புதுடெல்லி: டெல்லியில் தொழிலதிபரிடம் ரூ.15 கோடி கேட்டு மிரட்டிய 2 பேர் 3 நாட்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டனர். அமெரிக்காவில் இருந்து உத்தரவு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
வடமேற்கு டெல்லியின் ராணி பாக் பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபர் வீட்டின் மீது கடந்த 26-ம் தேதி காலை 8 மணிக்கு 2 மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். அப்போது ரூ.15 கோடி தராவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்து விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி உள்ளனர். அத்துடன் அவர்கள் விட்டுச் சென்ற துண்டுச் சீட்டில் ‘கவுஷல் சவுத்ரி – பவன் ஷவுகீன் – பாம்பியா கேங்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய டெல்லி போலீஸார், உ.பி.யின் புலந்ஷாரைச் சேர்ந்த பிலால் அன்சாரி (22) மற்றும் ஷுஹெப் குரேஷி (21) ஆகிய 2 பேரை 3 நாட்களுக்குப் பிறகு கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், இந்தியாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் வசித்து வரும் ரவுடி பவன் ஷவுகீன் உத்தரவின் பேரில் தொழிலதிபர் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியது தெரியவந்துள்ளது.
சல்மான் கானை கொலை செய்ய திட்டமிட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் எதிரானவர் கவுஷல் சவுத்ரி. இவர் ஹரியானாவின் போன்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்தான் பாம்பியா கேங் தலைவர். லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கும்பலை ஒழித்துக்கட்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்தான் பவன் ஷவுகீனை அமெரிக்காவிலிருந்து இந்த கேங்கை வழிநடத்துமாறு உத்தரவிட்டுள்ளார் என கூறப்படுகிறது.
தொடரும் துப்பாக்கி முனை மிரட்டல்: டெல்லியில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கி முனையில் பணம் கேட்டு மிரட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த மாதத்தில் மேற்கு டெல்லியின் நரைனா பகுயில் உள்ள ஒரு கார் ஷோரூம், தென்மேற்கு டெல்லியில் உள்ள ஒரு ஓட்டல் மற்றும் இனிப்பு கடை ஆகியவற்றில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.
இதில் கார் ஷோ ரூமில் புகுந்த 3 பேர் 20 ரவுண்ட் சுட்டுள்ளனர். பின்னர் அவர்கள் அங்கு விட்டுச் சென்ற துண்டுச் சீட்டில் ‘பாவ் கேங், 2020 முதல்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. ரவுடி கும்பலின் தலைவரான ஹிமான்ஷு பாவ் என்பவர் தேடப்படும் குற்றவாளி ஆவார். இவர் கடந்த 2022-ல் வெளிநாடு தப்பினார். போர்ச்சுகல் நாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த மே மாதம் திலக் நகர் பகுதியில் உள்ள ஒரு கார் ஷோ ரூம் மீது இதுபோன்ற துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதன் பின்னணியில் பாவ் கேங்குக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அந்த கார் ஷோ ரூம் உரிமையாளரிடம் ரூ.5 கோடி கேட்டதாகக் கூறப்படுகிறது.