மேஜர் முகுந்த் வரதராஜனின் கதை அமரன் திரைப்படமாக வெளியாகியிருக்கிறது. முகுந்தின் கதையைப் பேசும்போது மறக்க முடியாத மற்றொரு நபர்தான் சிப்பாய் விக்ரம் சிங்.
ஹரியானாவைச் சேர்ந்த இவர், 2002ம் ஆண்டு தனது பத்தொன்பது வயதில் ராணுவத்தில் இணைந்தார். இவர் ராஜ்புத் ரெஜிமெண்டின் 17வது பட்டாலியனில் சேர்க்கப்பட்டார்.
சில ஆண்டுகள் கழித்து 2012ல் 44 ராஷ்ட்ரியா ரைஃபில்ஸ் பட்டாலியனுக்கு மாற்றப்பட்டார். ஜம்மு – காஷ்மீர் பகுதிக்கு மாற்றப்பட்டு தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டார்.
சிப்பாய் விக்ரம் சிங்கின் மனைவி சுசிலா, இவர்களது மகன் அபிஷேக். ராணுவத்தின் பல நடவடிக்கைகளில் வெற்றிகரமாக செயலாற்றியிருக்கும் இவர், மேஜர் முகுந்த் வரதராஜனின் நண்பராகவும் இருந்துள்ளார்.
25, ஏப்ரல் 2014ல் ஜம்மு காஷ்மீரில் உளவு தகவல் அடிப்படையில் ஒரு ஆன்டி-டெரரிஸ்ட் ஆபரேஷனில் இறங்கினர். தயாராவது முதல் தீவிரவாதிகள் தங்கியிருந்த வீட்டை டார்கெட் செய்வதுவரை மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு உதவியிருக்கிறார் விக்ரம் சிங்.
தாக்குதலின் போது முகுந்தை கவர் செய்வதற்காக பலமுறை உயிரைப் பணயம் வைத்தார் விக்ரம் சிங்.
குடியிருப்பு வீட்டில் ஒரு தீவிரவாதியை வீழ்த்திய ராணுவ வீரர்களின் குழு, அவர்களின் இலக்கான ஹிஸ்புல் முஜாகிதீன் மூத்த தளபதி அல்டாஃப் வானி தப்பியோடிய சிமெண்ட் அவுட்ஹவுஸுக்கு வந்தது.
உள்ளே நுழையவே முடியாத அந்த இடத்துக்குள் முகுந்தும் விக்ரம் சிங்கும் தைரியமாக ஊர்ந்து சென்றனர். ஏற்கெனவே சண்டையில் காயமடைந்திருந்தார் முகுந்த். அதனால் தானாக முன்வந்து முதலாவதாக உள்ளே சென்றார் சிப்பாய்.
தீவிரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்குமான சண்டையில் விக்ரம் சிங்கின் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டு, உயிரிழந்தார் விக்ரம். ராணுவ வீரனுக்கான உட்சபட்ச தீரத்தை வெளிப்படுத்திய அவருக்கு மூன்றாவது பெரிய அமைதி கால விருதான சௌரியா சக்ரா வழங்கப்பட்டது.