மும்பை: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ் யுபிஐ மூலமாக பணம் செலுத்தி மும்பையில் உள்ள அங்காடியில் விநாயகர் சிலையை வாங்கினார்.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது, அவர் யுபிஐ மூலமாக பணம் செலுத்தி பொருட்களை வாங்கியது பெரிய அளவில் பேசுபொருளானது. இதையடுத்து, சில வாரங்களுக்குப் பிறகு பாரிசில் உள்ள ஈபிள் கோபுரம் மூலமாக யுபிஐ சேவை அந்த நாட்டில் முறையாக தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில், இந்தியாவுக்கு வந்துள்ள ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ் மும்பையி்ல் உள்ள ஒரு அங்காடியில் விநாயகர் சிலையை வாங்கி யுபிஐ மூலமாக அதற்கான பணத்தை இந்திய பிரதிநிதிகள் உதவியுடன் செலுத்தினார். இது, அந்த பணம் செலுத்தும் முறையில் உள்ள வசதியையும், சிறப்பையும், திறனையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.
ஸ்பெயின் பிரதமர் இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் யதார்த்தமாக தீபாவளி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், அவரும் அவரது மனைவி பெகோனா கோமெஸ் ஆகியோர் தங்களை அன்புடன் வரவேற்ற இந்தியர்களின் தீபாவளி கொண்டாட்டங்களில் பங்கேற்றனர். திங்கள்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தீபத்தை ஏற்றி வைத்த அவர்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். மேலும், லட்டு உள்ளிட்ட இந்தியாவின் பிரபலமான இனிப்பு வகைகளை அவர்கள் சுவைத்து மகிழ்ந்தனர். இதன் மூலம், இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பு அந்த தம்பதிக்கு கிடைத்தது.