புட்காம்: காஷ்மீரில் புட்காம் மாவட்டத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருவர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான இருவரும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷோபியான்(25), உஸ்மான் மாலிக் (25) என்று அடையாளம் தெரியவந்துள்ளது. இருவரும் ஜல் சக்தி துறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளில் தினக் கூலிகளாக வேலை செய்துவந்தனர். காஷ்மீரில் கடந்த 2 வாரங்களாக புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது.
கடந்த மாதம் 20-ம் தேதி கந்தர்பால் மாவட்டத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பீகாரைச் சேர்ந்த இருவர் ரு டாக்டர் உள்பட மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரில் உமர் அப்துல்லா தலைமையில் புதிய அரசு அமைந்த பின்னர் நடந்த 5-வது தீவிரவாத தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாவது அங்கே பணி புரியும் மற்ற தொழிலாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. நேற்றைய தாக்குதலை முதல்வர் உமர் அப்துல்லா கண்டித்துள்ளார்.