இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வான்கடேவில் நடந்து வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் அடிவாங்கி தொடரை இழந்த நிலையில் மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி தடுமாறி வருகிறது. வலுவான அணியாக ஆதிக்கமாக ஆடி வந்த இந்திய அணி இந்த நியூசிலாந்து தொடரில் கத்துக்குட்டி அணியைப் போல ஆடி வருகிறது.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்களை அடித்து ஆல் அவுட் ஆகியிருந்தது. இந்தியா சார்பில் ஜடேஜா 5 விக்கெட் ஹாலை எடுத்திருந்தார். பௌலிங்கில் இந்திய அணி சிறப்பாகத்தான் செயல்பட்டிருந்தது. வழக்கம்போல பேட்டிங்கில்தான் இங்கேயும் சொதப்பியிருந்தது. இன்றைய நாளின் கடைசி செஷனில் பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணி 19 ஓவர்களில் 86 ரன்களை மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. குறிப்பாக, கடைசி 10 நிமிடங்களில் மட்டும் 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்திருக்கிறது. விக்கெட்டுகளை இழந்ததை விட அவற்றை இழந்த விதம்தான் இந்திய அணியின் மீது எக்கச்சக்க கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
கடந்த இரண்டு போட்டிகளிலேயே இந்திய அணியின் பேட்டர்கள் வேகம் மற்றும் ஸ்பின் என இரண்டு விதமான பௌலர்களுக்குமே இந்திய வீரர்கள் கடுமையாக திணறியிருந்தனர். இந்திய பேட்டர்கள் அட்டாக்கிங்காக ஆடுவதில் குறியாக இருந்தார்களே தவிர டிபன்ஸில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. இந்தப் போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்பில் கூட, ‘இந்திய பேட்டர்கள் அதிகமாக டி20 போட்டிகளில் ஆடுவதால்தான் டிபன்ஸில் அதிகமாக திணறுகின்றனர். டிபன்ஸில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும்.’ என பேசியிருந்தார். பிரச்சனை என்னவென தெரிந்த பிறகும் கூட இந்தப் போட்டியிலும் இந்திய பேட்டர்கள் தங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை. ரோஹித் வழக்கம்போல டி20 போட்டிகளின் பவர்ப்ளேயில் ஆடுவதைப் போலத்தான் ஆடினார். பைன் லெகில் ஒரு பீல்டரை மட்டும் அட்டாக் செய்கிறார்கள். சரியாக அந்த பீல்டரின் கையிலேயே கேட்ச்சை கொடுக்கும் அளவுக்கு ஷாட் ஆடுகிறார்.
அந்த கேட்ச் ட்ராப். ஆனாலும் அப்படி ஒரு ஷாட் தேவைதானா. அப்படி தூக்கி அடிக்கும் ஷாட்களை கூட நன்றாகத்தான் ஆடுகிறார். டிபன்ஸில்தான் கோட்டை விடுகிறார். மேட் ஹென்றியின் குட் லெந்த் பந்தை தட்டி ஆட முடியாமல் எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் கேட்ச் ஆகிறார். ஜெய்ஸ்வால் அத்தனை முறை ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி போல்டை பறிகொடுக்கிறார். கோலி வட்டத்துக்குள்ளேயே அடித்துவிட்டு டி20 போட்டியில் Quick Single எடுப்பதை போல ஓடி ரன் அவுட் ஆகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டின் அடிப்படை இலக்கணத்தையே புரிந்துகொள்ளாத அணுகுமுறையைத்தான் இந்தியா வெளிக்காட்டி வருகிறது. இதில் கொடுமை என்னவெனில் கோலிக்கு முன்பாக சிராஜை நைட் வாட்ச்மேனாக இறக்கியிருந்தார்கள்.
இந்திய அணி கடைசியாக நைட் வாட்ச்மேனை எப்போது பயன்படுத்தியது என்று கூட நியாபகமில்லை. அந்தளவுக்கு டெஸ்ட்டில் இந்திய அணி ஆதிக்கமான இடத்தை எட்டிவிட்டது. தற்காப்பாக யோசிப்பதையெல்லாம் இந்திய அணி ஆயுதமாக பல காலமாக எடுக்கவில்லை. நைட் வாட்ச்மேனை பயன்படுத்துவது ஒன்றும் அத்தனை கீழான விஷயமில்லை. ஆனால், நீங்கள் மைக்கில் என்ன மாதிரியாக கம்பு சுற்றுகிறீர்கள்? களத்தில் என்ன மாதிரியான அட்டிடியூடுடன் ஆடுகிறீர்கள் என்பதையெல்லாம் வைத்துதான் அதை கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது.
‘நாங்கள் யாருக்கும் பயப்படமாட்டோம். வெற்றிதான் பிரதானம்.’ என வீரதீரர்களை போல மார்தட்டிக் கொள்ளும் கம்பீர் & கோ தான் இந்தப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக கடைசி சில நிமிடங்களில் தங்களின் விக்கெட்டை காப்பாற்றிக் கொள்ள சிராஜை இறக்கியிருக்கிறது. ஆனால், அதுவும் வேலைக்கு ஆகவில்லை.
‘எங்களை மிஞ்ச யாருண்டு!’ என்கிற அட்டிடியூட்தான் இந்தியாவின் பிரச்சனை. அந்த எண்ணத்தை தலையிலிருந்து இறக்கி வைத்தாலே இந்திய அணி யதார்த்தத்தை உணர்ந்து நன்றாக ஆடிவிடும்.