புதுடெல்லி: உ.பி.யின் முசாபர் நகரில் ஆன்லைனில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் விற்பனை செய்வது தொடர்பாக புகார் வந்தது. ஐந்து பேர் கொண்ட கும்பல், இன்ஸ்டாகிராம், முகநூல் மற்றும் வாட்ஸ் அப் சமூகவலைதளங்களை பயன் படுத்தி ஆயுதங்கள் விற்று வந்துள்ளனர்.
துப்பாக்கி கேட்பவர்களுக்கு முதலில் அவற்றின் படங்கள் மற்றும் விலையை குறிப்பிட்டு தகவல் அனுப்பி உள்ளனர். வங்கி மூலம் பணத்தை பெற்றுக் கொண்ட பின்னர், ரகசிய இடத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஆயுதங் களை ஒப்படைத்துள்ளனர்.
உ.பி., பிஹாரில் தயாரிக்கப் பட்ட கள்ளத்துப்பாக்கிகள் மற்றும் வெளிநாட்டு துப்பாக்கிகள் விற்கப் பட்டு வந்துள்ளன. சாதாரண கள்ளத்துப்பாக்கி ரூ.5,000, கைத்துப்பாக்கி ரூ.50,000-க்கு விற்கப்பட்டுள்ளன. இவர்களை பிடிக்க உ.பி. போலீஸார் திட்டமிட்டு, கைத் துப்பாக்கி வாங்க இன்ஸ்டாகிராமில் தகவல் அனுப்பி உள்ளனர். பிறகு துப்பாக்கியை ஒப்படைக்க வந்தவர்களை சுற்றி வளைத்து போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் 2 வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட 7 பேர் கைதாகி உள்ளனர்.
இதுகுறித்து முசாபர் நகர் எஸ்.பி. சத்யநாரயண் பிரஜாபதி கூறும்போது, ‘‘இவர்களிடம் 5 கள்ளத் துப்பாக்கிகள், 3 வெளிநாட்டு துப்பாக்கிகள், பைக், கார் கைப்பற்றப்பட்டுள்ளன. அண்டை மாவட்டங்களிலும் இதுபோல் விற்பனை செய்யும் கும்பல்களுடன் இவர்கள் தொடர்பு வைத்துள்ளனர்’’ என்றார்.