தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, சுவையான உணவு, கோயில் போன்ற அம்சங்களைத் தாண்டி இன்னொரு முக்கியமான விஷயமும் உண்டு!
அது சினிமா. ஆம், தீபாவளி நாளில் வெளியாகும் தனக்குப் பிடித்த நடிகரின் திரைப்படத்தை FDFS பார்த்தே தீர்வது என்பது தமிழர்களிடம் – குறிப்பாக இளைய தலைமுறையிடம் – பிரிக்க முடியாத அம்சமாக இருந்தது; இருக்கிறது. பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவாக இருந்த எண்பதுகளின் காலக்கட்டத்தில் இந்தப் போக்கு இருந்ததைக்கூட ஒருவாறு புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் OTT உள்ளிட்ட பல பொழுதுபோக்குகள் இருக்கும் தற்போதைய காலக்கட்டத்தில் கூட இந்த தீபாவளி சினிமா மோகம் பெரிதும் குறையாமல் இருப்பதைப் பார்க்கும் போது தமிழர்களின் சினிமாத்தாகம் இப்போதைக்கு அடங்காது என்பது தெளிவாகிறது. தீபாவளி தினத்தன்று எந்தெந்த முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகின.. அப்போது என்னவெல்லாம் நடந்தது என்பதை ரஜினி – கமல் காலக்கட்டம் தொடங்கி ஒரு உத்தேசமானப் பார்வையாக இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
வருடம் 1991.
கமல்ஹாசனின் ‘குணா’ மற்றும் ரஜினிகாந்தின் ‘தளபதி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் தீபாவளி நாளில் வெளியாகின. வழக்கமான தமிழ் சினிமாவின் சலிப்பூட்டும் அம்சங்களைத் தாண்டி புதுமையாக எதையாவது செய்வதை வழக்கமாக கமல் கொண்டிருந்ததால் நான் கமலின் ரசிகனாக இருந்தேன். எனவே ‘குணா’ திரைப்படத்தைத்தான் முதலில் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.
ஆனால் ‘தளபதி’ திரைப்படத்திற்குத்தான் அதிக டிமாண்ட். மணிரத்னமும் ரஜினியும் முதன்முறையாக இணைவதால் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ரஜினி ரசிகர்கள் வெறி பிடித்து அலைந்தார்கள். என்னுடைய நண்பர்களில் கமல் ரசிகர்களாக இருந்தவர்கள் கூட தலையில் முக்காடு போட்டுக் கொண்டு அந்தப் படத்திற்குத்தான் அடித்து பிடித்து டிக்கெட் வாங்கியிருந்தார்கள். தனக்குப் பிடித்த நடிகனின் திரைப்படத்தோடு, எதிர் டீம் நடிகரின் படத்தையும் பார்த்து விடுவது ஒரு மரபாக இருந்தது. அப்போதுதான் குட்டிச்சுவர் விவாதங்களில் பிடிக்காத நடிகரின் திரைப்படங்களில் உள்ள ஓட்டைகளை கிண்டலடித்து எதிர் டீம் நண்பர்களை நன்றாக வெறுப்பேற்ற முடியும்.
மணிரத்னத்தை பிடிக்கும் என்பதால் ‘தளபதி’யை முதலில் பார்த்து விட வேண்டும் என்கிற நப்பாசை எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. என்றாலும் ஒரு விசுவாசமான ரசிகனாக ‘குணா’ திரைப்படத்தின் காலைக்காட்சிக்குத்தான் முதலில் சென்றேன். ஆனால் எதிர்பார்த்திருந்ததற்கும் மேலாக அரங்கத்தில் கூட்டம் குறைவாக இருந்தது. என்னைப் போலவே விசுவாச ரசிகர்கள் மட்டும் வந்திருந்தார்கள். ‘தளபதி’க்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் கூட அதில் கலந்திருக்கலாம். படம் பார்த்தேன். அப்போதே தெரிந்து போயிற்று. நல்ல முயற்சி. ஆனால் படம் ஓடாது. ‘படம் பிடிக்கவில்லை’ என்பதை உணர்ந்திருந்தாலும் ‘செம படம்.. தலைவன் கெத்து காட்டிட்டான்’ என்று எதிர் டீம் ரசிகர்களிடம் பொய்யாக சீன் போடுவதுதான் ஒரு நல்ல ரசிகனின் வழக்கம்.
ஆனால் ‘குணா’ ஒரு நல்ல திரைப்படம் என்று உறுதியாகத் தோன்றினாலும் எதிர் டீமிடம் எப்படி நிரூபிப்பது? மேலும் கூட்டமும் குறைவாக இருந்ததால் ஏமாற்றமாக இருந்தது. படத்தின் உள்ளடக்கத்தை விடவும் எவ்வளவு வசூல் ஆனது, எத்தனை நாட்கள் ஓடியது என்கிற கணக்குதான் குட்டிச்சுவர் விவாதங்களில் வெல்லும். சம்பந்தப்பட்ட படத்தின் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் கூட அறியாத புள்ளி விவரங்கள் இந்த விவாதங்களில் இரைபடும்.
முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு மதியக் காட்சிக்கு ‘தளபதி’ படத்திற்கு சென்றேன். அரங்கமே நிரம்பி வழிகிறது. ‘ஹவுஸ்புல்’. பார்க்கவே வயிற்றெரிச்சலாக இருந்தது. நண்பனிடம் சொல்லி வைத்திருந்ததால் எப்படியோ ஒரு டிக்கெட் கிடைத்தது. பார்த்தேன். அது இயக்குநரின் படமாகவும் இல்லாமல் ரஜினியின் படமாகவும் இல்லாமல் ஒரு சரியான பேலன்ஸை மணிரத்னம் பின்பற்றியிருந்தார். “என்னா மச்சி. உங்காளு படம் செம மொக்கையாமே?” என்று எதிர் டீம் நண்பர்கள் குதூகலமாக வந்து வெறுப்பேற்றினார்கள்.
நான் தலையை நிமிர்த்திக் கொண்டு ‘டேய். அதெல்லாம் ஒரு காவியம். இன்னிக்கு இல்லைன்னாலும் பத்திருபது வருஷம் கழிச்சு ஊர் கொண்டாடும். உங்களால அந்தப் படத்தைப் புரிந்து கொள்ள முடியாது” என்று தீர்க்க தரிசனத்துடன் சொன்னேன். “ஆனா.. ஊனா இதையே சொல்லி ஒப்பேத்துங்க.. போங்கடா டேய்.. ஊ.. ஊ…” என்கிற வெறிக்கூச்சலுடன் அடுத்த காட்சிக்கும் டிக்கெட் தேடி ரஜினி ரசிக நண்பர்கள் ஓடினார்கள்.
குட்டி பிளாஷ்பேக்:
சற்று பிளாஷ்பேக்கிற்கு செல்வோம். ரஜினியும் கமலும் இணைந்து நடித்துக் கொண்டிருந்த படங்கள் ஒரு காலத்தில் தொடர்ந்து வெற்றி பெற்றன. கமல் அப்போதே அறியப்பட்ட நடிகராக உயர்ந்திருந்தார். புதுமுகமாக இருந்தாலும் தன்னுடைய தனிப்பட்ட ஸ்டைல் காரணமாக இளைய தலைமுறையினரை கவர ஆரம்பித்திருந்தார் ரஜினி. இருவரையும் இணைத்து கதை ரெடி செய்து ஒரு பேக்கேஜ் ஆக படம் தயாரித்தவர்கள் சிறப்பாகக் கல்லா கட்டினார்கள். அப்போது கமல் எடுத்த முடிவு முக்கியமானது. “இதோ பாருங்க.. ரஜினி.. இனி நீங்களும் நானும் சேர்ந்து நடிக்க வேணாம்.. நம்மள வெச்சு இவங்க சம்பாதிக்கறாங்க.. தனித்தனியா நடிச்சா ரெண்டு பேர் சம்பளமும் உயரும்”.
கமலின் அந்த தொலைநோக்குப் பார்வை சரியாக வேலை செய்தது. கமலை விடவும் அதிக சம்பளம் பெறும் ‘சூப்பர் ஸ்டார்’ அந்தஸ்திற்கு ரஜினி விரைவிலேயே உயர்ந்தார். ஒரு துறையில் எப்போதுமே வணிகப் போட்டி இருப்பது அந்தத் துறையின் ஆரோக்கியத்திற்கு நல்லது. சினிமாவிலும் அப்படியே. தியாகராஜ பாகவதர் – பி.யூ. சின்னப்பா, எம்.ஜி.ஆர் – சிவாஜி என்று இரு நடிகர்கள் முன்னணி நிலவரத்தில் இருக்கும் கதை எப்போதுமே தொடர்கிறது. இதைப் பற்றி விகடன் தளத்தில் வெளியாகியிருக்கும் ‘நானும் நீயுமா?’ என்கிற தொடரில் விரிவாக எழுதப்பட்டிருப்பதை நண்பர்கள் வாசிக்கலாம்.
வருடம் 1980.
ரஜினியின் ‘பொல்லாதவன்’ திரைப்படமும் கமலின் ‘வறுமையின் நிறம் சிவப்பு் திரைப்படமும் ஒரே தீபாவளி நாளில் வெளியானது. இதில் எது மாஸ் எது கிளாஸ் என்பதை ஒரு சாதாரண ரசிகன் கூட அறிந்து கொள்ள முடியும். வசூலில் எப்போதுமே ரஜனியின் படங்கள் முந்திச் செல்வது தொடர் வழக்கமாக இருந்தது. இந்த விஷயத்தில் எதிர் டீம் ரசிகர்களிடம் நாங்கள் மூக்குடைபடுவதும் வழக்கமாக இருந்தது. என்றாலும் ‘கமல் ஆக்டிங் செம.. ரஜினி சும்மா ஸ்டைல் காட்டினா போதுமா?” என்று சொல்வதின் மூலம் எங்களை நாங்களே சமாதானப்படுத்திக் கொள்வோம்.
வருடம் 1981
ரஜினியின் ‘ராணுவ வீரனும்’, கமலின் ‘டிக் டிக் டிக்’ திரைப்படமும் ஒரே தீபாவளி நாளில் வெளியானது. ரஜினி படத்திற்கு சுமாரான வரவேற்பு மட்டுமே கிடைத்ததில் எங்களுக்கு பரம ஆனந்தம். கமல் படமும் சுமாராகத்தான் ஓடியது. என்றாலும் ‘எங்காளு படம் பார்த்தியா.. ஹாலிவுட்காரனே மிரண்டுட்டான்’ என்று சொல்லி ஆறுதல்பட்டுக் கொண்டோம்.
ரஜினி மற்றும் கமலின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி மோதிக் கொண்ட சம்பவம் 17 முறை நடந்திருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. ரஜினியின் பாதை மிகத் தெளிவானது. தனது படங்கள் கமர்சியல் வெற்றியடைய வேண்டும். தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படக்கூடாது. ரசிகர்கள் பரம திருப்தியை அடைய வேண்டும். எனவே காட்டுக்குதிரை மாதிரி தன்னுடைய பாதையில் அசுரத்தனமாக ஓடிக் கொண்டிருந்தார். ஆனால் உலகத் திரைப்படங்களை பார்க்கும் கமலுக்கு தான் நடிக்கும் மசாலா சினிமாக்கள் மீது உள்ளூற ஒவ்வாமை இருந்தது. எனவே தமிழ் சினிமாவில் நல்ல முயற்சிகளை தருவதில் அவர் சளைக்காமல் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். என்றாலும் ரஜினி என்கிற போட்டியாளருக்கு ஈடு கொடுத்து ஃபீல்டில் நின்றாகவும் வேண்டும். அந்த நெருக்கடியில் ‘சகலகலா வல்லவன்’ போன்ற அப்பட்டமான மசாலா சினிமாக்களில் நடித்து ரஜினிக்கு டஃப் பைட் தர முயன்றார். என்றாலும் பாக்ஸ் ஆஃபிஸ் கிங் என்றால் அது ரஜினிதான். அதே போல இன்றைக்கு திரைப்படம் எடுக்கவரும் இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் பலரும் கமலின் படங்கள்தான் தங்களுக்கு முன்னோடி என்கிற அளவுக்கான திரை ஆளுமை கமல் என்பது நாம் சொல்லித் தெரியத்தேவையில்லை.
சமர்த்தான ரசிகர்களான நாங்கள், குட்டிச்சுவரில் அமர்ந்து வெட்டி விவாதங்களுடன் வாயால் சண்டை போட்டுக் கொள்வதோடு சரி. அத்துடன் கலைந்து விடுவோம். ஆனால் தீவிரமான ரசிகர்களின் செயற்பாடுகளில் முரட்டுத்தனமும் வன்முறையும் கலந்திருந்தது. பண்டிகை நாளன்று திரைப்படங்கள் வெளியாகும் சமயத்தில் ஒரு வாரத்திற்கு முன்பே பதட்டம் ஆரம்பித்து விடும்.
சுவரொட்டி ஒட்டுவதில் சண்டை, யார் அதிக உயரத்திற்கு கட்அவுட் வைக்கிறார்கள் என்பதில் போட்டி, திரையரங்கத்தின் வாசலில் நிகழும் மண்டை உடைப்புகள் என்று ரணகளமாக இருக்கும். குறிப்பாக ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த நபர்கள் இம்மாதிரியான தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவது தொன்று தொட்ட வழக்கமாக இருந்தது. எம்.ஜி.ஆர் – சிவாஜி காலத்திலும் இப்படித்தான் இருந்தது. அஜித் – விஜய் காலத்திலும் இதுவே தொடர்ந்தது. எனவே ரஜினி -கமல் காலத்தில் இருந்ததில் ஆச்சரியமில்லை. இது போன்ற சமயங்களில் பொதுவான ரசிகர்கள் தங்களின் குடும்பத்தோடு தியேட்டருக்கு வரவே அச்சப்பட்டார்கள். அரங்கத்தின் வெளியேயும் உள்ளேயும் அத்தனை கலாட்டாக்கள் நிகழும். நிம்மதியாக படம் பார்க்க முடியாது. எனவே ரசிகர்களின் தொந்தரவுகள் ஓய்ந்து மூன்று நாட்கள் கழித்தே குடும்பம் குடும்பமாக வருவது வழக்கம்.
ரசிகர்களின் இந்த வெறித்தனமான போக்கும் மோதல்களும் கமலை கவலைப்பட வைத்தது. எனவே தனது ரசிகர் மன்றங்களை ‘நற்பணி மன்றங்களாக’ மாற்றி பல நல்ல விஷயங்களை செய்ய வைத்து ஒரு சிறந்த முன்னுதாரணமாக மாறினார். ரசிகர்களின் அறியாமையை முதலீடாகக் கொண்டு பொருள் ஈட்டுவதையும் அரசியல் கனவுகளை வளர்த்துக் கொள்வதையும் செய்வதே பெரும்பாலான நடிகர்களின் வழக்கமாக இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் தனது ரசிகர்களை நல்வழிப்படுத்த முயன்ற கமல் பாராட்டத்தக்கவர். ரஜினியால் இப்படிச் செய்ய முடியாவிட்டாலும் ‘உங்க குடும்பத்தைப் பாருங்க. பெத்தவங்களை கவனிங்க. உங்க வளர்ச்சிதான் முக்கியம். அப்புறம்தான் சினிமா’ என்று பெரும்பாலான மேடைகளில் தனது ரசிகர்களை தொடர்ந்து அறிவுறுத்தினார்.
ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று அப்போது வெகுவாக நம்பப்பட்டது. கமல் வரமாட்டார் என்பதை அவரே பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தினார். ஆனால் காலம் என்பது ஆச்சரியங்கள் நிறைந்தது. பிறகு என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியும்.
முன்னணி நடிகர்களாக இருந்தாலும் ஒரே வருடத்தில் நிறைய திரைப்படங்கள் வெளிவருவது அந்தக் காலக்கட்டத்தின் வழக்கமாக இருந்தது. எஸ்.பி.முத்துராமன் போன்ற அனுபவம் வாய்ந்த இயக்குநர்கள், மெஷின்கன்னால் சுடுவது போல குறுகிய காலத்தில் நிறையப் படங்களை இயக்கி வெளியிட்டார்கள். ஆனால் ஒரு காலக்கட்டத்தில் இந்த நிலைமை மாறியது. சின்னத்திரையின் ஆதிக்கம் பெருகி, பொழுதுபோக்கு அம்சங்கள் பெருகி விட்ட சூழலில் ரசிகர்களை பெரிய திரைக்கு வர வேண்டுமென்றால் அதற்கு ஏற்ப பிரமாண்டமான திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்கிற நெருக்கடி அதிகமானது. திரைப்படத்தின் பட்ஜெட்டுகள் கோடிகளில் புழங்குவது சகஜமானது. தமிழ் சினிமாவின் வணிகம் உலகளாவிய அளவிற்கு விரிவடைந்தது. ஒரே நாளில் உலகம் முழுவதும் திரைப்படங்கள் வெளியாகின. எனவே ஒவ்வொரு திரைப்படத்தையும் கவனமாக உருவாக்க வேண்டும் என்கிற கட்டாயம் முன்னணி ஹீரோக்களுக்கு ஏற்பட்டதால் வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இடைவெளி அதிகமானது.
ரஜினி – கமலுக்குப் பிறகு விஜய் – அஜித் என்கிற அடுத்த தலைமுறைகளின் அத்தியாயம் ஆரம்பித்தது. இரண்டு முன்னணி நடிகர்கள் இருந்தாலும் ஒருவரின் சந்தை நிலவரம் சற்று அதிகமாகவும் அடுத்தவரின் சந்தை நிலவரம் சற்று கீழே இறங்கியும் இருக்கும். ஒருவர் மாஸ் ஹீரோவாக இருப்பார். இன்னொருவர் அதனுடன் சேர்ந்து நன்றாக நடிக்கவும் செய்வார். பாகவதர்-சின்னப்பா, எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி -கமல் என்கிற இந்த வரிசையைப் பார்த்தால் புரியும். ஆனால் விஜய் – அஜித் காலக்கட்டத்தில் இருவருமே மாஸ் ஹீரோக்களுக்கான போராட்டத்தில் இருந்தார்கள்.
இதில் அஜித்தாவது சற்று வித்தியாசமான பாத்திரங்களை ஏற்றார். ஆனால் விஜய்யோ கெட்டப் கூட மாற்றாமல் ஒரே மாதிரியான டெம்ப்ளேட்டில் பாதுகாப்பாக பயணம் செய்தார். ஆனால் விஜய்யின் சந்தை நிலவரம் அஜித்தை விடவும் சற்று மேலே பயணித்தது என்பதை சொல்லியாக வேண்டும். கிளாஸை விடவும் மாஸிற்கே அதிக வரவேற்பு கிடைக்கும் என்பதை மக்கள் தொடர்ந்து நிரூபித்தார்கள்.
வருடம் 2002:
அஜித்தின் வில்லனும் விஜய்யின் பகவதியும் ஒரே தீபாவளி நாளில் வெளியானது. சுவாரசியமான திரைக்கதை காரணமாக வில்லன் முன்னணியில் இருக்க பகவதி பின்தங்க வேண்டியிருந்தது. அடுத்த வருடத்தில் இந்த நிலைமை தலைகீழானது. அஜித்தின் ‘ஆஞ்சநேயா’ படுதோல்வி அடைந்து மண்ணைக் கவ்வ, விஜய்யின் ‘திருமலை’ சூப்பர் ஹிட். இப்படியாக சந்தை நிலவரம் மாறினாலும் இருவருக்குமான ரசிகர்கள் விசுவாசமாக பெருகிக் கொண்டே இருந்தார்கள்.
விஜய் – அஜித்திற்குப் பிறகு தனுஷ் – சிம்பு என்கிற மாதிரி இந்த வரிசை தொடர்ந்தாலும் சமகால நிலவரத்தைக் கவனித்தால் இதற்குப் பின் எந்தவொரு வரிசையும் துல்லியமாக உருவாகாமல் இருப்பதைக் கவனிக்க முடிகிறது. அதாவது யாருடைய திரைப்படம் அப்போதைக்கு ஹிட் ஆகி கல்லாவை நிரப்புகிறதோ, அன்றைய தேதியில் அவரே ‘மாஸ்’ நடிகர். பங்குச் சந்தை நிலவரம் மாதிரி இது மாறிக் கொண்டே இருக்கிறது.
ஒரு சினிமா ரசிகன் தனக்குப் பிடித்த நடிகனுக்காக ஏன் இத்தனை மல்லுக்கட்ட வேண்டும்? பொருள் இழப்பு, மனிதவளம் வீணாதல், ரசிகர்களிடையே வன்முறை என்று ஒவ்வொரு தலைமுறையிலும் இப்படியாக ஏராளமான இழப்புகள் ஏற்படுகின்றன. மட்டுமன்றி, இப்படியான கண்மூடித்தனமான ரசிகர்களால் மசாலா சினிமாக்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன. தரமான சினிமாக்களின் வருகை இதனால் பெரிய தடைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தனக்கான சுய அடையாளத்தைத் தேடிய படியே இருக்கிறான். சக மனிதனை விடவும் தான் உயர்ந்தவன் என்பதை அவன் நிரூபித்தாக வேண்டிய கட்டாயம்.
தன்னுடைய சுயஉழைப்பு, திறமை போன்றவற்றால் இந்த அடையாளங்களை அடைபவர்கள் குறைவு. ஆனால் இதற்கான மெனக்கெடாமல் குறுக்குவழியில் செல்பவர்கள்தான், நடிகர்களின் பிம்பங்களை எடுத்து தன் மீது போர்த்திக் கொள்ள முயல்கிறார்கள். ‘இன்னாரின் ரசிகன்’ என்று வெறித்தனமாக காட்டிக் காெள்வதின் மூலம் சமூகத்திலிருந்து தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள். ஆனால் ‘குறிப்பிட்ட நடிகரின் ரசிகன்’ என்கிற இந்த இரவல் அடையாளம் தற்காலிகம்தான். நம்முடைய சொந்த உழைப்பில் கிடைக்கும் அடையாளம்தான் நிரந்தரமானது. சிறியதாக இருந்தாலும் ஆத்ம திருப்தியைத் தருவது.
இப்போதைய நிலவரத்தைக் கவனித்தால் விஜய் சினிமாவிலிருந்து அரசியலில் இறங்கியிருக்கிறார். எனவே அஜித்திற்கான எதிர்முனை காலியாகியிருக்கிறது. ஆனால் அப்படியும் சொல்லி விட முடியாது. இன்றைய தேதியில் எந்தத் திரைப்படம் சுவாரசியமாக இருக்கிறதோ, அதுவே பிரம்மாண்டமான வெற்றியை அடைய முடியும். உதாரணம் ‘லப்பர் பந்து’. ஸ்டார் நடிகர், பெரிய பட்ஜெட், பிரமாண்டமான மார்ககெட்டிங் மூலம் ஒரு திரைப்படத்திற்கு வெற்றி தேடித் தர முடியாது.
2024 தீபாவளி நாளில் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’, ஜெயம் ரவியின் ‘பிரதர்’, கவினின் ‘பிளடி பெக்கர்’ ஆகிய மூன்று படங்கள் வெளியாகிறது. இதில் சிவகார்த்திகேயன் `துப்பாக்கியை கையில் வாங்கிய’ பிறகு களமிறங்கியிருக்கிறார். இதிலிருந்தே நிலைமையில் கணிசமான மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணரலாம். இதில் ‘தக்கன பிழைக்கும்’ – Survival of fittest என்பதே காலம் நமக்கு சொல்லும் சேதி.
நீங்கள் பார்த்த `DIWALI FDFS’ அனுபவத்தைக் கமென்ட்டில பகிருங்கள்!