கூகுள் நிறுவனத்துக்கு 20 டெசில்லியன் டாலர் அபராதம் விதித்த ரஷ்யா

மாஸ்கோ: யூடியூப் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி அதன் உரிமையாளரான கூகுள் நிறுவனத்துக்கு 20 டெசில்லியன் டாலரை ரஷ்யா அபராதமாக விதித்துள்ளது. ஒரு டெசில்லியன் டாலர் என்பது 1-க்குப் பிறகு 34 இலக்க பூஜ்யஙகளை உள்ளடக்கியது. அப்படிப் பார்த்தால், கூகுள் நிறுவனம் ரஷ்யாவுக்கு செலுத்த வேண்டிய அபராதம் $20,000,000,000,000,000,000,000,000,000,000,000-மாக இருக்கும். உலக நாடுகளின் ஒட்டுமொத்த ஜிடிபியை விட ரஷ்யா விதித்த இந்த அபராத தொகை பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் ஒட்டுமொத்த பொருளாதாரமே 110 டிரில்லியன் டாலர் அளவுக்குத்தான் உள்ளது. ஒரு டிரில்லியன் டாலர் என்பது 1-க்கு பின்னால் 12 பூஜ்யங்களை உள்ளடக்கியது. எனவே, கூகுள் நிறுவனம் செலுத்துவதற்கு சாத்தியமில்லாத வகையில் ரஷ்யா அபராத தொகையை விதித்துள்ளது தொழில்நுட்ப துறை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் நடவடிக்கையை தொடங்கியதற்குப் பிறகு ரஷ்யாவின் ஆதரவு சேனல்களை யூடியூப் தடை செய்தது. இதனை எதிர்த்து பல ஊடக நிறுவனங்கள் ரஷ்ய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதன் மூலம் அந்த நிறுவனம் ரஷ்யாவின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் யூடியூப் நிறுவனத்தின் விதிமீறல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த தனித்துவ அபராத தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த அபராதத்துடன், யூடியூப் நிறுவனம் ஒன்பது மாதங்களுக்குள் தடை செய்யப்பட்ட ரஷ்ய சேனல்கள் அனைத்தையும் மீட்டெடுக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் ஒவ்வொரு நாளும் இந்த அபராதம் இரட்டிப்பாகும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அரசுக்கு சொந்தமான ஆர்டி மற்றும் ஸ்புட்னிக் உள்ளிட்ட பல சேனல்களை உலகளவில் தடை செய்வதாக யூடியூப் கடந்த 2022-ம் ஆண்டே அறிவித்தது.உக்ரைன் உடனான மோதலுக்குப் பிறகு ரஷ்யாவின் நடவடிக்கையை நியாயப்படுத்தும் 1,000-க்கும் மேற்பட்ட சேனல்கள் மற்றும் 15,000-க்கும் மேற்பட்ட வீடியோ பதிவுகளை யூடியூப் நீக்கியுது. இது, உக்ரைனுக்கு ஆதரவான, ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கை என யூடியூப் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.