அரசியல் பகை குடும்பத்தில் எதிரொலிப்பு; தீபாவளிக்கு ஒன்று சேராமல் போன சரத் பவார் குடும்பம்!

மகாராஷ்டிரா நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தல் பல குடும்பத்தில் பிளவை ஏற்படுத்தி இருக்கிறது. தந்தையை எதிர்த்து மகள், சகோதரனை எதிர்த்து சகோதரன் என ரத்த உறவுகள் ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிடுகின்றனர். மகாராஷ்டிரா அரசியலில் மூத்த தலைவராக கருதப்படுபவர் சரத் பவார். கடந்த 2023-ம் ஆண்டு சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் இரண்டாக பிரிந்தது. அதோடு கடந்த மக்களவைத் தேர்தலில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேயை எதிர்த்து அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இத்தேர்தலுக்குப் பிறகு பவார் குடும்பத்தில் பிளவு மேலும் அதிகரித்தது. அதன் ஒரு பகுதியாக பாராமதி தொகுதியில் அஜித் பவாரை எதிர்த்து அவரது சகோதரர் மகன் யுகேந்திர பவாரை சரத் பவார் தேர்தலில் நிறுத்தி இருக்கிறார்.

ஒவ்வொரு தீபாவளிக்கும் சரத் பவார் வீட்டிற்கு அவரது குடும்ப உறவினர்கள் வந்து தீபாவளியைச் சேர்ந்து கொண்டாடுவது வழக்கம். சரத் பவார் பாராமதியில் உள்ள தனது கோவிந்த் பாக் இல்லத்தில் நேற்று இருந்தார். வழக்கமாக ஒவ்வொரு தீபாவளிக்கும் சரத் பவார் இல்லத்திற்கு வரும் அஜித் பவார் இம்முறை வரவில்லை. மாறாக அஜித் பவார் இம்முறை தீபாவளியான நேற்று பாராமதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். லட்சுமி பூஜையான நேற்று பாராமதி தொகுதிக்கு உட்பட்ட 60 கிராமங்களுக்கு அஜித் பவார் சென்றார். அதோடு தனது சொந்த ஊரான கேடிவாடி கிராமத்தில்தான் இருப்பதாகவும், அங்கு தன்னை பொதுமக்கள் தன்னைச் சந்தித்து பேசலாம் என்றும் அஜித் பவார் தெரிவித்திருந்தார்.

அங்கு கட்சியின் மூத்த தலைவர்கள் அஜித் பவாரைச் சந்தித்துப் பேசினர். அரசியல் ரீதியாக சரத் பவாருடன் கருத்து வேறுபாடு ஏற்படும் வரை ஒவ்வொரு தீபாவளிக்கும் அஜித் பவார் சரத் பவார் இல்லத்திற்கு வருவது வழக்கம். கடந்த ஆண்டுகூட தீபாவளியையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விருந்தில் சரத் பவார் மற்றும் அஜித் பவார் ஆகியோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இம்முறை அஜித் பவார் தீபாவளிக்கு வராதது குறித்து சரத் பவார் மகள் சுப்ரியா கூறுகையில், ”அது பற்றி எனக்குத் தெரியாது. ஆயிரக்கணக்கானோர் கோவிந்த் பாக் வந்து சென்றுள்ளனர். அது தொடர்பான ஏற்பாடுகளை எனது உறவினர் ரஞ்ஜித் பவார்தான் செய்தார்” என்றார்.

அஜித் பவாரின் சகோதரர் ஸ்ரீனிவாஸ் பவார் இது குறித்து கூறுகையில், ”மக்களவைத் தேர்தலில் சுப்ரியாவிற்கு எதிராக சுனேத்திரா பவாரை நிறுத்தியதுதான் அனைத்திற்கும் காரணமாகும். நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். நான் எனது தொழிலை பார்த்துக்கொண்டிருக்கிறேன். சுப்ரியாவிற்கு எதிராக அஜித் பவார் தனது மனைவியை நிறுத்துவது என்று முடிவு செய்த பிறகுதான் நான் சரத் பவாருடன் செல்ல முடிவு செய்தேன். அஜித் பவார் இவ்விவகாரத்தில் தவறுசெய்துவிட்டார். சுப்ரியா எங்களது கண்முன்பாக வளர்ந்தவர். அவருக்கு எதிராக அஜித் பவார் செயல்பட்டதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்றார்.

அஜித் பவாரும் தனது மனைவியை பாராமதியில் தேர்தலில் போட்டியிட வைத்து தவறு செய்துவிட்டேன் என்று குறிப்பிட்டு இருந்தார். ஸ்ரீனிவாஸ் பவாரின் மகன்தான் இப்போது பாராமதி தொகுதியில் அஜித் பவாரை எதிர்த்து போட்டியிடுகிறார். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சரத் பவார் பாராமதி சென்று மூத்த தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். தனது அரசியல் எதிரியாக கருதப்படும் பா.ஜ.க பிரமுகர்களைக்கூட நேரில் சந்தித்துப் பேசி தனக்கு ஆதரவு திரட்டினார். கடந்த மக்களவைத் தேர்தலிலும் இதே போன்றுதான் சரத் பவார் செய்தார். இப்போது சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படும் முன்பு தனது ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என அனைவரையும் அவர்களது வீட்டிற்கே சென்று பேசி அவர்களை தனது கட்சி வேட்பாளர்களாக சரத் பவார் அறிவித்து இருக்கிறார். இதனால் மக்களவை தேர்தல் போன்று இத்தேர்தலும் சரத் பவாருக்கு பொதுமக்களிடம் அனுதாபத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.