சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தீபாவளி அன்று (நேற்று) அமரன் படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், பருத்திவீரன், சிங்கம், கங்குவா உள்ளிட்ட பல படங்களின் தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா, அமரன் படத்தை பாராட்டியுள்ளார். அதில்…
“மும்பையில் அமரன் படத்தை பார்த்தேன். இந்தப் படத்தை கொடுத்த தமிழ் சினிமாவில் ஒரு அங்கமாக…திரைப்பட தயாரிப்பாளராக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.
படத்தின் ஒவ்வொரு பிரேம்களிலும் பல கட்ட ஆராய்ச்சி மற்றும் உண்மைதன்மையுடன் அசோக் சக்ரா விருது பெற்ற மேஜர் முகுந்தன் வரதராஜனின் வாழ்க்கையை அப்படியே தைரியமாகவும், வீரமாகவும் திரையில் கொண்டு வந்திருக்கிறார் எழுத்தாளர் – இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. இது தமிழ்நாட்டை சேர்ந்த அந்த சிறந்த போர் வீரருக்கான உண்மையான அஞ்சலி ஆகும். முகுந்த் வாழ்க்கையை நன்கு ரீ-கிரியேட் செய்ததற்கு ராஜ்குமாருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்தக் கதாபாத்திரத்தின் மூலம் தனது கரியரில் பல அடிகள் முன்னேற்றி சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். இது அவர் நடித்த…நடிக்கும் கதாபாத்திரங்களில் சிறந்த ஒன்றாக அமையும். இந்தப் படம் அவருக்கு நிறைய பாராட்டுகள் மற்றும் அங்கீகாரத்தை அள்ளித் தரும். இது படம் மூலம் அவர் புரிந்திருக்கும் சாதனை குறித்து நான் பெருமை கொள்கிறேன்.
சாய் பல்லவியை தவிர, வேறு யாராலும் இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தை இவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியாது. இந்தப் படம் முழுவதும் அவர் அறிவாகவும், தைரியமாகவும் இருந்துள்ளார். மேலும் கிளைமாக்ஸில் அவருடைய நடிப்பு சிறப்பாக உள்ளது. இந்தப் படம் முகுந்த் வரதராஜனுடன், இந்திய பெண்களுக்கு எடுத்துகாட்டான, இக்கட்டான சூழலை தைரியமாக எதிர்கொண்ட வீராங்கனை இந்து ரெபேக்கா வர்கீஸையும் தான் காட்டுகிறது.
சிறப்பான பி.ஜி.எம் மூலம் படத்தின் ஒவ்வொரு சீன்களையும் மெருகேற்றி இருக்கிறார் என்னுடைய அன்பு ஜி.வி.பிரகாஷ் குமார். அவருடைய இசை பல இடங்களில் புல்லரிப்பை தருகின்றது. வாழ்த்துக்கள் ஜி.வி.பிரகாஷ் குமார்.
உண்மை சம்பவத்தை, அதே இடங்களில், அதிக பட்ஜெட்டில் படமாக்கியது மற்றும் இந்தப் படம் மூலம் மேஜர் முகுந்திற்கு உண்மையான அஞ்சலி செலுத்திய இந்தியாவுடைய பெருமை கமல்ஹாசன் சார், இணை தயாரிப்பாளர் மகேந்திரன் சார் மற்றும் சோனி பிக்சர்ஸுக்கு வாழ்த்துக்கள்.
அமரன் படம் தமிழ் சினிமாவை மட்டுமல்ல…ஒட்டுமொத்த இந்தியா சினிமாவையே பெருமை அடைய செய்கிறது. இது ஒவ்வொருவரையும் படத்தை பார்க்க செய்து, இந்திய ராணுவ வீரர்கள் குறித்து பெருமை கொள்ள செய்யும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…