மங்கல வாழ்வும், மாங்கல்யபலமும் அருளும் அற்புத வழிபாடு கேதாரகெளரி விரதம். தீபாவளியை ஒட்டி வருவதால் `தீபாவளி நோன்பு’ என்றும் சிறப்பிப்பார்கள். இதன் சிறப்புகள்… இந்த வருடம் இந்த விரதத்தை தீபாவளி அன்று கடைப்பிடிக்கவேண்டுமா?
மறுநாள் கடைப்பிடிக்க வேண்டுமா என்பன குறித்த வழிகாட்டலை வழங்குகிறார் காளிகாம்பாள் கோயில் சண்முக சிவாசார்யர்.
அற்புதமான இந்த வழிபாட்டை கேதாரகெளரி நோன்பு என்று அழைக்கின்றன புராணங்கள். சிவபெருமானை எண்ணி தவம் இருந்த அம்பிகை, அவரின் உடலில் இடப்பாகத்தைப் பெற்றாள். அவளைப் போலவே தாமும் கணவனை விட்டு நீங்காதிருந்து சுகமான இல்லறத்தையும், வளமான வாழ்க்கையையும் வரமாகப் பெற பெண்கள் வேண்டிக் கொண்டாடும் நோன்பே கேதார கௌரி விரதமாகும்.
விரதம் தோன்றிய திருக்கதை!
ஒருமுறை கயிலை மலையிலுள்ள பொன் மண்டபத்தில் பிரம்மா, விஷ்ணு முதலான தேவர்கள் சூழ கௌரிதேவியுடன் பொன்னாலான சிம்மாசனத்தில் எழுந்தருளியிருந்தார் சிவனார். அப்போது, அங்கு வந்த பிருங்கி மகரிஷி, கௌரிதேவியை விடுத்து, பரமேஸ்வரனை மட்டும் போற்றி வணங்கினார். அவருடைய அந்தச் செயலைப் பார்த்து தேவி கடுங்கோபம் கொண்டாள்.
தமது அம்சமான சக்தியும் ஆற்றலும் பிருங்கி முனிவரிடம் இருந்து நீங்கும்படி செய்தாள் அம்பிகை. அப்போது, சிவப் பரம் பொருள், அவருக்கு மூன்றாவது காலை அளித்துச் சாயாது நிற்க வைத்தார் என்கிறது திருக்கதை.
இதைத்தொடர்ந்து சிவம் வேறு சக்தி வேறு அல்ல என்பதை உலக மாந்தர்கள் உணரும்படிச் செய்யவேண்டும் என்று திருவுளம் கொண்டாள் அம்பிகை. அதன்பொருட்டு சிவனாரின் மேனியில் பிரியாது இடம்பெற வேண்டும் என விரும்பினாள்.
அதற்காக தவமியற்ற எண்ணி பூலோகம் வந்து கெளதம முனிவரின் ஆசிரமத்தை அடைந்தாள். பிறகு, அந்த முனிவரின் வழிகாட்டல்படி, கேதாரம் எனும் தலத்துக்குச் சென்று, 21 நாள்கள் விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டாள்.
அவளது தவத்தால் மகிழ்ந்த சிவனார் அவளுக்குக் காட்சியளித்து, இனி என்றும் பிரியாதிருக்கும்படி தன் உடலின் இடப்பாகத்தில் அவளை இணைத்துக் கொண்டார். கேதாரீஸ்வர புராணம், சிவமகா புராணம், மச்ச புராணம் முதலியவற்றில் கேதார கௌரி வரலாறும் கேதாரீஸ்வர விரத மகிமையும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
விரதம் இருப்பது எப்படி?
இந்த விரதமே கௌரிதேவியைக் குறித்து நோற்கப்படும் விரதங் களில் மிக உயர்ந்ததாகும். இதனை தேவமாதர்கள் அனைவரும் கொண்டாடி அன்னையின் அருளைப் பெற்றதாகப் புராணங்கள் விளக்கும்.
முற்காலத்தில், கேதாரகௌரி விரதத்தின்போது, நீர்நிலைகளின் கரைகளில் வைத்து வழிபடுவது வழக்கம். தற்போது கோயில் வளாகங்களிலும், வீடுகளிலும் வைத்து இந்த வழிபாட்டை நிகழ்த்துகிறார்கள்.
பூஜை செய்யும் இடத்தில் ஒரு மேடை அமைத்து அதன்மீது பூரண கும்பத்தை அமைத்து வெள்ளைத் துணியை அணிவித்து, வெள்ளைக் கற்கள் இழைத்த ஆபரணங்களால் அலங்கரித்து, வெண்மையான மலர்களைச் சூட்ட வேண்டும்.
அந்தக் கௌரி கலசத்தின் மீது 21 முடிச்சுகளைக் கொண்ட நோன்புக் கயிற்றை வைத்துப் பூஜிக்கவேண்டும். வெண்தாமரை மலர்கள் (அ) இருபத்தோரு வகையான வெண் மலர்களால் பூஜிப்பது மிகவும் சிறப்பு.
கேதாரத்தில் தேவி 21 நாட்கள் பூஜித்துச் சிவனருள் பெற்றதன் நினைவாக. அவளுக்கு இருபத்தோரு வெற்றிலை பாக்கு, இருபத்தோரு முறுக்கு என்று எல்லாவற்றையும் இருபத்தொன்றாகவே படைக்க வேண்டும். 21 அதிரசங்கள் படைப்பது சிறப்பு.
அம்பிகையை வழிபட்ட பின்பு, அவளுடைய இருபத்தோரு பெயர்களைக் கூறி, நோன்புக் கயிறுகளை பூஜித்து வந்து மணிக் கட்டில் கட்டிக்கொள்ள வேண்டும். பிறகு, அனைவரும் கூடி நீர் நிலைகளுக்குச் சென்று அகல் விளக்குகளை நீரில் விட்டுக் கௌரி கங்கையை பூஜிக்க வேண்டும்.
பிறகு, வீட்டில் குல தெய்வத்தை முறைப்படி பூஜித்து வணங்க வேண்டும். அதன்பிறகு திருமணமான பெண்கள் தங்கள் கணவருக் கும் குழந்தைகளுக்கும் நோன்புக் கயிறுகளைக் கட்டிவிட வேண்டும். திருமணமாகிச் சென்றுள்ள பெண்களுக்குப் பிறந்த வீட்டிலிருந்து அதிரசத்தையும் நோன்புக் கயிறுகளையும் அனுப்பிவைக்க வேண்டும்.
இந்த வருடம் நோன்பு எப்போது?
ஐப்பசி அமாவாசை அன்று கேதாரகெளரி விரதம் இருப்பது சிறப்பு. இந்த தினம் 21-வது நாளாக வரும்படி விரதம் மேற்கொள் வார்கள். நிறைவு நாளான ஐப்பசி அமாவாசை அன்று அம்பாளை வழிபடுவார்கள்.
சில தருணங்களில், தீபாவளி அனுஷ்டிக்கப்படும் அன்றே அமாவாசை வந்துவிடும் ஆகையால், அன்று மாலையில் விரதம் இருந்து வழிபடுவது உண்டு. இந்த வருடம் தீபாவளி அன்று நரக சதுர்த்தசி (தேய்பிறை சதுர்த்தசி) வியாழன் – அக்.31 அன்று மாலை 4:28 வரை நீடிக்கிறது. அதன்பிறகு அமாவாசை.
என்றாலும் மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று அமாவாசை அதிகம் இருக்கும் நாள் என்பதால், அந்த தினத்திலேயே நோன்பு கடைப்பிடிக்கலாம். ஆக, நவம்பர்.1 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4:40 முதல் 7 மணிக்குள் அம்பாளை வழிபட்டு, அருள் பெறலாம்.