பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி, கிண்டி ஆளுநர் மாளிகையில், முத்துராமலிங்கத் தேவர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், ரகுபதி, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கப்பாண்டியன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் நந்தனம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும், சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்துக்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினர்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கோகுல இந்திரா, பொன்னையன், தமிழக பாஜக சார்பில் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, மூத்த தலைவர் கே.வீ.தங்கபாலு உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தமாகா கட்சி தலைவர் ஜி.கே.வாசன், அமமுக சார்பில் தென்சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் ஜி.செந்தமிழன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜேந்திரன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அம்பத்தூர் பாலமுருகன் உள்பட பல்வேறு கட்சியினர், தேவர் சமுதாய அமைப்புகள், பொதுமக்கள் என ஏராளமானோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும், பால் குடம் எடுத்து வந்தும் மரியாதை செலுத்தினர்.
மேலும், ஆளுநர், முதல்வர், அரசியல் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ரவி: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஒரு சிறந்த இந்திய தேசியவாதியாகவும் காலனித்துவ ஆட்சியிலிருந்து இந்திய சுதந்திரத்துக்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர். சுதந்திரத்துக்குப் பிறகு சமூகத்தின் தாழ்த்தப்பட்ட மற்றும் விளிம்புநிலை பிரிவினரின் உரிமைகளுக்காக போராடுவதன் மூலம் ஒரு நல்லிணக்கமான தேசத்தை அவர் கட்டியெழுப்பினார். இந்த மகத்தான தேசிய வீரருக்கு தேசம் இதயபூர்வமாக அஞ்சலி செலுத்துகிறது.
முதல்வர் ஸ்டாலின்: சமூக நல்லிணக்கத்துக்காகப் பாடுபட்ட உத்தமர். தென்னகத்தின் போஸ். கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் வாழும் பசும்பொன் திருமகனாரின் புகழ் வாழ்க. வாழ்விக்க வந்த வள்ளலாரின் நெறியைப் போற்றி வாழ்ந்த பசும்பொன் திருமகனாரின் அறப்பணிகளைப் போற்றி வணங்குகிறேன்.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: மக்கள் நலனுக்காக அயராது பாடுபட்டவரும், சாதி, மத பேதங்கள் கடந்து மக்களின் பெருமரியாதையைப் பெற்றவருமான தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெரும்புகழை போற்றி வணங்குகிறேன்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: அனைத்து சமுதாய மக்களும் ஆலயத்துக்குள் செல்ல ஆலய நுழைவுப் போராட்டத்தை முன்னெடுத்தவர். குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்துப் போராடி, ஒரு பெரும் சமூகத்தின் விடுதலைக்கு முக்கிய பங்காற்றியவர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் புகழை போற்றி வணங்குகிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: தேச விடுதலைக்காகப் போராடிய தேவர் பெருமகனார். விடுதலைக்குப் பிறகு தாம் சார்ந்த மக்களுக்கான போராட்டத்தைத் தீவிரப்படுத்தி குற்றப்பரம்பரை சட்டத்தை ரத்து செய்ய வைத்தார். ஒடுக்கப்பட்ட மக்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்காகவும் போராடிய பெருமகனார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: தேவர் திருமகனாரின் தியாகத்தை நினைவுகூரும் அதேநேரத்தில், அவருடைய கொள்கைகள் நிறைவேற்றப்பட நாம் அனைவரும் பாட வேண்டும் என்று இந்நாளில் உறுதி ஏற்போம்.
தவெக தலைவர் நடிகர் விஜய்: இந்திய விடுதலைக்காக காத்திரமாகக் களமாடியவர். தமிழக அரசியலின் முக்கிய அடையாளங்களில் ஒருவராக மாறிய, மகத்தான மனிதரை அவரது குருபூஜை திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், பாமக தலைவர் அன்புமணி, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாஜக நிர்வாகி சரத்குமார் உள்பட கட்சித் தலைவர்கள் பலர் புகழாரம் சூட்டியுள்ளனர்.