லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்: 52 பேர் பலி

பெய்ரூட்: வடக்கு லெபனானின் விவசாய கிராமங்களில் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 52 பேர் உயிரிழந்தனர் என்று லெபனான் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். லெபனானில் உள்ள தீவிரவாதக் குழுவான ஹிஸ்புல்லாக்களுக்கு எதிரான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலின் தொடர்ச்சியாக இந்த கிராமங்கள் குண்டுவீச்சுக்கு உள்ளாகின.

இதனிடையே, மத்திய காசாவில் வியாழக்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்த 25 பேரின் உடல்களை பாலஸ்தீனியர்கள் மீட்டெடுத்ததாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். தெற்கு பெய்ரூட்டில் புறநகர் பகுதியான தஹியேக்கில் பல்வேறு கட்டிடங்களின் மீதும் இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. என்றாலும் பெரும்பாலான மக்கள் அங்கிருந்து வெளியேறி விட்டதால் அங்கு உயிரிழப்புகள் குறித்து தகவல் இல்லை.

காசா மற்றும் லெபனானில் போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் ஹிஸ்புல்லா தீவிரவாத குழுவுக்கு எதிரான தனது தாக்குதலை இஸ்ரேல் லெபனான் எல்லைப்புறத்தையும் தாண்டி விரிவாக்கம் செய்து வருகிறது. அதேநேரத்தில் வடக்கு காசாவில் ஹமாஸ்களுக்கு எதிராகவும் ஒரு நீண்ட போரினை இஸ்ரேல் நடத்தி வருகிறது.

கடந்த ஆண்டு ஹில்புல்லாக்கள் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே மோதல் தொடங்கியதில் இருந்து லெபனானில் 2,900 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 13,150 பேர் காயமடைந்துள்ளனர் என்று லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்த 52 பேர் சேர்க்கப்படவில்லை. கொல்லப்பட்டவர்களில் கால் பகுதியினர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓராண்டுக்கும் மேலாக ஹமாஸ்களுக்கு எதிரான இஸ்ரேல் காசா போரில் இதுவரை சுமார் 42,000 பேர் உயிரிழந்திருப்பதாக பாலாஸ்தீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2023 அக்.7-ம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி பொதுமக்கள் உட்பட 1,200 பேரைக் கொன்று, 250 பேரை கடத்திச் சென்றதைத் தொடர்ந்து இந்தப் போர் தொடங்கியது நினைவுகூரத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.