ஹைதராபாத்: சமீபகாலமாக பல்வேறு உடல் உபாதைகள் குறித்த புகார்கள் எழுந்த நிலையில் முட்டையிலிருந்து செய்யப்படும் மையோனைஸுக்கு தெலங்கானா அரசு ஓராண்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
புதன்கிழமை (அக்.30) முதல் அமலுக்கு வரும் இந்த தடை உத்தரவு ஒரு ஆண்டுகாலத்துக்கு நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு உணவு வகையான மையோனைஸ் பிரதானமாக சாண்ட்விச், ஷவர்மா, பர்கர் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. முட்டையின் வெள்ளை கருவுடன் எண்ணெய் சேர்த்து உருவாக்கப்படும் இது பாட்டில்களிலும், பாக்கெட்டுகளிலும் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. இது தற்போது சைவப் பிரியர்களுக்காக முட்டை கலக்காமலும் செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தெலங்கானாவில் ஃபுட் பாய்சன் தொடர்பான புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. பலரும் உடல் உபாதைகள் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக நடந்த ஆய்வில், இந்த உபாதைகளின் பின்னால் முட்டையிலிருந்து செய்யப்படும் மையோனைஸ் இருப்பது தெரியவந்துள்ளதாக தெலங்கானா உணவுப் பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் பிரிவு 30 (2) (a) படி முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்படுவதாக தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு விரைவில் அரசிதழிலும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களுடன் தொடர்புடைய சுகாதார அபாயங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் நேற்று முன் தினம் மோமோஸ் சாப்பிட்ட பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நடந்த இரு தினங்களில் தெலங்கானா அரசு மையோனைஸை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.