Rinku Singh | ஐபிஎல் 2025 தொடருக்காக பிளேயர்கள் தக்க வைத்த பட்டியலை 10 அணிகளும் வெளியிட்டுள்ளன. கேகேஆர் அணியில் ஆச்சரியப்படும் விதமாக ரிங்கு சிங் முதல் பிளேயராக 13 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்டுள்ளார். அணிக்கு விசுவாசமாக இருந்ததால் இவ்வளவு பெரிய தொகையை கொடுத்திருக்கிறது கேகேஆர் அணி. 7 ஆண்டுகளாக அந்த அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் ரிங்கு சிங், சம்பளமாக வெறும் 55 லட்சம் ரூபாயை மட்டுமே பெற்றார். அவரை விட இளம் பிளேயர்கள், புதிதாக கேகேஆர் அணிக்கு சென்ற பிளேயர்கள் எல்லாம் பல கோடி ரூபாய் ஊதியம் பெற்றனர். கடந்த ஐபிஎல் போட்டியில் 24 கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்து மிட்செல் ஸ்டார்க்கை வாங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
ஒரு பிளேயருக்கு ஐபிஎல் வரலாற்றில் கொடுக்கப்பட்ட அதிகபட்ச ஊதியமாக இருந்த நிலையில் ரிங்கு சிங் அப்போதும் பெற்ற சம்பளம் 55 லட்சம் ரூபாய்தான். இதுகுறித்து ரிங்கு சிங் பேசும்போது, “என்னை பொறுத்தவரை 55 லட்சம் ரூபாயே பெரிய தொகை தான். 10 ரூபாய், 5 ரூபாய் தொகைகளுக்காக நான் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறேன். அதனால் பணத்தின் மதிப்பு என்ன என்பது எனக்கு தெரியும். என்னை பொறுத்தவரை இந்த தொகையே எனக்கு பெரியது தான். இந்த தொகையை வைத்து நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.” என தெரிவித்தார். அவரின் இந்த பேட்டி ஷாருக்கானை மிகவும் ஈர்த்தது.
அதனால் எதிர்வரும் ஐபிஎல் தொடருக்காக ரிங்குசிங்கை 13 கோடி ரூபாய் கொடுத்து தக்க வைத்திருக்கிறது கேகேஆர் அணி. அவரைத் தொடர்ந்து வருண் சக்கரவர்த்தி 12 கோடி ரூபாய், சுனில் நரைன் 12 கோடி ரூபாய், ஆன்ரே ரஸ்ஸல் 12 கோடி ரூபாய், ரமன்தீப் சிங், ஹர்ஷித் ரானா ஆகியோர் தலா 4 கோடி ரூபாய் ஊதியத்தில் தக்க வைக்கப்பட்டுள்ளனர். வியப்பான விஷயம் என்னவென்றால், நடப்பு சாம்பியனான அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரை அந்த அணி தக்க வைக்கவில்லை. ஒரு ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த ஒரு கேப்டன் அடுத்த ஐபிஎல் தொடரிலேயே ஏலத்துக்கு வருவது இதுவே முதன்முறையாகும்.
ஸ்ரேயாஸ் அய்யர் உடன் கேகேஆர் அணி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அணி நிர்வாகத்துக்கும் அவருக்கும் உடன்பாடு எட்டவில்லை. இதனால், கேகேஆர் அணியில் இருந்து வெளியேற முடிவு செய்துவிட்டார். இருப்பினும் இன்னும் ஒரு வாய்ப்பு கேகேஆர் அணியிடம் இருக்கிறது. ஆடிஎம் கார்டு மூலம் தங்கள் அணியில் இருக்கும் ஒரு பிளேயரை மீண்டும் ஏலத்தின்போது கொண்டு வர முடியும். ஏலத்தில் ஸ்ரேயாஸ் அய்யருக்கு அந்த ஆப்சனை கேகேஆர் அணி பயன்படுத்துமா? என்பது இன்னும் சஸ்பென்ஸாக இருக்கிறது. அதேநேரத்தில் ஸ்ரேயாஸ் அய்யரை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஏலத்தில் எடுக்கவும் திட்டமிட்டிருக்கிறது. இது குறித்து அவருடன் அந்த அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.