மதுரை: ரயில் போக்குவரத்துக்கு உதவிடும் தொலைத்தொடர்பு கம்பி வடங்களைத் துண்டிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.
ரயில்களை பாதுகாப்பாக இயக்க, ரயில் பாதை அருகே பூமிக்கு அடியில் செல்லும் தொலைதொடர்பு கம்பி வடங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும் இந்த தொலை தொடர்பு கம்பி வடம் ஒரு ரயில் பாதையில் ,ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ரயில்களை இயக்குவதை தடுப்பதற்கும், ரயில் வருவதற்கு முன்பாக குறித்த நேரத்தில் கடவுப் பாதையை (ரயில்வே கேட்) மூடுவதற்கும் பயன்படுகிறது.
தனியார் , உள்ளாட்சி அமைப்புகளால் தங்களது திட்டப் பணிகளின்போது, அருகிலுள்ள இந்த முக்கியமான தொலைதொடர்பு கம்பி வடத்தை துண்டிக்கும் நிகழ்வுகள் அதிகரிப்பதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது என, புகார்கள் எழுந்துள்ளன.
இது குறித்து மதுரை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “சமீபத்தில் திருப்பரங்குன்றம் அருகில் உள்ளாட்சி அமைப்பினர் இறந்த உருக்குலைந்த கால்நடைகளை புதைக்கும்போது, ரயில்வே தொலைத்தொடர்பு கம்பி வடத்தை துண்டித்தது தெரிந்தது. இதில் சம்பந்தப்பட்ட ஜேசிபி ஓட்டுநர் ரயில்வே பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் அருகே உள்ளாட்சி அமைப்பின் சார்பில், கழிவுநீர் கால்வாய் அமைக்கும் போதும், கம்பி வடம் துண்டிக்கப்பட்டது. இதிலும் சம்பந்தப்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ரயில்வே சட்டப்படி ரயில் பாதை மற்றும் ரயில்வே எல்லை அருகே பணிகள் தொடங்கும் முன்பு உரிய ரயில்வே அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். அதிகாரிகளின் வழிகாட்டுதலோடு பணியை தொடர்ந்தால் ரயில்வே சொத்தை சேதப்படுத்தும் நிகழ்வுகளை தவிர்க்கலாம். இதை மீறி தொலை தொடர்பு கம்பி வடத்தை துண்டிப்பவர்கள் மீது ரயில்வே சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், துண்டித்த கம்பி வடத்துக்கான நஷ்ட ஈடு , பராமரிப்பு செலவும் வசூலிக்கப்படும். ரயில் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரயில் பாதை அருகே பணிகளை மேற்கொள்ளும் தனியார் , உள்ளாட்சி அமைப்பு ஒப்பந்ததாரர்கள் ரயில்வே துறை அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற வேண்டும்,” என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.