லாகூர்: அமெரிக்கா, கனடா, பிரிட்டனை சேர்ந்த சீக்கியர்களுக்கு 30 நிமிடங்களில் ஆன்லைனில் இலவசமாக விசா வழங்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், நங்கானா சாகிபு நகரில் பிறந்தார். அவரது நினைவாக அங்கு குருத்வாரா உள்ளது. இதேபோல பாகிஸ்தான் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சீக்கிய வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளன. இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் வாழும் சீக்கியர்கள் பாகிஸ்தானில் உள்ள சீக்கிய வழிபாட்டுத் தலங்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்கின்றனர்.
இந்த சூழலில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோசின் நக்வி, லாகூரில் நேற்று முன்தினம் கூறியதாவது: முஸ்லிம்களின் புனித பூமியாக சவுதி அரேபியா விளங்குகிறது. இதேபோல சீக்கியர்களின் புனித பூமியாக பாகிஸ்தான் உள்ளது. ஆண்டுதோறும் பாகிஸ்தானுக்கு சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சீக்கிய பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த எண்ணிக்கையை 10 லட்சமாக உயர்த்த விரும்புகிறோம்.
பாகிஸ்தானுக்கு வரும் சீக்கியர்கள் விசா பெறுவதில் சில சிரமங்களை சந்திப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஆன்லைன் இலவச விசா திட்டத்தை அமல்படுத்தி உள்ளோம்.
இதன்படி அமெரிக்கா, கனடா, பிரிட்டனை சேர்ந்த சீக்கியர்கள் பாகிஸ்தானில் தரையிறங்கிய பிறகு ஆன்லைனில் விண்ணப்பித்து இலவசமாக விசா பெறலாம். 30 நிமிடங்களில் விசா வழங்கப்படும். ஒரு நபர் ஓராண்டில் 10 முறை இந்த இலவச விசாவினை பெறலாம். இவ்வாறு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோசின் நக்வி தெரிவித்தார்.
இதுகுறித்து வடஅமெரிக்க பஞ்சாபி கூட்டமைப்பின் செயல் இயக்குநர் சட்னம் சிங் கூறும்போது, “பாகிஸ்தான் அரசின் இலவச விசா திட்டத்தை வரவேற்கிறோம். இந்தியா, பாகிஸ்தான் இடையே வாகா-அட்டாரி எல்லை வழியாக மீண்டும் வர்த்தக போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும். இது இரு நாடுகளுக்கும் பலன் அளிக்கும். குறிப்பாக இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் வளர்ச்சி அடையும்” என்று தெரிவித்தார்.