Lucky Baskhar Review: அட்டகாச துல்கர், மீனாட்சி; நிதிக் குற்றப் பின்னணியில் ஒரு மிரட்டல் த்ரில்லர்!

1992-ம் ஆண்டு மும்பை மகதா வங்கியில் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜராகப் பணிபுரியும் பாஸ்கர் (துல்கர் சல்மான்), காலை நடைப்பயிற்சியில் இருக்கும்போது திடீரென சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்படுகிறார். அங்கிருந்து கதை மூன்று ஆண்டுகளுக்குப் பின் செல்ல, அதே வங்கியில் சாதாரண கேஷியராக (காசாளர்) வேலை செய்யும் பாஸ்கர், தன் மனைவி சுமதி (மீனாட்சி சௌத்ரி), மகன் கார்த்திக் (ரித்விக்), தந்தை, தம்பி, தங்கை ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக மிடில் கிளாஸ் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். எப்படியாவது தன் குடும்பத்தின் அந்தஸ்தை உயர்த்த வேண்டும் என்று ஓடுகிற பாஸ்கரை, பொருளாதார கஷ்டங்கள் மற்றும் கடன் பிரச்னைகள் பிடித்து பின்னால் இழுக்கின்றன.

மேலும் அடிமேல் அடியாக நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வும் மறுக்கப்பட்டு, அவரின் நேர்மையின் மீது குற்றமும் சுமத்தப்படுகிறது. இதனால் உடைந்துபோகும் பாஸ்கர், சட்டவிரோதமாகப் பணம் சம்பாதிக்கும் வழிக்குச் செல்கிறார். அதன்பின் என்னவெல்லாம் நடந்தது, பாஸ்கர் தப்பித்தாரா என்பதை நிதி குற்றங்கள் சார்ந்த கிரைம் த்ரில்லராகச் சொல்கிறது இந்த ‘லக்கி பாஸ்கர்’.

Lucky Baskhar Review

‘இவனால் இதை நிச்சயம் செய்யமுடியும்’ என்று நம்ப வைக்கிற தந்திரமான புத்திசாலி கதாபாத்திரத்துக்கு ‘பிளாங்க் செக்’ கொடுத்து வரவேற்கும் அளவுக்குச் சாதுரியமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் துல்கர் சல்மான். வருத்தம், ஆதங்கம், நெகிழ்ச்சி, கெத்து, திமிர், மாஸ், முதிர்ச்சி எனக் கதையில் வரும் அனைத்து மாற்றங்களுக்கும் வளைந்து நல்ல நடிப்பின் கணக்கில் வரவை அள்ளுகிறார். குடும்பத்தை விட்டுக்கொடுக்காத மனைவியாக வரும் மீனாட்சி சௌத்ரி, ‘வடாபாவ்’ காட்சியில் நெகிழ்ச்சியையும், தனது வீட்டில் அம்மாவையே எதிர்க்கிற இடத்தில் கோபத்தையும் அற்புதமாகக் கடத்தியிருக்கிறார். இவருக்கும் துல்கருக்குமான கெமிஸ்ட்ரி பிரமாதம். நண்பராக நடித்துள்ள ஹைப்பர் ஆதிக்கும், அந்தோணியாக வரும் ராம்கிக்கும் சில பல விசில்கள் பறக்கிற முக்கிய வேடங்கள். மாஸ்டர் ரித்விக் நெகிழ்ச்சியான காட்சியில் குறைசொல்லமுடியாத நடிப்பை வழங்கியிருக்கிறார். திக்கென தூக்கி வாரிப்போடும் காட்சியில் தனது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் சச்சின் கேடேகர்.

வர்த்தக நகரத்தின் நெரிசலை உணர்கிற அளவுக்கு நேர்த்தியான ஒளிவடிவமைப்பை செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி. இரவு நேரக் காட்சிகளிலும், க்ளைமாக்ஸ் காட்சிகளிலும் தேவையான ஒளியுணர்வை கச்சிதமாகக் கடத்தியிருக்கிறார். இந்த ஒளிப்பதிவின் மதிப்பைத் தங்கத்தின் விலை போல ஏறவைத்து, அன்றைய காலகட்டத்துக்கே கூட்டிச்செல்கிறார் கலை இயக்குநர் பங்லான். முன்னுக்கும் பின்னுக்கும் நகர்கிற கதையின் போக்கை அனைவருக்கும் புரிகிற வகையில் நேர்த்தியாகத் தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் நவீன் நூலி. பின்னணி இசையில் சரவெடியாக வெடித்திருக்கிறது ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை. பாடல்களும் கதையின் போக்கை எந்த இடத்திலும் தொந்தரவு செய்யாத மினிமம் கேரன்ட்டி மெட்டீரியல். தமிழ் டப்பிங்கும் சிறப்பாகப் பொருந்தியிருப்பது படத்திற்குக் கூடுதல் பலம்!

Lucky Baskhar Review

படம் ஆரம்பித்ததும் ஒவ்வொரு கதாபாத்திரங்களாக அறிமுகம் செய்கிறார் துல்கர். அது கொஞ்சம் ஓவர் டோஸாக இருந்தாலும் நிறைய நுணுக்கங்கள் இருக்கும் கதையின் தேவைக்கு அது பயன்படுகிறது. உணரவுபூர்வமான இடத்துக்கு நகரச் செய்யப்பட்ட பில்டப் நன்றாக வேலை செய்திருக்கிறது. ஒரு டீக்கடை காட்சிக்குப் பிறகு திரைக்கதை, உச்சத்தை அடையும் சென்செக்ஸ் போல ஏறுமுகமாகவே சீறுகிறது. படம் முழுக்க பாதி நேரம் பிளாஷ்பேக்கில் சென்றாலும் சஸ்பென்ஸை லாக்கரில் பூட்டிவைத்து, அதன் ரகசிய எண்களை ஒவ்வொன்றாகச் சொல்வது போல நகரும் காட்சிகள் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன. குறிப்பாக இடைவேளை காட்சி, பண்டிகை காலத்து ஸ்வீட் பாக்ஸைப் பிரிக்கும் உணர்வு!

ஹர்ஷத் மேத்தாவின் நிதி மோசடிகள், வங்கி ரசீது, பங்குச் சந்தை, பங்குகள் வாங்கி விற்பது, ஹவாலா மணி லாண்டரிங் மற்றும் பிற பொருளாதாரம் சார்ந்த சிக்கலான விஷயங்களைக் கொண்டுள்ள இரண்டாம் பாதியை, அனைவருக்கும் புரிகிற மொழியில் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் வெங்கி அட்லுரி. அதேபோல த்ரில்லர் படமாக மட்டும் கொண்டு செல்லாமல், “எங்க ஆரம்பிக்குறோம்ன்றது முக்கியம் இல்ல, எங்க நிறுத்துறோம்ன்றதுதான் முக்கியம்” என உளவியல் ரீதியாகவும் கொண்டு சென்றவிதம் அருமை.

இதைத்தாண்டி மிகவும் உன்னிப்பாகக் கவனித்தால் துல்கர் மோசடியைக் கண்டுபிடிக்கும் அதேநேரத்தில், அதற்குச் சம்பந்தமான நபர்கள் அவருக்கு நெருக்கமாக வேலை செய்தும் அவர்களால் துல்கரை ஏன் கணிக்க முடியவில்லை, 92-ல் 100 கோடி அளவுக்கு ஒரு பேங்கில் பணம் இருக்குமா என்பது போன்ற லாஜிக் கேள்விகளும் எட்டிப்பார்க்கின்றன. இருந்தும் தொடர்ந்து வெடிக்கும் வானவேடிக்கையாக வரும் அந்த க்ளைமாக்ஸ், அனைத்தையும் மறக்க வைத்துவிடுகிறது.

Lucky Baskhar Review

வங்கி மோசடியைப் பின்னணியாகக் கொண்டு அந்த காலகட்டத்தை தொழில்நுட்ப ரீதியாக அற்புதமாகவும், சுவாரஸ்யமான திரைக்கதையால் த்ரில்லராகவும், அதேநேரத்தில் உணர்வுபூர்வமாகவும் தந்திருக்கும் இந்த ‘லக்கி பாஸ்கர்’, ‘வெற்றி’ என்னும் ஜாக்பாட்டை தலையில் தூக்கி ஆடும் அதிர்ஷ்டக்காரன் ஆகியிருக்கிறான்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.