சென்னை: தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில், கட்டிட வரைபட அனுமதியை ஒற்றைச்சாளர முறையில், சுயசான்று அடிப்படையில் வழங்குவதற்கான புதிய கட்டணங்கள் தொடர்பாக, அந்தந்த ஊராட்சிகளில் நவ.5-ம் தேதிக்குள் தீர்மானம் நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை நீங்கலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி இயக்குநர் பா.பொன்னையா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஊரகப் பகுதிகளில் மனைப்பிரிவுகளுக்கான அனுமதி மற்றும் கட்டிட அனுமதி ஆகியவற்றை எளிதில் பெறும் வகையில், ஒற்றைச்சாளர முறையிலான இணையதளம், கடந்தாண்டு அக்.2-ம் தேதி முதல் முழு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அதன்படி, மனைப்பிரிவு அனுமதி, கட்டிட அனுமதிக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் மட்டுமே பெறப்பட்டு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பட்ஜெட் உரையில், ‘‘ஒற்றைச்சாளர முறையில் சுயசான்று அடிப்படையாகக் கொண்டு கட்டிட அனுமதி பெறும் வகையில் ஒருங்கிணைந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்படும். 2,500 சதுரஅடி வரையிலான மனையில் 3,500 சதுரஅடி வரையிலான கட்டிடப் பரப்பில் அல்லது தரை மற்றும் முதல் தளம் கொண்ட குடியிருப்பு கட்டிடம் கட்ட உடனடி பதிவின் மூலம் அனுமதியளிக்கப்படும்’’ என அறிவிக்கப்பட்டது. இந்த சுயசான்று நடைமுறை தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கான கட்டணங்களை சீரமைத்தும், சுயசான்று கட்டிட அனுமதி வழங்கும் வகையில் ஊராட்சிகளை 4 பிரிவுகளாக வகைப்பாடு செய்தும் ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள, சிஎம்டிஏ எல்லைக்குள் 78 ஊராட்சிகள், நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள சிஎம்டிஏ எல்லைக்குள் இல்லாத 612 ஊராட்சிகள், சிஎம்டிஏ எல்லைக்குட்பட்ட இதர ஊராட்சிகள் 44 மற்றும் இந்த 3 வகைப்பாட்டுக்குள் இல்லாத இதர ஊராட்சிகள் 11,791 என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த பிரிவுகளின் அடிப்படையில் தற்போது கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவில் வரும் ஊராட்சிகளுக்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.290-ம் ஒரு சதுரடிக்கு ரூ.27-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2-வது பிரிவுக்கு ச.மீ.க்கு ரூ.269, ஒரு சதுரடிக்கு ரூ.25, 3-ம் பிரிவுக்கு ஒரு ச.மீ.க்கு ரூ.237, ஒரு சதுரடிக்கு ரூ.22-ம், 4-ம் பிரிவில் வரும் இதர ஊராட்சிகளுக்கு ஒரு ச.மீ.க்கு ரூ.162-ம், ஒரு சதுரடிக்கு ரூ.15-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணம் கட்டிட தொழிலாளர் நலநிதி நீங்கலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணங்களைத் தவிர ஊராட்சிகளில் சுயசான்று அனுமதிக்கு வேறு எந்த கட்டணங்களும் பெற வழியில்லை.
அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண விகிதத்துக்கு ஏற்ப இணையவழி ஒற்றைச்சாளர முறையில் பெறப்படும் சுயசான்று இல்லாத இதர விண்ணப்பங்களுக்கு ஊராட்சிக்கு நிதியிழப்பு ஏற்படாத வகையில் இதன்படி கட்டணம் நிர்ணயிக்கலாம்.
எனவே, அந்தந்த ஊராட்சியின் வகைப்பாட்டுக்கு ஏற்ப ஊராட்சி மன்றக் கூட்டத்தில் உடனடியாக கடடணம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதன்படி நவ.5-க்குள் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றி, நவ.6-ம் தேதிக்குள் ஊரக வளர்ச்சி இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, விரைவாக தீர்மானம் நிறைவேற்றி அனுப்புமாறு, சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அந்தந்த ஊராட்சிகளின் உதவி இயக்குநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.