ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், கெலமங்கலம், பைரமங்கலம், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பீன்ஸ், கேரட், முள்ளங்கி, குடைமிளகாய் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இதில், 90 நாட்களில் அறுவடைக்குக் கிடைக்கும் குடை மிளகாயை சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவுக்கு மேல், பசுமைக் குடில்கள் அமைத்து விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
துரித உணவகங்களில் குடைமிளகாயின் தேவை அதிகரித்துள்ளதால், ஓசூர் பகுதியிலிருந்து உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களுக்குக் குடைமிளகாய் விற்பனைக்குச் செல்கிறது. வடமாநிலங்களில் உற்பத்தியாகும் குடைமிளகாய் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது, வட மாநிலங்களில் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வடமாநிலங்களிலிருந்து வெளிநாடுகளுக்கு குடைமிளகாய் ஏற்றுமதி குறைந்துள்ளது. எனவே, ஓசூர் பகுதியிலிருந்து அதிக அளவில் குடை மிளகாய் வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு செல்கிறது.
இது தொடர்பாக விவசாயிகள் சிலர் கூறியதாவது: ஓசூர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் பசுமைக் குடில்கள் அமைத்து பச்சை, மஞ்சள், சிவப்பு ஆகிய 3 வண்ணங்களில் குடை மிளகாய் சாகுபடி செய்து வருகின்றனர். ஓசூர் குடைமிளகாயை விட வடமாநில குடைமிளகாய் அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது, வடமாநிலங்களில் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஓசூர் பகுதி குடைமிளகாய் வெளி நாடுகளுக்கு விற்பனைக்குச் செல்கிறது. வெளிமாநில இடைத்தரகர்கள் நேரடியாக வந்து குடைமிளகாயைக் கொள்முதல் செய்கின்றனர். பின்னர், பெங்களூருவிலிருந்து மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானம் மூலம் அனுப்பி வருகின்றனர்.
உள்ளூரில் ஒரு கிலோ ரூ.45-க்கு விற்பனையாகிறது. வெளிநாடுகளில் ரூ.200 முதல் ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இடைத்தரகர்கள் எங்களிடம் நேரடியாக வந்து கொள்முதல் செய்கின்றனர். எங்களுக்குப் போக்குவரத்து செலவு மீதமாவதால் நல்ல வருவாய் கிடைத்து வருகிறது.
அதேநேரத்தில், விவசாயிகளே நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பான வழிகாட்டுதல் பயிற்சியை தமிழக அரசு வழங்கினால், ஓசூர் விவசாயிகள் நேரடியாக வெளிநாடுகளுக்கு குடைமிளகாய் ஏற்றுமதி செய்து, அதிக வருவாய் ஈட்ட முடியும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.