தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் வடகிழக்குப் பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால், தாளடி பருவத்துக்கான சாகுபடிப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, குறுவை சாகுபடிப் பணிகள் மே, ஜூன் மாதங்களில் தொடங்கி, அக்டோபர், நவம்பர் மாதங்களிலும், சம்பா சாகுபடிப் பணிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கி டிசம்பர், ஜனவரி மாதங்களிலும், தாளடி சாகுபடி நவம்பரில் தொடங்கி பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் அறுவடை நடைபெறும். குறுவை அறுவடை முடிந்தவுடன், தாளபடி சாகுபடிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
நடப்பாண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால், குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. ஆனாலும், டெல்டா மாவட்ட விவசாயிகள், பம்புசெட் மூலம் குறுவை சாகுபடியை 3.80 லட்சம் ஏக்கரில் மேற்கொண்டனர். பின்னர், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் அதிக மழை பெய்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக மேட்டூர் அணை ஜூலை 28-ம் தேதி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக திறக்கப்பட்டது. இதனால், குறுவை சாகுபடியை சிரமமின்றி மேற்கொள்ள முடிந்தது.
இதேபோல, கடந்த ஆகஸ்ட் மாதம் சம்பா சாகுபடிப் பணிகள் தொடங்கின. அதன்படி, டெல்டா மாவட்டங்களில் 9.50 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த செப்டம்பர் முதல் நடைபெற்று வந்த குறுவை அறுவடைப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது தாளடி சாகுபடிப் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஒரு வார காலமாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், தாளடி நெல் நடவுக்கு வயல்களை சமப்படுத்துவது, அடியுரம் இடுவது, நாற்றங்கால் தயாரிப்பது, நடவு செய்வது என விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து வேளாண்மைத்துறையினர் கூறும்போது, ‘‘டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடை முடிந்த வயல்களில் விவசாயிகள் தாளடி சாகுபடி மேற்கொள்வது வழக்கம். நடப்பாண்டு 3.80 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்ட நிலையில், 3 லட்சம் ஏக்கரில் தாளடி சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப விதை நெல், உரங்கள் போன்றவை போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது’’ என்றனர்.