக்கான பொய்களை திரும்பத் திரும்ப கூறினால் அதுஉண்மையாகி விடும் என ஜெகன் நம்புகிறார். அண்ணனுக்காக அன்று ஷர்மிளா பாதயாத்திரை நடத்தினார். இப்போது சொத்து பிரச்சினைக்காக ஷர்மிளா பகிரங்கமாக களத்தில் இறங்கி அதே அண்ணனை எதிர்த்து போராடுகிறார். இதில் நாங்கள் எங்கே நடுவில் வந்தோம் என தெரியவில்லை. இப்படி எங்கள் மீது வீண் பழி போடுவதை இவர்கள் இருவரும் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.