கோழிக்கோடு: 1920-களின் சமஸ்கிருதம் போல இன்று நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியை மறுக்கிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை (நவ. 2) அன்று கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மலையாள மனோரமா பத்திரிகை நடத்திய இலக்கிய விழா கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: “மருத்துவ தேர்வுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? நிச்சயம் இல்லை என்பதுதான் பதில்.
இன்று எப்படி நீட் தேர்வு எளிய பின்புலம் கொண்ட, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட ஏழை மாணவர்களுக்கு மருத்துவ கல்வியை மறுக்கிறதோ அது போல நூறாண்டுகளுக்கு முன்பு 1920-களில் பல மாணவர்கள் மருத்துவம் பயில சம்ஸ்கிருதம் தடையாக இருந்தது.
தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களை சேர்ந்த மக்கள் பாசிசத்துக்கு எதிராக நிற்கிறார்கள். அதற்கு காரணம் இங்கு முன்னெடுக்கப்பட்ட முற்போக்கு ரீதியான அரசியல். 1920-களில் அன்றைய சென்னை பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத பேராசிரியருக்கு மாத சம்பளம் ரூ.200. அதுவே தமிழ் பேராசிரியருக்கு சம்பளம் ரூ.70. சமஸ்கிருத மொழியினால் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆதாயம் அடைந்தார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
திராவிட இயக்கத்தின் சுயமரியாதை இயக்கம் தமிழை தனது அடையாளத்தின் மையமாக வைத்தது. இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ் சமூகத்தின் எதிர்ப்பு குரலாக இருந்தது. சமஸ்கிருதம் இல்லாத தமிழ் சொற்கள் உருவாகின. 1950-களுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் சமஸ்கிருத மயமாக இருந்தது. அது அறிவியல் விஞ்ஞான பூர்வமற்ற கருத்துகளை பேசியது. அதனை எளிய மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அந்த நிலையை மாற்றியதும் திராவிட இயக்கம் தான். ஆழமான அரசியல் கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்க சினிமா வலுவான ஊடகமாக பயன்பட்டது. அரசியல் பின்புலம் கொண்ட கதைகள் மக்களிடம் பேசப்பட்டது. வசனம் எழுதுவது கலைத்துவ பணியானது. அந்த கருத்துகள் நகரம், கிராமம் என அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேர்ந்தது.
1949-ல் வெளிவந்த முன்னாள் தமிழக முதல்வர்கள் சி.என்.அண்ணாதுரையின் ‘வேலைக்காரி’ மற்றும் கருணாநிதியின் ‘பராசக்தி’ போன்ற படைப்புகள் திராவிட சித்தாந்தத்தை பேசின. அதன் தாக்கம் அரசியல் ரீதியான மாற்றங்களுக்கு வித்திட்டது. அன்றே பாலின பாகுபாட்டை கேள்வி எழுப்பின்னர் பெரியார்.
இன்று தமிழ் சினிமா பல கோடி வணிகமாக மாறி உள்ளது. மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களுக்கும் இதே நிலை தான். இதற்கு முக்கிய காரணம் மொழியை விட்டுக்கொடுக்காமல் இருந்தது தான். தென்னிந்தியாவில் நிலவும் அதே நிலை தான் வட இந்தியாவிலும் இருக்கிறதா என்று நாம் பார்த்தால் இல்லை என்று தான் சொல்வோம். அங்கு பல மொழிகள் இந்திக்கு வழிவிட்டன. இப்போது அங்கு இந்தி படங்கள் மட்டுமே அங்குள்ளன.
இன்றும் இந்தி மொழி திணிப்பு: 1930 மற்றும் 1960 என இல்லை இன்றும் இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. கடந்த மாதம் தமிழகத்தின் தூர்தர்ஷன் இந்தி மாதத்தை கொண்டாடியது. அதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அதனை எதிர்த்து திமுக குரல் கொடுத்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்” என தெரிவித்தார்.
அந்த ஒற்றை செங்கல்: முன்னதாக, இந்த நிகழ்வில் பங்கேற்க சென்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின் போது ‘மதுரை எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தாமதமாகும் விவகாரத்தில் மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் ஒற்றை செங்கல்லை கையில் எடுத்து தேர்தல் பிரச்சாரம் செய்திருந்தார். அந்த கல் எங்குள்ளது என்ற கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது.
“மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு மத்திய அரசு எப்போது நிதி ஒதுக்குகிறதோ அப்போது அதை அரசிடம் கொடுக்க தயாராக இருக்கிறேன். அது என்னிடம் பத்திரமாக உள்ளது” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.