வேற்று கிரக ஆராய்ச்சிக்கு மையம்: லடாக்கில் தொடங்கியது இஸ்ரோ

புதுடெல்லி: விண்வெளிக்கும், வேற்று கிரகங்களுக்கும் மனிதர்களை அனுப்பும் பயணத்திட்டத்தின் ஒரு பகுதியாக, லடாக்கில் புதிய அனலாக் ஆய்வு மையத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) தொடங்கியுள்ளது.

இஸ்ரோ சார்பில் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஆய்வுகள் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன. அதேபோல், விண்வெளி மையம் ஒன்றை அமைக்கவும் இந்தியா முயற்சி மேற்கொண்டுள்ளது. வேற்று கிரகங்களுக்கு விண்வெளிக் கலன்களை அனுப்பவும் அடுத்தடுத்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்புவதற்காக விமானப்படையை சேர்ந்த 6 வீரர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு சிறப்பான பயிற்சியை இஸ்ரோ அளித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், விண்வெளியிலும், அதற்கு அப்பால் வேற்று கிரகங்களிலும் மனிதர்கள் உயிர் வாழ்வதில் இருக்கும் சிக்கல்களை கண்டறியும் நோக்கத்திலும், இஸ்ரோ ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, லடாக்கில் உள்ள லே பகுதியில் சிறப்பு ஆய்வை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர். இதற்காக அங்கு அனலாக் ஆய்வு மையத்தை இஸ்ரோ அமைத்துள்ளது.

வேற்று கிரகங்களில் இருப்பது போன்ற சூழல் கொண்ட கலன்களை அமைத்து, அங்கு ஆய்வுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளது இஸ்ரோ. விண்வெளி அல்லது வேற்று கிரகத்தில் இருப்பது போன்ற தட்பவெப்பம் கொண்ட இடங்களில் இத்தகைய சோதனையை நடத்துவதற்கு முடிவு செய்த இஸ்ரோ விஞ்ஞானிகள் அந்த அடிப்படையில் இந்த, ‘அனலாக்’ சோதனையை லே பகுதியில் நடத்தி வருகின்றனர்.

இந்த அனலாக் ஆய்வு மையத்தில் புதிய தொழில்நுட்பம், ரோபோடிக் கருவிகள், வாகனங்கள், வேற்று கிரகம் அல்லது விண்வெளியில் பயன்படுத்தப்படும் வசிப்பிடங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள், மின் உற்பத்தி சாதனங்கள், இடம் பெயர் சாதனங்கள், இருப்பு வைக்கும் சாதனங்கள் ஆகியவை பரிசோதிக்கப்பட உள்ளன. லடாக் மலை மேம்பாட்டுக் குழுமம், மும்பை ஐஐடி, லடாக் பல்கலை ஆகியவற்றுடன் இணைந்து இஸ்ரோ இந்த சோதனையை நடத்துகிறது.

செவ்வாய் கிரகம் மற்றும் நிலவின் நிலப்பரப்புகளை நெருக்கமாக ஒத்திருக்கும் அதன் தனித்துவமான புவியியல் பண்புகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட லடாக்கில் இந்த அனலாக் ஆய்வு பணியை நடத்த இஸ்ரோ முடிவு செய்தது. அதன்படி இங்கு ஆராய்ச்சி தொடங்கியுள்ளது.

லடாக்கின் குளிர், வறண்ட நிலைகள் மற்றும் அதிக உயரம் ஆகியவை நீண்ட கால விண்வெளிப் பயணங்களுக்குத் தேவையான தொழில்நுட்பங்கள் மற்றும் உத்திகளைச் சோதிக்க சிறந்த சூழலை வழங்குவதாக கூறப்படுகிறது. இந்த முயற்சியானது, இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட ககன்யான் திட்டம் உட்பட, மனித விண்வெளிப் பயணம் மற்றும் கிரகங்களுக்கு இடையேயான ஆய்வுகளில் அதன் திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு பகுதியாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் முதல் அனலாக் விண்வெளிப் பயணம் லே பகுதியில் தொடங்குகிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள அனலாக் ஆய்வு மையத்துக்கு ஹேப்-1 என்று பெயரிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜ்நகர் டிவிஷனல் வனத்துறை அதிகாரி சுதர்ஷன் கோபிநாத் கூறும்போது, “இந்த அனலாக் ஆய்வுப் பணியானது மற்ற கிரகங்களில் வாழ்வதன் சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்கான குறிப்பிடத்தக்க படியாகும். இந்தத் திட்டத்தின் மூலம் பெறப்படும் தகவல்கள், எதிர்கால விண்வெளி பயணங்களின் வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கும்” என்றார்.

2047-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய ஆராய்ச்சி நிலையத்தை நிறுவுதல், 2035-ம் ஆண்டுக்குள் பாரதிய அன்ரிக் ஷா ஸ்டேஷன் (பிஏஎஸ்) அமைத்தல், 2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்குப் பயணம் என்பதே இஸ்ரோவின் இலக்குகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.