புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளம் மூலம் நேற்று மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விமான நிலைய காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்தூர் வழியாக டெல்லி மற்றும் மும்பையை இணைக்கும் ஏர் இந்தியா விமானம் ஏஐ 636-ல் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக எக்ஸ் வலைதளம் மூலம் செவ்வாய்க்கிழமை மாலை 5.08 மணிக்கு மிரட்டல் வந்தது. ஏற்கெனவே டெல்லியிலிருந்து வந்த அந்த விமானம் இந்தூரிலிருந்து மும்பையை நோக்கி மாலை 4.38 மணிக்கு புறப்பட்டு சென்றது. இந்த சூழ்நிலையில் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு நடத்தப்பட்ட சோதனையில் அந்த பைப் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. மிரட்டல் விடுத்த நபரை கண்டறியும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மிரட்டல் விடுத்த அடையாளம் தெரியாத நபர் மீது பிஎன்எஸ் சட்டப் பிரிவு 351 (4) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று மட்டும் பல்வேறு விமான நிறுவனங்களுக்கு 100 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. அதேபோன்று, கடந்த 16 நாட்களில் 510 -க்கும் மேற்பட்ட உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பபட்டது. ஆனால், அவை அனைத்தும் புரளி என்பது விசாரணைக்கு பின்னர் தெரியவந்தது. இந்த மிரட்டல்கள் அனைத்தும் எக்ஸ் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக விடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, இவற்றை உடனடியாக நீக்க எக்ஸ் மற்றும் மெட்டா போன்ற சமூக வலைதள நிறுவனங்களுக்கு ஐடி அமைச்சகம் அறிவுறுதல்களை வழங்கியுள்ளது.