கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனட குடியுரிமைப் பெற்ற சீக்கியர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். இதில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக நம்பகமான ஆதாரங்கள் இருக்கிறது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார். அப்போது இந்தியா – கனடா உறவில் விரிசல் விழுந்தது. அந்த விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கனடா நாட்டு அரசின் குற்றச்சாட்டை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நிலையில், கனடா நாட்டின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டேவிட் மோரிசன், “கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிராக வன்முறையை தூண்ட அமித் ஷா திட்டமிட்டுள்ளார்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை முதலில் அமெரிக்க நாளிதழான தி வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்தது. அதைதான் கனட அமைச்சர் உறுதிப்படுத்தியிருக்கிறார். ஆனால், அதற்கான ஆதாரம் எதையும் அவர் வெளியிடவில்லை. இது உலக அரங்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மத்திய அரசு, “இது அடிப்படை ஆதாரம் கூட இல்லாத அபத்தமான குற்றச்சாட்டு” என்று திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், “இந்த விவகாரம் தொடர்பாக கனடா நாட்டின் தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளோம். கனடா நாட்டின் உயரதிகாரிகளே தவறான தகவல்களை ஊடகங்களில் கசியவிட்டுள்ளனர்.
இது இந்தியா – கனடா உறவில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். கனடா நாட்டின் பொது பாதுகாப்பு நிலைக்குழு ஆலோசனைக் கூட்டத்திலேயே டேவிட் மோரிசன் இந்த குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். கனடாவுக்கு அனுப்பயுள்ள சம்மனில், இந்தியா இந்த விவகாரத்துக்கு கடுமையான எதிர்வினையாற்றும் என்பதை குறிப்பிட்டுள்ளோம். உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு உள்ள செல்வாக்கை போக்கி, இழிவுபடுத்துவதற்காகவே இப்படிப்பட்ட தகவல்களை சர்வதேச ஊடகங்களுக்கு கசிய விடுகிறார்கள்.
கனடா அரசின் இந்த பொறுப்பற்ற உக்தி இரு நாடுகளின் உறவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவே உதவும். இது இந்தியாவுக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டல்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார். கனடாவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு அமெரிக்காவும் கவலை தெரிவித்திருக்கிறது. மேலும், இந்தியாவில் இருக்கும் கனட வெளியுறத்துறை அதிகாரி நேரில் வரவழைக்கப்பட்டு கண்டனம் பதிவு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.